இஸ்ரேலில் அல் ஜசீராவின் செயல்பாடுகளை நிறுத்த நெதன்யாகுவின் அமைச்சரவை முடிவு
"அல் ஜசீரா என்ற தூண்டுவிடுகிற தொலைக்காட்சி இஸ்ரேலில் மூடப்படும்," என்று அவர் மேலும் கூறினார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை யூத அரசில் அல் ஜசீராவின் நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்தது. கத்தார் தொலைக்காட்சி நெட்வொர்க்கான அல் ஜசீரா "தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்" என்று இஸ்ரேலிய அமைச்சரவை வலியுறுத்தியதாக செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
"அல் ஜசீரா நிருபர்கள் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவித்துள்ளனர். இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டுள்ளனர். ஹமாசின் ஊதுகுழலை எங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது" என்று நெதன்யாகு கூறினார்.
"அல் ஜசீரா என்ற தூண்டுவிடுகிற தொலைக்காட்சி இஸ்ரேலில் மூடப்படும்," என்று அவர் மேலும் கூறினார்.
"இஸ்ரேலின் தகவல் தொடர்பு அமைச்சர் உடனடியாக செயல்படுவதற்கான ஆணையில் கையெழுத்திட்டார்" என்று அரசாங்க அறிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் இந்த நடவடிக்கையை ஆதரித்த ஒரு சட்டமன்ற உறுப்பினர், அல் ஜசீரா இந்த முடிவை நீதிமன்றத்தில் சவால் செய்யக் கூடும் என்று கூறினார்.
இந்த உத்தரவின்படி, இஸ்ரேலில் உள்ள அல் ஜசீராவின் அலுவலகங்கள் மூடப்படும். அதன் ஒளிபரப்பு உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும். அதன் சேனல் கேபிள் மற்றும் செயற்கைக்கோள் நிறுவனங்களிடமிருந்து துண்டிக்கப்படும். மேலும், இந்த நடவடிக்கையின்படி நிறுவனத்தின் இணையதளங்கள் முடக்கப்படும்.