தபால் மற்றும் தொலைத்தொடர்பு துறை வேலைநிறுத்தம்
பொது மக்களை அசௌகரியத்துக்கு உட்படுத்தும் வகையில் தொழிற்சங்கங்கள் ஊழியர்களை தவறாக வழிநடத்தி, சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது வருந்தத்தக்கது என தபால்மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கமும், ஐக்கிய தபால் தொழிற்சங்க முன்னணியும் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன. 19 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் மேலதிக வேலை நேர கொடுப்பனவு வழங்கல் மற்றும் வருகையைப் பதிவு செய்வதற்கான கைரேகைப் பதிவு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளமை என்பவற்றுக்கு எதிர்ப்பினை வெளியிடுவதாக இந்த சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. எவ்வாறிருப்பினும் இதற்கு எதிர்ப்பினை வெளியிட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது நியாயமற்றது என தபால்மா அதிபர் ருவான் சத்குமார அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சுற்று நிரூபம் ஒட்டு மொத்த அரச சேவை ஊழியர்களுக்குமான சம்பள உயர்வு மற்றும் மேலதிக வேலை நேரத்துக்கான உரிமைகளை தெளிவாகக் குறிப்பிடுகின்றது. அந்த வகையில் கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது 40 சதவீத சம்பள மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் கிடைக்கப் பெறுகின்றன.
தற்போது தபால் துறையின் மொத்த செலவினங்களில் 90 சதவீதம் சம்பளம் மற்றும் மேலதிக வேலை நேர கொடுப்பனவு உள்ளிட்டவற்றுக்கு ஒதுக்கப்படுகிறது. இவ்வாறான நிலையில் பொது மக்களை அசௌகரியத்துக்கு உட்படுத்தும் வகையில் தொழிற்சங்கங்கள் ஊழியர்களை தவறாக வழிநடத்தி, சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது வருந்தத்தக்கது என தபால்மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
3,354 துணை அஞ்சல் அலுவலகங்களில், துணை அஞ்சல் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க மாட்டோம் என்று அறிவித்துள்ளதாகவும், இந்த அலுவலகங்கள் தொடர்ந்து வழக்கம் போல் இயங்கும் என்றும், அஞ்சல் சேவைகள் அவற்றின் மூலம் கிடைக்கும் என்றும் ருவான் சத்குமார மேலும் குறிப்பிட்டார்.
இருப்பினும், வேலைநிறுத்தம் காரணமாக அஞ்சல் விநியோகம் தாமதமாகலாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுவதாகவும், இந்த நியாயமற்ற தொழிற்சங்க நடவடிக்கையால் ஏற்படும் ஏதேனும் சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





