இஸ்ரேலில் முறையான விசாக்களின்றி வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் அவதானம்
இலங்கை பாராளுமன்ற உத்தியோகத்தர்களுக்கு இஸ்ரேலில் பயிற்சி வாய்ப்புகளை வழங்குவது தொடர்பிலும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் முறையான விசாக்கள் இன்றி வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பான விவகாரம், இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நிறுவப்பட்ட பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் இரண்டாவது கூட்டத்தின் போது, அண்மையில் கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாராளுமன்ற மட்டத்திலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இந்த சங்கத்தின் கூட்டத்தின் போது, இந்த நிலைமை இலங்கையர்களை மாத்திரமன்றி, ஏனைய வெளிநாட்டவர்களையும் பாதிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது.
இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளமைக்கமைய, இந்த விடயம் மேலதிக பரிசீலனைக்காக இஸ்ரேலிய பாராளுமன்றத்தின் வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பான குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அக்குழு தனது அடுத்த அமர்வில் இது குறித்து ஆராயவுள்ளது.
மேலும், இலங்கை பாராளுமன்ற உத்தியோகத்தர்களுக்கு இஸ்ரேலில் பயிற்சி வாய்ப்புகளை வழங்குவது தொடர்பிலும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில், இஸ்ரேல் - இலங்கை நட்புறவு சங்கத்தின் தலைவர் சேகா மெலாக்கு, இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள், இஸ்ரேலிய பாராளுமன்றத்தின் வெளிவிவகாரக் கொள்கை பிரிவின் பிரதிநிதிகள் மற்றும் இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்தின் பிரதித் தலைவர் ஹேமந்த ஏக்கநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.





