சதித்திட்டங்களால் அரசாங்கத்தினை வீழ்த்துவதற்க இடமளிக்கப்போவதில்லை: ஜனாதிபதி அநுர திட்டவட்டம்
சதித்திட்டம் மேற்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மையற்றதாக்க செயற்பட வேண்டாம்.

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரநிலைக்கு கொண்டுவரும் சரியான பாதையில் அரசாங்கம் பயணித்துக்கொண்டிருக்கிறது.நாட்டை நல்ல நிலைக்கு கொண்டுவருவதே எமது நோக்கம். அதற்காக எதிர்க்கட்சிகளும் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். நாங்கள் அரசியல் செய்வோம். எங்களின் குறைபாடுகள் இருந்தால் விமர்சிக்கலாம். அதில் எந்த பிரச்சினையும் இல்லை.
ஆனால் சதித்திட்டம் மேற்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மையற்றதாக்க செயற்பட வேண்டாம். நாங்கள் முன்னெடுத்துச்செல்லும் பயணத்தை தடுப்பதற்கு யாராவது சதித்திட்டம் மேற்கொண்டால் அந்த சதித்திட்டத்தை தோற்கடிக்க முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்போம்.
அதற்கு இடமளிக்க முடியாது. எமது பொருளாதாரம் பேரழிவில் சிக்கிவிடும் என எதிர்க்கட்சி கொடூரமான கனவு காண்கிறது. அந்த பேரழிவு கனவு நனவாகாது. எமது அரசாங்கத்தை ஒருபோது வீழ்த்த முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 07-08-2025அன்று இடம்பெற்ற நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேலை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வரிக் கொள்கை குறித்து இதுவரை எந்தவித இறுதி இணக்கப்பாட்டுக்கு வரவில்லை.அதுதொடர்பான ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. அமெரிக்கா இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட பரஸ்பர வரி விகிதத்தை 20 சதவீதமாகக் குறைத்துக்கொள்ள முடியுமாகியுள்ளது.
எதிர்காலத்தில் அதை மேலும் குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதுவரை நடைபெற்ற கலந்துரையாடல்களில் சில இணக்கப்பாடுகளுக்கு வந்துள்ளோம். அதன் விளைவாக, வரி விகிதத்தை 20 வீதம் வரை குறைத்துக்கொள்ள முடியுமாகி இருக்கிறது. இந்த கலந்துரையாடலுக்கு செல்ல முன்னர் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடியே இதற்கு சென்றோம்.அதனால் அமெரிக்காவின் வரி கொள்கையை அடிப்படையாக்கொண்டு அரசாங்கத்தை வீழ்த்தலாம் என நினைத்திருந்தால், தற்போது அது முடிவடைந்துள்ளது.
அத்துடன் எமக்கு வெளிவாரியாக 3சவால்கள் இருந்தன. அதில் ஒன்றுதான் அமெரிக்காவின் தீர்வை வரி அதிகரிப்பு. இது நாங்கள் எதிர்பார்த்த ஒன்று அல்ல. இந்த அச்சுறுத்தலில் இருந்து நாங்கள் மீளவேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை தற்போது நாங்கள் செய்துவருகிறோம். அடுத்த சவால்தான் சர்வதேச நாணய நிதியம். நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் தொடர்பில் சில பிழையான, திரிபுபடுத்தப்பட்ட தகவல்களை தெரிவித்து வந்தார்கள். நாணய நிதியத்துடனான மீளாய்வுகள் பிற்படுத்தப்படவில்லை. 3ஆம் கட்ட மீளாய்வு மாத்திரம் சற்று பிற்பட்டது. அது செப்டம்பரில் இடம்பெற வேண்டியதாகும்.
என்றாலும் அந்த காலத்தில் தேர்தல் ஆரம்பித்ததால், தேர்தலுக்கு பின்னர் இந்த கலந்துரையாடலை ஆரம்பிக்க அவர்களே தீர்மாித்தார்கள். அதன் பின்னர் பாராளுமன்ற தேர்தல் ஆரம்பிக்கப்பட்டது. நவம்பர் மாதம் 14ஆம் திகதி தேர்தல் முடிவடைந்தது இரண்டு தினங்களில் 3ஆம் கட்ட மீளாய்வு தொடர்பான பேச்சுவார்தையை நாங்கள் ஆரம்பித்தோம். வரவு செலவு திட்டத்தில் சில விடயங்களை உள்வாங்க இருந்ததால், இதனை அனுமதித்துக்கொள்ள சிறிது காலம் சென்றது.
