புதிய அரசியலமைப்பு பணிகள் வினைத்திறனாக முன்னெடுப்பு: நீதியமைச்சர்
புதிய அரசியலமைப்புக்கான பணிகளை அவசரமாக முன்னெடுக்க முடியாது.ஏனெனில் சகல தரப்பினரது பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் யாப்புருவாக்க பணிகள் அமைய வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளோம்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்.யாப்புருவாக்க பணிகள் வினைத்திறான முறையில் மேற்கொள்ளப்படுகிறது. இவ்விடயத்தில் எதிர்க்கட்சிகள் கலக்கமடைந்துள்ளமை ஆச்சரியமாகவுள்ளதென நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷ நாணயக்கார தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, “ அரசாங்கத்தின் தேவைகளுக்காகவே கடந்த காலங்களில் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டன. அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு,இலங்கையின் அரசியலமைப்பு பல்வேறு காரணிகளால் பிரச்சினைக்குரியதாக உள்ளது.
மக்களின் அபிலாஷைகளுடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்று நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மறக்கவில்லை. புதிய யாப்புருவாக்கத்துக்கான பணிகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அரசியலமைப்புடன் தொடர்புடைய பல விடயங்கள் இன்றும் பிரச்சினைக்குரியதாக காணப்படுகின்றன.அவற்றுக்கு நிர்வாக கட்டமைப்பின் ஊடாக தீர்வு காண்பதற்கு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
புதிய அரசியலமைப்புக்கான பணிகளை அவசரமாக முன்னெடுக்க முடியாது.ஏனெனில் சகல தரப்பினரது பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் யாப்புருவாக்க பணிகள் அமைய வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளோம்.
இவ்வாறான பின்னணியில் தான் எதிர்க்கட்சிகள் புதிய யாப்புருவாக்கத்துக்கு பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். எதிர்க்கட்சியினர் இவ்விடயத்தில் கலக்கமடைந்துள்ளார்கள் என்பது தெரியவில்லை.
எதிர்க்கட்சிகளின் அரசியல் பேசுபொருளுக்காக அரசியலமைப்பு பணிகளை முன்னெடுக்க முடியாது. மக்களின் அவசியத்தை கருத்திற்கொண்டே அதன் பணிகளை மேற்கொள்ள முடியும்.மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய புதிய அரசியலமைப்பினை நிச்சயம் உருவாக்குவோம்” என்றார்.





