சர்ச்சைக்குரிய தீர்மானங்களை எடுப்பதற்கும் பின்வாங்க போவதில்லை: ஜனாதிபதி அநுர
தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துக் கொள்ளும் உரிமை அனைவருக்கும் உண்டு.காணி உரிமை மற்றும் தமது இடங்களில் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு.

தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு சர்ச்சைக்குரிய வகையில் தீர்மானங்களை எடுப்பதற்கும் பின்வாங்க போவதில்லை.பழைய இனவாத கோசங்களுக்கு எதிரான செயற்பாடுகளை மீளப்பெற போவதில்லை.தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துக் கொள்ளும் உரிமை அனைவருக்கும் உண்டு.காணி உரிமை மற்றும் தமது இடங்களில் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு. முற்போக்கான தீர்மானங்களை எடுக்கும் போது இனவாதிகள் கோசமிடுவார்கள். அந்த கோசங்கள் வெற்றிப்பெற இடமளிக்க போவதில்லை.வடக்கை அச்சுறுத்தலான நிலையில் வைத்திருக்கவே தெற்கில் ஒருதரப்பினர் முயற்சிக்கிறார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
உலக தெங்கு தின நிகழ்வுகளுடன் இணைந்த வகையில் 'நாடே சுபீட்சம் – ஆக்கும் விருட்சம் – கற்பகத்தரு வளம்' என்ற வடக்கு தெங்கு முக்கோண தொடக்க விழா 02-09-2025 ஜனாதிபதியின் தலைமையில் புதுக்குடியிருப்பு நகரில் நடைபெற்றது.இந்நிகழ்வில் உரையாற்றுகையில் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியதாவது,
புதுக்குடியிருப்பு பிரதேசமானது பின்தங்கிய நிலையிலும்,கடந்த கால முரண்பாடுகளினால் பாதிக்கப்பட்டது என்பதை அறிவோம்.கடந்த கால மோதல்களினால் இந்த பிரதேச மக்கள் பலவற்றை இழந்துள்ளார்கள்.பிள்ளைகள்,உறவுகள் உட்பட தமது உடமைகளை இழந்தவர்கள் இந்த பிரதேசத்தில் வாழ்கிறார்கள்.
சமீபத்திய தேர்தல்களின் போது நான் வடக்கு மாகாணத்துக்கு வந்து உரையாற்றியிருந்தேன்.மோதல் உட்பட பல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு மீண்டும் சிறந்த வாழ்க்கையை வழங்கும் பொறுப்பு எமக்குண்டு.
நடைபெற்று முடிந்த தேர்தல்களின் போது இந்த பிரதேச மக்கள் எம்மீது நம்பிக்கை கொண்டு முன்னோக்கிய நிலையில் அடியெழுத்து வைத்துள்ளார்கள்.அவர்கள் பலமான முன்னோக்கிய நிலையை ஆரம்பித்துள்ளார்கள்.எம்மீதான மக்களின் நம்பிக்கையை பாதுகாத்து அதனை வெற்றிப்பெறச் செய்வது எமது பொறுப்பாகும்.அதற்கு பல துறைகள் ஊடாக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம்.
முதலாவதாக இந்த பிரதேச மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.காணி உரிமை,மொழி உரிமை,கலாச்சார உரிமை ஆகியன உறுதிப்படுத்தப்படும்.காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நேர்ந்ததென்னவென்பதை அறிந்துக் கொள்ளும் உரிமை அவர்களுக்கு உண்டு.இவையனைத்தையும் அடிப்படை உரிமைகளாக பார்க்கிறோம்.ஆகவே இந்த உரிமைகளை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம்.
இந்த மக்களை பொருளாதார ரீதியில் மேம்படுத்த வேண்டும்.கடந்த கால மோதல்களினால் இந்த பிரதேச மக்களின் பொருளாதார முன்னேற்றம் முடக்கப்பட்டுள்ளது.ஆகவே அவர்களுக்கு பலமான பொருளாதார சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தின் கடப்பாடாகும்.பொருளாதார முன்னேற்றத்துக்காக தேசிய மட்டத்தில் பல திட்டங்களை ஆரம்பித்துள்ளோம்.