என்றாலும் நாங்கள் வெற்றிகரமாக இதனை முடித்துக்கொண்டோம். அதேபோல் 4,5ஆவது மீளாய்வு வேலைத்திட்டங்களை உரிய காலத்தில் மேற்கொண்டு கடன் தவணைகளை பெற்றுக்கொண்டாேம். அதனால் நாணய நிதியத்துடன் எமது வேலைத்திட்டம் அவ்வாறே செல்கிறது. அது வீழ்ச்சியடையும் என எதிர்பார்த்திருந்தால், அந்த எதிர்பார்ப்பும் இடம்பெறப்போவதில்லை.
அடுத்து நாங்கள் வெளிவாரியாக எதிர்கொள்ளும் சவால்தாக் ஜீ.எஸ்,பி. வரி சலுகை. 2027இல் எமது ஜீ.எஸ்,பி. வரி சலுகை இணக்கப்பாடு நிறைவடைகிறது. எமது ஏற்றுமதிகளில் நூற்றுக்கு 23வீதம் ஐராேப்பிய ஒன்றியத்துக்கே அனுப்புகிறோம். இந்த நிலையில் ஜீ.எஸ்,பி. வரி சலுகை இல்லாமல்போனால் எமது பொருளாதாரத்துக்கு பாரிய நெருக்கடி ஏற்படுகிறது. அதனால் அதனை தவிர்த்துக்கொள்ள தற்போது கலந்துரையாடி வருகிறோம். அவர்களுடன் ஒரு சில இணக்கப்பாடுகளுக்கு நாங்கள் வந்திருக்கிறோம்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில்லே நாங்கள் இருக்கிறோம். அதேபோன்று நிகழ்நிலை காப்புச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தில் நாங்கள் இருக்கிறோம். அதேபோன்று நாட்டில் மறைக்கப்பட்ட கொலைகள், குற்றச்செயல்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இது எமது நிலைப்பாடு. அதனால் ஜீ.எஸ்,பி. வரி சலுகையை பெற்றுக்கொள்ள தேவையான கலந்துரையாடல்களை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறோம். அதனால் ஜீ.எஸ்,பி. வரி சலுகை தொடர்பிலும் யாரும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை.
அதேபோன்று பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த தேவையான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அதனாலே ஒரு வருட காலத்தில் டொலரின் பெறுமதி ஸ்திரத்தன்மையில் வைத்திருப்பது, பொருளாதாரத்தின் முக்கியமான வியமாகும். கடந்த காலங்களில் டொலிர் பெருமதி ஸ்திர நிலையில் இல்லாமல் இருந்ததால், நாளுக்கு நாள் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டு, வந்தது. கருப்பு பொருளாதாரமே இடம்பெற்று வந்தது. இந்தவருடம் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையான 6 மாதங்களே இலங்கை வரலாற்றில் அதிக ஏற்றுமதி பொருளாதாரத்தை ஈட்டிக்கொண்ட மாதங்களாகும்.
இவ்வாறு இருக்கும்போது எப்படி எமது பொருளாதாரம் வீழ்ச்சியடையும். அதேபோன்று சுற்றுலா கைத்தொழிலை எடுத்துக்கொண்டால், கடந்த வருடம் முதல் 6 மாதங்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் நூற்றுக்கு 10வீதம் அதிகரித்துக்கொண்டுள்ளோம். இவ்வாறு எமது பொருளாதாரத்தை பலப்படுத்தி வருகிறோம். அதனால் எமது பொருளாதாரம் பேரழிவில் சிக்கிவிடும் என எதிர்க்கட்சி கொடூரமான கனவு காண்கிறது. அந்த பேரழிவு கனவு நனவாகாது. அதை விட்டுவிடுங்கள். வேறு ஒரு கட்டமைப்பில் அரசியல் செய்யத் தொடங்குங்கள்.
