9 நாடுகளின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு இலவச சுற்றுலா விசா
கடந்த 2025 ஜூலை 21 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஏற்கனவே கொள்கை ரீதியான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இலங்கையின் சுற்றுலாத் துறையை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில், தெரிவுசெய்யப்பட்ட 39 நாடுகளைச் சேர்ந்த கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு 06 மாத காலத்திற்கு இலவச சுற்றுலா விசா வழங்குவதற்கான சட்ட வரைவுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கைக்கு வருகை தரும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, 39 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு எவ்விதக் கட்டணமும் இன்றி இலவச விசா வழங்குவதற்கான திட்டமொன்றுக்கு கடந்த 2025 ஜூலை 21 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஏற்கனவே கொள்கை ரீதியான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அதற்கமைய, குறித்த திட்டத்தைச் சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்துவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் விதிகளுக்கு அமைய, சட்ட வரைஞரால் முறையான வரைவுக் கட்டளைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ள கட்டளைகளை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு தற்போதைய அமைச்சரவை கூட்டத்தில் முழுமையான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இத்திட்டம் விரைவில் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவுஸ்திரேலியா, ஆஸ்திரியா, பஹரைன், பெலரூஸ், பெல்ஜியம், கனடா, சீனா, செக் இராச்சியம், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மன், இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், இஸ்ரேல், இதாலி, ஜப்பான், கசகஸ்தான், குவைத், மலேசியா, நேபாளம், நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, ஓமான், பாக்கிஸ்தான், போலந்து, கட்டார், ரஷ்யா, சவுதி, தென் கொரியா, ஸ்பெயின், சுவீடன், சுவிட்ஸர்லாந்து, தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு இராச்சியம், பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கே இவ்வாறு இலவச வீசா வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





