எக்னெலியகொடவின் மனைவியின் பகிரங்க வேண்டுகோள்
வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவின் 29 ஆவது கூட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 22 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 3 ஆம் திகதி வரை ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்தி, இவ்வாண்டு இறுதிக்குள் முடிவுறுத்தும்படி இலங்கையிடம் வலியுறுத்துமாறு வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவிடம் பிரகீத்தின் மனைவி சந்தியா எக்னெலிகொட வேண்டுகோள்விடுத்துள்ளார்.
வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவின் 29 ஆவது கூட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 22 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 3 ஆம் திகதி வரை ஜெனீவாவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தின்போது சகல நபர்களையும் வலிந்து காணாமலாக்கப்படல்களிலிருந்து பாதுகாப்பதற்கான சர்வதேச பிரகடனத்தின் கீழ் இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடுகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பது பற்றி அக்குழுவினால் மீளாய்வு செய்யப்படும்.
இந்நிலையில் வலிந்து காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட, பிரகீத் காணாமலாக்கப்பட்ட விவகாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நீதிமன்ற வழக்கு விசாரணை என்பன பற்றிய முழுமையான விபரங்களை அக்குழுவுக்கு அனுப்பிவைத்துள்ளார்.
நீதிக்கான தனது போராட்டத்தைத் தமக்கான அச்சுறுத்தலாகக் கருதிய சிலர் நீதிமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தன்னை அச்சுறுத்தியதாக வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவுக்கு அனுப்பிவைத்துள்ள ஆவணங்களில் சுட்டிக்காட்டியுள்ள சந்தியா எக்னெலிகொட, தான் எத்தனை சவால்களைக் கடந்திருந்தாலும், எதிர்வருங்காலங்களில் இன்னமும் பல சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தாலும், பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறுகோரி தான் முன்னெடுத்துவரும் போராட்டம் தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.