வாகன இறக்குமதி வரையறுக்கப்படாது
வாகன இறக்குமதி தொடர்பில் மாறுப்பட்ட பல விடயங்கள் குறிப்பிடப்படுகின்றன.பொருளாதார உறுதிப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தான் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்க்கப்பட்டன. .இதுவரையான காலப்பகுதியில் வாகன இறக்குமதிக்கு 1068 மில்லியன் டொலர் வரையில் கடன்பற்று பத்திரம் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு டிசெம்பர் காலப்பகுதிக்குள் 1500-1800 மில்லியன் டொலர் வரையில் கடன்பற்று பத்திர விநியோகத்தை அதிகரித்துக் கொள்ள எதிர்பார்த்துள்ளோம். வாகன இறக்குமதி வரையறுக்கப்படாது. இந்த ஆண்டு வாகனம் கொள்வனவு செய்ய முடியாதவர்கள் அடுத்த ஆண்டு வாகனம் கொள்வனவு செய்யலாம். வாகன வரிகள் காலத்துக்கு காலம் மறுசீரமைக்கப்படும். இந்த வருடம் வரி அதிகரிக்கப்படாது.
4.5 ரில்லியன் அரச வருவாய் எதிர்பார்ப்பு
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த போது 4.5 ரில்லியன் வருவாய் எதிர்பார்த்தோம். பலர் இதனை விமர்சித்தார்கள். முடியாது என்றார்கள். மதுவரி திணைக்களம்,சுங்கத் திணைக்களம், தேசிய இறைவரித் திணைக்களம் ஆகிய பிரதான வரி துறைகளை சிறந்த முறையில் மறுசீரமைத்தால் இந்த வருவாயை அடையலாம் என்பதில் உறுதியாக இருந்தோம்.
நிறைவடைந்த காலப்பகுதியில் இந்த மூன்று பிரதான அரச துறைகளின் வரி வருமானம் உயர்வடைந்துள்ளது. வரி வலைப்பின்னலை விரிவுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பல பில்லியன் ரூபாய் வரி செலுத்தாத 200 பேரின் பெயர் விபரங்கள் என்னிடம் உள்ளன. இவர்களிடமிருந்து முறையாக வரி அறவிட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இரண்டு பிரதான அரச வங்கிகளிடமிருந்து கடன் பெற்றுக்கொண்டு அவற்றை மீள செலுத்தாத 50 பேருக்கும் அதிகமானவர்கள் இருக்கிறார்கள். இதில் அரசியல்வாதிகளும் இருக்கின்றனர்.இவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். வரி வலையமைப்பை விரிவுப்படுத்தி 4.5 ரில்லியன் ரூபாய் வரி வருமானத்தை நிச்சயம் எம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.
அதனால் பொருளாதார ஸ்திரமற்ற நிலை என தெரிவித்து இந்த அரசாங்கத்தை வீழ்த்த முடியாது. கடந்த காலங்களில் அரசியல் ரீதியில் அரசாங்கம் வீழ்த்தப்பட்டிருக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறியதன் மூலம் அரசாங்கம் மாறியிருக்கிறது.அவ்வாறு இல்லாவிட்டால் தேர்தல் மூலம் அரசாங்கம் மாறி இருக்கிறது. ஆனால் இந்த மூன்று விடயங்களாலும் எமது அரசாங்கத்தை வீழ்த்த முடியாது. தேர்தல் மூலம் விழுத்தினால் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
சுங்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க குழுவொன்று நிதி அமைச்சினால் நியமிக்கப்பட்டது. குழுவின் அறிக்கை எனக்கு கையளிக்கப்பட்டது. தற்போது அந்த அறிக்கையை விசாரணை மேற்கொள்ள குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கையளித்திருக்கிறோம்.இவ்வாறு 13 தடவைகள் நாட்டில் இடம்பெற்றிருக்கின்றன.
புலம்பெயர் தமிழரின் தேவைக்காகவா கைதுகள்?
