எந்த விசாரணைகளுக்கும் முகம்கொடுக்கத் தயார்: சஜித் பிரேமதாச
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் செயற்படுத்தப்பட்ட செவன மாதிரி கிராம வீட்டுத்திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக தேசிய வீடமைப்பு அதிகாரசபை அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும்,இந்த முறைகேடு குறித்து அமைச்சு மட்டத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ நடைபெற்ற அமைச்சரவை ஊடகவியாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டார்.

நாட்டுக்கான அபிவிருத்தி பணிகளை செய்ததும் ஒரு குற்றமாக கருதும் தரப்பினர் இந்த நாட்டில் உள்ளார்கள். அரசாங்கத்திலும் உள்ளார்கள்.சட்டத்தின் பிரகாரமே வீடமைப்பு அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டேன். அரசாங்கம் முன்னெடுக்கும் விசாரணைகளுக்கும் முகங்கொடுப்பதற்கு தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் செயற்படுத்தப்பட்ட செவன மாதிரி கிராம வீட்டுத்திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக தேசிய வீடமைப்பு அதிகாரசபை அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும்,இந்த முறைகேடு குறித்து அமைச்சு மட்டத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ நடைபெற்ற அமைச்சரவை ஊடகவியாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டார்.
இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அமைச்சராக பதவி வகித்த காலத்தில் துரிதகரமான வீடமைப்பு அபிவிருத்தி மற்றும் மத தலங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டன என்பதை குறிப்பிட வேண்டும்.சட்டத்தின் பிரகாரமே நான் அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டேன்.
நாட்டுக்கான அபிவிருத்தி பணிகளை செய்ததும் ஒரு குற்றமாக கருதும் தரப்பினர் இந்த நாட்டில் உள்ளார்கள்.அரசாங்கத்திலும் உள்ளார்கள். நாட்டினதும், நாட்டு மக்களினதும் நலனுக்காகவே செயற்பட்டேன்.
கடந்த கால அரசாங்கங்களின் அனைத்து செயற்பாடுகளையும் முறையற்றது என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு செயற்படுகிறது. நாட்டு மக்களின் அபிவிருத்திக்காக முன்னெடுக்கும் சகல திட்டங்களுக்கும் எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். நாட்டு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இந்த அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரையில் எடுக்கவில்லை.கடன் பெறுவதை மாத்திரம் பிரதான கொள்கையாகக் கொண்டு செயற்படுகிறது என்றார்.