அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையிலான குழு டில்லி விஜயம்
உலக உணவு இந்தியா - 2025 நிகழ்வின் ஒரு பகுதியாக, தொழில் சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் அவர் கலந்துரையாடினார்.
வர்த்தகம், வர்த்தகத்துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சர் வசந்த சமரசிங்க, அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலேந்திரராஜா உள்ளிட்ட குழுவினருடன் கடந்த 24 – 26 வரை டில்லிக்கு விஜயம் செய்து உலக உணவு இந்தியா நிகழ்வில் கலந்துகொண்டார்.
இவ்விஜயத்தின்போது, அமைச்சர் வசந்த சமரசிங்க, இந்திய உணவுப் பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் சிராக் பஸ்வான் மற்றும் கூட்டுறவுத் துறை இணையமைச்சர் முரளீதர் மோஹோல் ஆகியோருடன் சந்திப்புகளை நடத்தினார்.
இந்தச் சந்திப்புகளில் உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு மேம்பாடு மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், இரு நாடுகளுக்கும் பொதுவான ஆர்வம் உள்ள மற்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த விஜயத்தின்போது, 'உணவுப் போக்குவரத்து முறை மாற்றத்திற்கான ஒரு வினையூக்கியாக உணவு இழப்பு மற்றும் வீணாதல்' என்ற தலைப்பிலான கருப்பொருள் அமர்வில் அமைச்சர் உரையாற்றினார்.
இதில் இலங்கையின் நிலைப்பாடுகளைப் பகிர்ந்துகொண்ட அவர், உணவு வீணாதல் சவால்களை, உணவு அமைப்புகளின் நிலைத்தன்மை மற்றும் மீள்திறனை கூட்டாக அணுகுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
நிகழ்வில் மேலும் உரையாற்றிய அமைச்சர், தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் மற்றும் தேசிய விவசாயக் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட் ஆகியவற்றின் நிர்வாக பணிப்பாளர்களையும் சந்தித்தார்.
வசாயப் பொருட்களின் ஏற்றுமதி மற்றும் சந்தைப்படுத்தல் வாய்ப்புகள், திறன் மேம்பாடு, மற்றும் கூட்டுறவு மாதிரிகள், விநியோகச் சங்கிலி மேலாண்மை மற்றும் பொருட்கள் வர்த்தகம் ஆகியவற்றில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வது குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.
மேலும், முன்னணி விவசாய வணிகம் மற்றும் உணவு நிறுவனங்களின் தலைமைச் செயற்பாட்டு அதிகாரிகளுடனும் அமைச்சர் கலந்துரையாடினார். உலக உணவு இந்தியா - 2025 நிகழ்வின் ஒரு பகுதியாக, தொழில் சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் அவர் கலந்துரையாடினார்.
இது உணவுப் பதப்படுத்துதல், விவசாயம் மற்றும் தொடர்புடைய துறைகளில் பங்களிப்புகள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றங்களை ஆராய்வதற்கான தளமாக அமைந்தது.
இந்த விஜயம், பொருளாதார ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்தவும், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டில் புதிய கூட்டாண்மை வழிகளை ஆராயவும் இரு நாடுகளின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.