வடக்கு மாகாணத்தை கேந்திரமையமாக கொண்டு புதிய பொருளாதார வலயங்கள்,சுற்றுலாத்துறை மேம்பாடு, விவசாய துறைக்குரிய வசதிகளை வழங்கல் காணப்படுகின்றன. வடக்கு அபிவிருத்தியின் பிரதான அம்சமான தெங்கு அபிவிருத்தி காணப்படுகிறது.இந்த ஆண்டு 16 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தெங்கு பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும்.சுமார் 12 ஆயிரம் குடும்பங்கள் இத்திட்டத்தில் உள்வாங்கப்படுவார்கள்.
கலாசார அடிப்படையில் இரு தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும்.அதற்காக தேசிய தினம் கொண்டாடப்படும்.பிரிந்திருந்த மக்களை ஒன்றிணைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.இப்பகுதியில் வாழ்பவர்களில் பெரும்பாலானோர் யுத்தம் மற்றும் மோதல்களினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பல ஆண்டுகாலமாக ஆயுத முனையில் போராடியுள்ளோம்.அது இந்த நாட்டின் கொடூரமானதாகும்.அதனால் தான் மக்கள் பிரிந்துச் சென்றார்கள்.இந்த சூழலில் இனவாதம் தோற்றம் பெற்றது.
வடக்கிலும்,தெற்கிலும் அதிகாரத்தை கைப்பற்றும் பிரதான வழியாக இனவாதம் காணப்பட்டது.இந்நிலைமையை தான் மக்கள் நடைபெற்று முடிந்த தேர்தல்களில் தோற்கடித்தார்கள். இனவாதிகள் தாம் இழந்த அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற வடக்கிலும், தெற்கிலும் இனவாதத்தை பரப்ப முயற்சிக்கிறார்கள்.திணறுகிறார்கள்.இனவாத அரசியல்வாதிகள் ஒருபோதும் பொதுமக்களுக்கு சேவையாற்றமாட்டார்கள்.
தோல்வியடைந்த சக்திகள் மீண்டும் தலைதூக்க இனவாதம் என்ற ஆயுதத்தை பயன்படுத்துகின்றன.இந்த நாட்டில் இனவாதத்துக்கு இனி இடமில்லை.நாட்டு மக்களும் இனவாதத்தை புறக்கணிக்க வேண்டும்.
வடக்கு தொடர்பில் தெற்கில் ஒரு தரப்பினர் விசேட கவனம் செலுத்தியுள்ளார்கள். யுத்தம் பற்றி தொடர்ந்து பேசுகிறார்கள்.மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள்.கொழும்பில் ஆயுதம் கைப்பற்றல், துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுவதை சாதாரணமாக பார்க்கிறவர்கள், வடக்கில் அவ்வாறு இடம்பெற்றால் அது யுத்தத்துக்கான அறிகுறி என்று குறிப்பிடுகிறார்கள்.
வடக்கில் என்றும் யுத்தம் என்ற அச்சத்தை ஏற்படுத்தவே ஒருசில அரசியல் தரப்பினர் தெற்கில் உள்ளார்கள்.வடக்கு தொடர்பில் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்துகிறார்கள்.வடக்கில் இனி யுத்தம் என்பதொன்று தோற்றம் பெறாது என்ற நிலையில் இருந்துக்கொண்டு செயற்படுகிறோம்.அதுவே எமது பிரதான இலக்கு.
தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு சர்ச்சைக்குரிய வகையில் தீர்மானங்களை எடுப்பதற்கும் பின்வாங்க போவதில்லை.பழைய இனவாத கோசங்களுக்கு எதிரான செயற்பாடுகளை மீளப்பெற போவதில்லை.
தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துக் கொள்ளும் உரிமை அனைவருக்கும் உண்டு.காணி உரிமை மற்றும் தமது இடங்களில் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு. முற்போக்கான தீர்மானங்களை எடுக்கும் போது இனவாதிகள் கோசமிடுவார்கள். அந்த கோசங்கள் வெற்றிப்பெற இடமளிக்க போவதில்லை.
நாட்டு மக்கள் மத்தியில் சட்டவாட்சி தொடர்பில் முரண்பட்ட தன்மை காணப்பட்டது.முறையான செயலொழுங்கு ஊடாக சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம்.பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்காக எடுத்துள்ள முற்போக்கான தீர்மானங்கள் வெற்றிப்பெறச் செய்ய அனைவரது ஒத்துழைப்பும் அவசியமாகும்.தனிப்பட்ட முறையில் எதனையும் செய்ய முடியாது. அனைவரும் ஒன்றிணைந்தால் மாத்திரமே நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.வடக்கு,கிழக்கு, தெற்கு என்று வேறுபடாமல் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுகிறேன் என்றார்.