நாட்டில் தொழில்பிரச்சினை தீவிரம் எவ்வாறு கடன்களை மீளச்செலுத்துவது ? எதிர்க்கட்சித்தலைவர் கேள்வி
மக்களுக்கு வழங்கிய செல்வந்த நாடு - அழகிய வாழ்க்கை வாக்குறுதி திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.

நாட்டில் தீவிரமடைந்துள்ள தொழின்மை பிரச்சினைக்கு தீர்வு காணாமல் 2028 ஆண்டு முதல் எவ்வாறு அரசமுறை கடன்களை மீள செலுத்துவது. மக்களுக்கு வழங்கிய செல்வந்த நாடு - அழகிய வாழ்க்கை வாக்குறுதி திட்டம் எப்போது அமல்படுத்தப்படும். ஜனாதிபதி உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 07-08-2025 அன்று இடம்பெற்ற நாட்டின் தற்போதைய பொருளாதாரம் மீதான ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க பல்வேறு தரப்பினர் முயற்சிப்பதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டிய அவசியம் எதிர்க்கட்சிகளுக்கு கிடையாது. அரசாங்கத்தின் பலவீனத்தை வெளிப்படுத்தும் போது அதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு என்னிடம் 61 முறை குறிப்பிட்டார்கள். மக்களாணையுடன் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் என்றும் உறுதியாகவுள்ளேன்.சூழ்ச்சியின் ஊடாக அதிகாரத்தை கைப்பற்ற வேண்டிய தேவை எமக்கு கிடையாது. ஜனநாயக ரீதியாகவே ஆட்சிக்கு வர முயற்சிப்போம்.
பாரம்பரியமான எதிர்க்கட்சிகளை போன்று நாங்கள் செயற்படவில்லை. பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுத்த சிறந்த திட்டங்களுக்கு நாங்கள் நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம். நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் நாங்கள் ஒருபோதும் செயற்படவில்லை.
நாட்டில் பொருளாதார நிலைமை தொடர்பில் ஜனாதிபதி சிறந்த திட்டங்களை முன்வைத்து உரையாற்றுவார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்.ஆனால் அவ்வாறொன்றும் இடம்பெறவில்லை. நாட்டில் தொழிலின்மை பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. வேலையின்மை பிரச்சினைக்கு தீர்வு காணாமல் 2028 ஆம் ஆண்டு முதல் எவ்வாறு அரசமுறை கடன்களை மீள செலுத்துவது.
மக்களுக்கு வழங்கிய செல்வந்த நாடு - அழகிய வாழ்க்கை வாக்குறுதி திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி உண்மையை வெளிப்படுத்த வேண்டும். ஜனாதிபதியின் கருத்துக்கள் ஒரு கட்டமைக்கப்பட்ட பொருளாதார வரைபடத்தை முன்வைப்பதற்குப் பதிலாக டிசம்பரில் அரசியல் சதித்திட்டங்களில் கவனம் செலுத்தியதாக காணப்பட்டது.
இது நெருக்கடியின் போது ஒரு அரச தலைவரிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டதல்ல, அழுத்தத்தின் கீழ் செய்யப்பட்ட உரையாகவே காணப்பட்டது.அமெரிக்காவின் வரிகளை 44 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைத்த போதிலும், ஏற்றுமதி மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க அரசாங்கத்திடம் ஒரு உறுதியான திட்டம் இல்லை.
விரைவான ஏற்றுமதி வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வை அல்லது நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கான உத்திகள் இல்லை.ஜனாதிபதி தான் இனி ஒரு எதிர்க்கட்சி எம்.பி. அல்ல என்பதை மறந்துவிட்டதாகத் தெரிகிறது. அவரது உரையில் நாட்டிற்கு இப்போது தேவைப்படும் பொருளாதார பகுப்பாய்வு குறிப்பிடப்படவில்லை என்றார்.