எரிபொருள் விலையேற்றத்தால் காய்கறிகளின் வருகை 50 சதவீத வீழ்ச்சி
கொள்வனவாளர்கள் வராத காரணத்தினால், பொதுவாக மாலை வரை நீடிக்கும் பொருளாதார மையங்களின் வர்த்தக நடவடிக்கைகள் தற்போது நண்பகல் 12 மணிக்கே நிறைவடையும் சூழல் உருவாகியுள்ளது.
எரிபொருள் விலையேற்றம் காரணமாக நாட்டின் பிரதான பொருளாதார மையங்களுக்கு நாள்தோறும் வரும் காய்கறிகளின் அளவு 50 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது.
இது குறித்து தம்புள்ளை விசேட பொருளாதார மையத்தின் வர்த்தக சங்கத் தலைவர் சி.ஏ.சிறிவர்தன கருத்துத் தெரிவிக்கையில்,
போக்குவரத்துச் செலவு அதிகரித்துள்ள நிலையில், காய்கறிகளுக்கான மொத்த விற்பனை விலையும் பெருமளவு சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இதே காலப்பகுதியில் கெப்பெட்டிபொல பொருளாதார மையத்திற்கு நாள் ஒன்றுக்கு 5.5 இலட்சம் கிலோ முதல் 6 இலட்சம் கிலோ வரை காய்கறிகள் வந்த நிலையில், தற்போது அது வெறும் 1.5 இலட்சம் கிலோவாக குறைவடைந்துள்ளது.
கொழும்பு போன்ற தொலைதூரப் பகுதிகளில் இருந்து பொருளாதார மையங்களுக்கு வரும் மொத்த வியாபாரிகளின் வருகை பெருமளவு குறைந்துள்ளது. மேலும் எரிபொருள் செலவைச் சமாளிக்க முடியாமல், இரண்டு அல்லது மூன்று வியாபாரிகள் ஒன்றிணைந்து ஒரு லொறியில் காய்கறிகளை ஏற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிக வாடகை கொடுத்து காய்கறிகளை எடுத்துச் சென்றாலும், அவற்றைச் சந்தையில் விற்பனை செய்வதில் கடும் சவால்களை எதிர்கொள்வதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
குறிப்பாக 'பட்டா', 'பொலிரோ' போன்ற சிறிய ரக லொறிகளில் வரும் சிறு வியாபாரிகளின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்துள்ளது. எரிபொருளுக்காக அதிக தொகையைச் செலவிடுவதால், நுகர்வோருக்கு விற்கப்படும் காய்கறிகளின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். கொள்வனவாளர்கள் வராத காரணத்தினால், பொதுவாக மாலை வரை நீடிக்கும் பொருளாதார மையங்களின் வர்த்தக நடவடிக்கைகள் தற்போது நண்பகல் 12 மணிக்கே நிறைவடையும் சூழல் உருவாகியுள்ளது.
நேற்றுமுன்தினம் (08) தம்புள்ளை மத்திய நிலையத்துக்கு 15 இலட்சம் கிலோ காய்கறிகள் வந்தன. இருப்பினும், எரிபொருள் நெருக்கடியால் மொத்த வியாபாரிகளின் வருகை பாதியாகக் குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலையில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் நாட்டின் ஒட்டுமொத்த விவசாய விநியோக சங்கிலியையும் முடக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதை இந்தத் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன என்றார்.





