தமிழ்த்தேசிய கட்சிகள் மத்தியில் பொது இணக்கப்பாட்டுடான ஒற்றுமை அவசியம்: கஜேந்திரகுமார்
மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் என அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை வாசித்து ஆராயும் பணிகள் முடிவுறும் தருவாயில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
தமிழ்த்தேசிய கட்சிகளுடன் கலந்துரையாடாமல் 'ஏக்கிய இராச்சிய' புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிப்பதற்கு தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபடவேண்டுமென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை - சுவிட்ஸர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்துடன் கூட்டிணைந்து சுவிட்ஸர்லாந்து அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அந்நாட்டின் கூட்டாட்சி அரசியல் முறைமை மற்றும் தேசிய ஒருமைப்பாடு வலுவாக்கம் என்பன பற்றி இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்குத் தெளிவூட்டும் வகையிலான செயலமர்வொன்று கடந்த செப்டெம்பர் மாதம் 14 - 21 ஆம் திகதி வரை சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்றது.
அச்செயலமர்வின் ஓரங்கமாக இலங்கையின் ஆளும், எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அங்கு சென்ற 13 உறுப்பினர்களுடனான மக்கள் சந்திப்பொன்று நடைபெற்றது.
அச்சந்திப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துரைத்த தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி நிஹால் அபேசிங்க, 2015 - 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவு மீளக்கொண்டுவரப்படும் எனவும், அதில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் என அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை வாசித்து ஆராயும் பணிகள் முடிவுறும் தருவாயில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் கருத்துரைத்த கஜேந்திரகுமார், தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பங்கேற்பின்றி 'ஏக்கிய இராச்சிய' அரசியலமைப்பையே அரசாங்கம் கொண்டுவருவதற்கு முயற்சி செய்வதாகவும், அதனை முறியடிப்பதற்குத் தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒன்றிணையவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
குறிப்பாக தற்போதைய அரசாங்கம் பொருளாதார மேம்பாடு உள்ளடங்கலாக தேர்தலின்போது வழங்கிய பெரும்பாலான வாக்குறுதிகளை இன்னமும் நிறைவேற்றவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், 'எனவே அவர்களிடம் உள்ள பெரும்பான்மைப் பலத்தைப் பயன்படுத்தி புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் ஆகிய இரண்டு விடயங்களையே இப்போது நிறைவேற்றமுடியும். அதனைச் செய்யாமல், அவர்களால் அடுத்த தேர்தலை எதிர்கொள்ளமுடியாது. ஆகவே அரசாங்கம் இவ்விரண்டு விடயங்களையும் செய்துதான் ஆகவேண்டும்' எனத் தெரிவித்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் அதற்குரிய ஆக்கபூர்வமான அழுத்தங்களை வழங்குவதை விடுத்து, அரசாங்கத்துக்கு சாதகமான முறையிலேயே தமிழரசுக்கட்சி செயற்பட்டுவருவதாகக் குற்றஞ்சாட்டிய கஜேந்திரகுமார், இவ்விடயத்தில் பாராளுமன்றத்தில் தமிழ்த்தேசிய கட்சிகள்வசம் 10 உறுப்பினர்கள் எனும் பெரும்பான்மையைக் காண்பிக்கும் வகையில் சகல கட்சிகளும் ஒற்றுமைப்படவேண்டும் என்றார்.





