ஐந்து அரச வைத்தியசாலைகளில் கதிர்வீச்சு சிகிச்சை இடைநிறுத்தப்படும் அபாயம்
பட்டியலிடப்பட்டுள்ள அநுராதபுரம், பதுளை உள்ளிட்ட ஐந்து வைத்தியசாலைகளிலும் கோபால்ட் 60 என்னும் கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரத்தின் மூலமே நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது.
கதிர்வீச்சு இயந்திரங்களை கொள்வனவு செய்யும் விடயத்தில் சுகாதார அமைச்சு அசமந்தமாக செயற்படுவதால் அநுராதபுரம், பதுளை உள்ளிட்ட ஐந்து அரச வைத்தியசாலைகளில் புற்றுநோயாளர்களுக்கான கதிர்வீச்சு சிகிச்சை சேவைகள் இடைநிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத் தலைவர் சானக்க தர்மவிக்ரம எச்சரித்துள்ளார்.
வைத்தியசாலைகளில் உருவாகியுள்ள நெருக்கடி தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் .
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
புற்றுநோயாளர்களுக்கான சிகிச்சை சேவைகளை மேம்படுத்தும் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையாக 5 லீனியர் ஒக்சிலேட்டர் இயந்திரங்களை கொள்வனவு செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. குறித்த திட்டத்துக்கமைய அநுராதபுரம், பதுளை , குருநாகல், அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய வைத்தியசாலைகளுக்கு மேற்படி கதிர்வீச்சு இயந்திரங்களை வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இவ்வருடம் ஜனவரி மாதம் இயந்திர கொள்வனவுக்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்திருந்ததுடன், அதற்காக சுமார் 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. கடனுதவி திட்டத்துக்கமைய இந்திரங்களை கொள்வனவு செய்வதற்கு அவசியமான தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் அனுமதி பத்திரம் இதுவரை உரிய தரப்பினரால் வழங்கப்பட வில்லை. இதனால் கடன் உதவியை பெற்றுக்கொள்ளும் செயன்முறையும் தாமதமடைந்துள்ளது.
பட்டியலிடப்பட்டுள்ள அநுராதபுரம், பதுளை உள்ளிட்ட ஐந்து வைத்தியசாலைகளிலும் கோபால்ட் 60 என்னும் கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரத்தின் மூலமே நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. இவ்வாறான சிகிச்சைகளுக்கு அவசியமான மூலப்பொருட்கள் பற்றாக்குறையாக உள்ளமையால் வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் நோயாளர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
இயந்திரக் கொள்வனவு விடயத்தில் சுகாதார அமைச்சு அசமந்தமாக செயற்படுவதால் அனுராதபுரம், பதுளை உள்ளிட்ட ஐந்து அரச வைத்தியசாலைகளிலும் புற்றுநோயாளர்களுக்கு வழங்கப்படும் கதிர்வீச்சு சிகிச்சை சேவைகள் இடைநிறுத்தப்படும் அபாயம் எழுந்துள்ளது. ஆகையால் சுகாதார அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இது தொடர்பில் விரைந்து அவதானம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.





