2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன்சார்ந்ததாக அமையும் - ஜனாதிபதி அநுரகுமார
பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை தமக்கு கிடைத்துள்ளதா என்று மக்கள் கருதுகிறார்கள்.
பொருளாதார முன்னேற்றத்தின் உச்ச பயனை நாட்டு மக்களுக்கு அபிவிருத்திகள் ஊடாக வழங்குவேன். 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன்சார்ந்ததாக அமையும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் புதிய கட்டட நிர்மாண பணிகளை நேற்று புதன்கிழமை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், பொருளாதார மீட்சி மற்றும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது அரசாங்கத்தின் பிரதான இலக்காகும். வெளியக தாக்கங்கள் ஏதேனும் போது அவை உள்ளக மட்டத்தில் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும், அதனைக் கொண்டு அரசாங்கத்தை எவ்வாறு தாக்கலாம் என்று ஒரு தரப்பினர் காத்துக்கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகாலமாக அவர்கள் அவ்வாறே செயற்படுகிறார்கள்.
2022 ஆம் ஆண்டு பொருளாதார பாதிப்பு தான் அரசியல் மற்றும் சமூக கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆகவே பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான கடப்பாடு எமக்கு காணப்படுகிறது.
தேசிய பொருளாதாரம் குறித்து தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் வரவேற்கத்தக்க நிலைப்பாடு காணப்படுகிறது. நெருக்கடியான சூழலுக்கு மத்தியில் எடுத்த கடுமையான தீர்மானங்களினால் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்துள்ளது.
பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை தமக்கு கிடைத்துள்ளதா என்று மக்கள் கருதுகிறார்கள். அது நியாயமானதே, பொருளாதார முன்னேற்றத்தின் ஊடாக தமக்கு என்ன பயன் கிடைத்துள்ளது என்பதையே மக்கள் ஆராய்வார்கள். ஆகவே அரச இயந்திரம் அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
பொருளாதார முன்னேற்றத்தின் பயன் அபிவிருத்தி திட்டங்கள் ஊடாகவே மக்களுக்கு வழங்கப்படு;ம். வாழ்க்கைத் தரம் உயர்வு தொடர்பில் மக்கள் மத்தியில் இருந்தும் செயற்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
பொருளாதார முன்னேற்றத்தின் உச்ச பயனை நாட்டு மக்களுக்கு அபிவிருத்திகள் ஊடாக வழங்குவேன். 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன்சார்ந்ததாக அமையும் என்றார்.





