தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றுபட வேண்டிய தருணம் - மே தின உரையில் கஜேந்திரகுமார் எச்சரிக்கை
வரலாற்றில் பதிவான இத்தகைய சம்பவங்களின் விளைவாகவே நாம் தமிழரசுக்கட்சியிலிருந்து விலகி, தமிழ்த்தேசத்தின் இறையாண்மையை மாத்திரம் முன்னிலைப்படுத்தக்கூடிய பாதையைத் தெரிவுசெய்தோம்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எமது மத, கலாசார அடையாளங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டுவருவது ஒன்றோடொன்று தொடர்புபடாத தனித்தனி சம்பவங்கள் அல்ல. மாறாக அவை நீண்டகால அடிப்படையிலான திட்டமிட்ட இனவழிப்பாகும் எனச் சுட்டிக்காட்டிய தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இவ்வேளையில் தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒன்றுபட்டு, ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வராவிட்டால், சிங்கள அரசாங்கம் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளையே முன்னெடுக்குமென எச்சரித்தார்.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்த்தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் 01-05-2026அன்று நல்லூரில் அமைந்துள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் பி.ப 3 மணிக்கு நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் உரையாற்றியபோதே கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு வலியுறுத்தினர்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எமது மத, கலாசார அடையாளங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டுவருவது ஒன்றோடொன்று தொடர்புபடாத தனித்தனி சம்பவங்கள் அல்ல. மாறாக அவை நீண்டகால அடிப்படையிலான திட்டமிட்ட இனவழிப்பாகும்.
வரலாற்றில் பதிவான இத்தகைய சம்பவங்களின் விளைவாகவே நாம் தமிழரசுக்கட்சியிலிருந்து விலகி, தமிழ்த்தேசத்தின் இறையாண்மையை மாத்திரம் முன்னிலைப்படுத்தக்கூடிய பாதையைத் தெரிவுசெய்தோம்.
இத்தகைய பின்னணியை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், இலங்கையில் ஒற்றையாட்சி முறைமை நடைமுறையில் இருக்கும் வரை தமிழ்த்தேசம் அழிக்கப்படுவதை யாராலும் தடுக்கமுடியாது.
ஆனால் அண்மையில் தந்தை செல்வாவின் நினைவு நாள் நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தந்தை செல்வாவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைக்கு முரணாகவே கருத்துரைத்தார். அதன் அர்த்தம் ஜி.எல்.பீரிஸை உரையாற்றுவதற்கு அழைத்த தமிழரசுக்கட்சி தந்தை செல்வாவின் நிலைப்பாட்டிலிருந்து விலகி, ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்கிறது என்பதேயாகும்.
இவ்வேளையில் தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒன்றுபட்டு, ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வராவிட்டால், சிங்கள அரசாங்கம் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளையே முன்னெடுக்கும் என்றார்.





