மின்சார சபை சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு; தொழிற்சங்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் நாளை வியாழக்கிழமை இடம்பெற உள்ளது.

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் உள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்திருந்தன. இதனால் மின்சார சபை அலுவலகங்களில் சேவையை பெற்றுக்கொள்ள வருகைததத்தந்திருந்த பெருமளவான பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருந்தனர்.
மேலும் உத்தேசிக்கப்பட்டுள்ள மின்சார சபை மறுசீரமைப்பு திருத்தச் சட்டத்தை மீள பெறுமாறு வலியுறுத்தியும் தமது தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரியும் மின்சார சபையின் 28 தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் 22-07-2025அன்று கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் நாளை வியாழக்கிழமை இடம்பெற உள்ளது. இந்நிலையில் மின்சார சபையின் 28 தொழிற்சங்கங்களை சேர்ந்த சுமார் 22 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் 22-07-2025அன்று செவ்வாய்க்கிழமை சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். மின்சார சபை சட்ட மூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தமது தொழில் பாதுகாப்பு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு வழங்குமாறு தெரிவித்தும் நேற்றைய தினம் மின்சார சபை ஊழியர்கள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.
பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் கீழ் உள்ள மின் சக்தி துறையில் மறுசீரமைப்பைக் கொண்டுவரும் நோக்கில் கொண்டுவரப்பட்ட 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு சட்ட மூலத்தை திருத்தங்களுடன் மீள நிறைவேற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் தயாராகி வருவதாக மின்சார சபை தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதனால் மின்சார சபை ஊழியர்களின் தொழிலுக்கு ஆபத்து ஏற்படுவதுடன், தமக்கான சலுகைகள் கொடுப்பணவுகள் தொடர்பிலும் பிரச்சினைகள் எழுவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபைக்கு முன்பாக ஒன்றுக்கூடிய நூற்றுக்கணக்கான மின்சார சபை ஊழியர்கள் மின்சார சபை மறுசீரமைப்பு திருத்தச் சட்டத்தை மீளப்பெறுமாறு வலியுறுத்தியும், தமது தொழில் பாதுகாப்பு உள்ளிட்ட ஒரு சில கோரிக்கைகளை முன்னிறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது அப்பகுதியில் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பொலிஸாரும் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதேவேளை மின்சார சபை ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையால் மின்சார சபை அலுவலக நடவடிக்கைகள் ஸ்தம்பித்திருந்தன. சேவையைப் பெற்றுக்கொள்ள வருகைத்தந்திருந்த பொதுமக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்ததுடன் பலர் ஏமாற்றத்துடன் அங்கிருந்து வெளியேறியிருந்தனர். மேலும் குறிப்பிட்ட சில அலுவலகங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாத்திரம் சேவைகள் வழங்கப்பட்டதுடன், ஆனால் சேவையை பெற்றுக் கொள்ள மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது.
மேற்படி தொழிற்சங்க நடவடிக்கைத் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் சங்கத்தின் பிரதித்தலைவர் நந்தன உதயகுமார குறிப்பிடுகையில்,
இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இத்துறைக்குப் பொறுப்பான அமைச்சரை தொடர்பு கொள்ள நாம் முற்பட்ட போதிலும் அதனால் எவ்வித பயனுமில்லை. நாடு முழுவதும் உள்ள மின்சார சபையின் 28 தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கம் மற்றும் அமைச்சருடன் மாத்திரமே எமக்கு பிரச்சினை உள்ளது. பொதுமக்களுடன் அல்ல.
உத்தேசிக்கப்பட்டுள்ள இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு திருத்தச் சட்டத்தால் மின்சார ஊழியர்களின் தொழிலுக்கு பாதுகாப்பு இன்றிய நிலை உருவாகியுள்ளது. ஆகையால் எமது நியாயமான கோரிக்கைகளுக்கு அரசாங்கத்தினர் செவிசாய்க்க வேண்டும் இல்லையேல் எதிர்வரும் நாட்களில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவும் தயாராக உள்ளோம் என்றார்.