முன்னாள் கடற்படை தளபதியை கைது செய்த போது புலம்பெயர் தமிழர்களின் தேவைக்காக கைது செய்யப்பட்டதாக பத்திரிகையாளர் மாநாடுகளை நடத்தினர்.தமிழ் புலம்பெயர்ந்தோரை திருப்திப்படுத்தவே அரசாங்கம் முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவை கைதுசெய்துள்ளதாக கூறும் கருத்து முற்றிலும் தவறானது.நகைச்சுவைமிக்கது.நீதிமன்ற தீர்ப்பின் மூலமே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.விசாரணைகளுக்கு அமைய அவருக்கான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அவரை கைது செய்து தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை திருப்திப்படுத்த அரசாங்கம் செயற்படுவதாக கூறுகின்றார்கள்.நாங்கள் திருப்திப்படுத்துவது நமது நாட்டில் உள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களையே. அதுவே எங்களது கடமை.முன்னைய அரசாங்கத்தால் இந்த நீதி மறுக்கப்பட்டது. நீதியை தவறாக பயன்படுத்தியவர்களே அவர்கள். அது மக்களுக்கும் தெரியும்.
கோத்தபாய ராஜபக்ஷ் அரசாங்கம் உள்ளிட்ட முன்னைய அரசாங்கங்கள் பயணத்தடைகளை விதித்திருந்தன.இந்த மோசடி கும்பலுக்கு பயந்து நிஷாந்த சில்வா நாட்டை விட்டு உயிரை காப்பாற்றிக்கொள்ள தப்பியோடினார்.நீதியின்படி செயற்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்திய ஷானி அபேசேகர 11 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்,ஆனால் தற்போது நீதி சரியாக செயற்படுகிறது. நியாயமான தண்டனைகள் வழங்கப்படுகின்றன.தவறு செய்தவர்கள் அவற்றை ஒரு செய்தியாகவே பார்க்கின்றனர். ஆனால் தவறு செய்தவர்களுக்கு சட்டம் எவ்வாறு செயற்படும் என்றுதெரியும்.
நாம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக செயளாலரைக்கூட விசாரணை செய்துள்ளோம்.முன்னாள் ஜனாதிபதியின் அவரின் ஆலோசகரை நிதி மோசடி பிரிவுக்கு அழைத்து வாக்குமூலம் வாங்கியுள்ளோம். அடுத்து நாம் யாரை விசாரணை செய்வோம் ?
எதிர்க்கட்சிகளின் குரூர சிந்தனை
எதிர்க்கட்சிகள் வேறு ஒரு அரசியல் வியூகத்தை ஏற்பத்திக் கொண்டு அரசியலில் ஈடுபட வேண்டும். உலகில் ஏற்பட்ட பல யுத்தங்கள் மற்றும் இதர பிரச்சினைகளில் இலங்கையின் பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்பட்டு அரசாங்கம் கலைக்கப்படும் என எதிர்க்கட்சிகள் கனவு கண்டனர்.பல பொய்யான தரவுகளை வைத்து பல பேட்டி நிகழ்ச்சிகளில் சில நாட்களில் அரசு உடைந்து விடும் என்றனர். அத்தோடு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரிக்கு முகம் கொடுக்க முடியாமல் போகலாம் என்றனர்.
இவ்வாறான குரூர சிந்தனைகளில் எதிர்க்கட்சிகள் செயற்பட வேண்டாம். மின்சார மறுசீரமைப்பு திருத்தச் சட்ட மூலத்தில் மின் கட்டணம் அதிக்கும் என பாராளுமன்றத்தில் பல நிபுணர்கள் பேசினர். அது தொடர்பான தரவுகளை தவறாக சமர்ப்பித்தனர்.மின்சார சபையில் பல பில்லியன் கடன்கள் செலுத்த வேண்டியிருந்து. அவற்றை செலுத்துவதோடு சபையின் மறுசீரமைப்புக்கு சென்றோம். நாம் கட்டாயம் மின் கட்டணத்தை குறைப்போம்.
மைத்திரி -ரணில் முரண்பாடு
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கெரவலப்பிட்டி இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தை கட்டுவதில் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியிருக்கிடையே முரண்பாடு ஏற்பட்டது.ஒருவர் கொரியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்பியதோடு மற்றுமொருவர் ஜப்பானுடன் இணைந்து பணியாற்ற விரும்பினார். இதன் விளைவாக கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தை அப்போது கட்ட முடியாமல் போனது.இதனால், மக்கள் இன்று அதிகமான பணத்தை மின் கட்டணத்திற்காக செலவழிக்கின்றனர். எந்த நாட்டு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றினால் நாம் நன்மையடைவோம் என இருவரும் முரண்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டது.எனினும், நாம் குறித்த மின் உற்பத்தி நிலையத்தை ஆரம்பித்து வைத்தோம்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் நிச்சயம் இரத்துச் செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்விதமான விசேட சலுகைகள் வழங்கப்படாது.பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்புறுதி பகுதியளவில் குறைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு இரத்துச் செய்யப்படும்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்வதற்கு எதிரக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.ஆனால் இந்த யோசனையை எதிர்க்கட்சியினர் தான் முதலில் கொண்டு வந்தார்கள். இந்த தீர்மானத்தை அரசாங்கம் எடுக்கும் என்று இவர்கள் எதிர்பார்க்கவில்லை.
