உலகளாவிய ரீதியில் உணவு நெருக்கடி; ஐ.நா உலக உணவுத்திட்டம்
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து உலகளாவிய ரீதியில் உணவுப்பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளமை உள்ளிட்ட பல்வேறு உதாரணங்களையும் உலக உணவுத்திட்டம் மேற்கோள்காட்டியுள்ளது.
மத்திய கிழக்கில் தீவிரமடைந்துவரும் மோதல்களின் விளைவாக எரிபொருள் மற்றும் உணவுப்பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்வடைந்துவரும் நிலையில், இது இப்பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் உணவுப்பாதுகாப்பின்மையைத் தீவிரப்படுத்தி, நலிவுற்ற மக்களின் பசி நெருக்கடியை மேலும் தீவிரமாக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்பான உலக உணவுத்திட்டம் எச்சரித்துள்ளது.
அதுமாத்திரமன்றி மத்திய கிழக்கில் இடம்பெற்றுவரும் மோதல்களால் பாரியளவிலான இடப்பெயர்வு, உயிரிழப்பு, அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகள் சேதம் என்பன உள்ளடங்கலாக பொதுமக்கள் ஏற்கனவே பல்வேறு வழிகளிலும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவ்வமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
அதேபோன்று இம்மோதலினால் பொருட்களின் விநியோகச்சங்கிலி தடைப்பட்டு, விலைகள் அதிகரிக்கையில், ஏற்கனவே பின்தங்கிய நிலையிலுள்ள குடும்பங்களின் கொள்வனவு சக்தி மேலும் தளர்வடைந்து, அவர்கள் மிக தீவிர உணவுப்பாதுகாப்பான்மை நெருக்கடிக்குள் தள்ளப்படுவர் என உலக உணவுத்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தோடு ஏற்கனவே பல வருடங்களாக உயர்வான உணவுப்பாதுகாப்பின்மை நிலைக்கு முகங்கொடுத்திருந்த லெபனானில் தற்போது அந்நிலை மேலும் தீவிரமடைந்துள்ளமை, ஏற்கனவே பொருளாதாரத் தளர்வு, உயர் பணவீக்கம், உள்நாட்டு நாணயப்பெறுமதி வீழ்ச்சி போன்ற அழுத்தங்களுக்கு முகங்கொடுத்திருந்த ஈரான் தற்போது மேலும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளமை, உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து உலகளாவிய ரீதியில் உணவுப்பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளமை உள்ளிட்ட பல்வேறு உதாரணங்களையும் உலக உணவுத்திட்டம் மேற்கோள்காட்டியுள்ளது.
மேலும் உலகளாவிய ரீதியில் தீவிரமடையப்போகும் இந்த உணவுப்பாதுகாப்பு நெருக்கடியை கையாள்வதற்குரிய நடவடிக்கைகளைத் தாம் முன்னெடுத்துவருவதாகவும், மிகவும் நலிவுற்ற மற்றும் பின்தங்கிய நிலையிலுள்ள மக்களுக்கு அவசியமான உதவிகளை வழங்கிவருவதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.