ஊழல்வாதிகளை தண்டிக்கும் தங்கமான வரம் 2015 ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்றது. நாங்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சென்று பல மோசடிகள் தொடர்பான ஆவணங்களை முன்வைத்தோம். எம்மிடம் நன்றாக கதைத்து விட்டு ஒரு தரப்பினர் மோசடியாளர்களுக்கு சார்பாக செயற்பட்டனர். மாரப்பன என்ற பெயரை குறிப்பிடுகிறேன் பிற விடயங்களை தேடிப்பாருங்கள்.
பாதாளக் குழுக்களை இல்லாதொழிப்போம்
நாட்டில் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.பாதாள குழுக்களுடன் பொலிஸ் மற்றும் இராணுவத்தில் ஒரு சிலர் தொடர்புக் கொண்டுள்ளார்கள்.அவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்கள். கூலி படையாக செயற்பட்டு விட்டு பின்னர் தனது கடமை சீறுடையை அணிந்துக் கொள்ளும் பாதுகாப்பு தரப்பினரும் இருந்துள்ளார்கள்.
இராணுவ முகாமில் இருந்த துப்பாக்கிகள் கடந்த காலங்களில் மாயமாகியுள்ளன. 73 டி 56 ரக துப்பாக்கிகள் பாதாள குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.இந்த பத்து மாத காலத்தில் அவற்றில் 35 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மிகுதியானவற்றை கைப்பற்ற உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பாதாள குழுக்களை இல்லாதொழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனக்கு இன்னும் கொஞ்சம் சந்தர்ப்பம் தாருங்கள். எமது பாதுகாப்பு மற்றும் புலனாய்வு பிரிவின் மீது எமக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. ஆகவே தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற அரசியல் பிரசாரத்தை மேற்கொள்ளாதீர்கள். இந்த நாடு குற்றங்களின் தேசமாகவே கடந்த காலங்களில் காணப்பட்டது. பாதாள குழுக்களுக்கு அரச அனுசரணையும் வழங்கப்பட்டிருந்தது.
நாட்டிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் மட்டுமல்ல பாதாளக் குழுக்களும் முற்றாக ஒழிக்கப்படும். நாங்கள் இந்த நாட்டிலுள்ள தமிழ் ,சிங்கள , முஸ்லிம் மக்களை மட்டுமே திருப்திப்படுத்த முயற்சிக்கின்றோமே தவிர விடுதலைப் புலிகளையோ புலம்பெயர்வாழ் தமிழர்களையோ அல்ல.
எனவே வீழ்ச்சியடைந்த நாட்டை முன்னேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்து தற்போது சரியான பாதையில் அரசாங்கம் பயணித்துக்கொண்டிருக்கிறது. நாட்டை நல்ல நிலைக்கு கொண்டுவருவதே எமது நோக்கம். அதற்காக எதிர்க்கட்சிகளும் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். நாங்கள் அரசியல் செய்வோம். எங்களின் குறைபாடுகள் இருந்தால் விமர்சிக்கலாம். அதில் எந்த பிரச்சினையும் இல்லை, அதிகாரத்தை பெற்றுக்கொள்ள செயற்படுங்கள். ஆனால் சதித்திட்டம் மேற்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மையற்றதாக்க செயற்பட வேண்டாம்.
நாங்கள் முன்னெடுத்துச்செல்லும் பயணத்தை தடுப்பதற்கு யாராவது சதித்திட்டம் மேற்கொண்டால் அந்த சதித்திட்டத்தை தோற்கடிக்க முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்போம். அதற்கு இடமளிக்க முடியாது என்றார்.