8 வருடங்களில் மின்சார சபைக்கு 594,368 மில்லியன் ரூபா நட்டம்
மின்சார சபை தொடர்ச்சியான நட்டமடைந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு மின்கட்டணம் ஒருகட்டமாக அதிகரித்ததால் பொதுமக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டார்கள்.
2014 முதல் 2022ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் இலங்கை மின்சார சபை 594,368 மில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக கோப் குழுவில் வெளிப்படுத்தப்பட்டது.
இலங்கை மின்சார சபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்குரிய கணக்காய்வுhளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் நடைமுறை செயலாற்றுகை அறிக்கை ஆகியவற்றை பரிசீலனை செய்வதற்காக கோப் குழுவின் தலைவர் நிஷாந்த சமரவீரவின் தலைமையில் குழு கடந்த வாரம் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடியது.
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு மின்சார சபையின் நட்டத்துக்கான பல காரணிகள் வெளிப்படுத்தப்பட்ட நிலையில் மின்சார சபையில் போதுமான சேவையாளர்கள் உள்ள நிலையில் ஒருசில கண்காணிப்பு நடவடிக்கைகள் வெளியக தரப்பிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டமை நட்டத்துக்கான காரணிகளில் பிரதான ஒன்றாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மின்சார சபை தொடர்ச்சியான நட்டமடைந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு மின்கட்டணம் ஒருகட்டமாக அதிகரித்ததால் பொதுமக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டார்கள்.இருப்பினும் 2023 ஆம் ஆண்டுக்கு பின்னர் மின்சார சபை இலாபமடையும் நிலைக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தினசரி 18 மணித்தியாலங்கள் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.மின்கட்டமைப்பின் சிக்கல்களினால் இவ்வாறு மின்விநியோகம் துண்டிக்கப்படவில்லை.இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு செலுத்த வேண்டிய கடனை உரிய காலப்பகுதியில் செலுத்ததாத காரணத்தால் மின்வியோகம் சிக்கலுக்குள்ளானது என்று அதிகாரிகள் குழுவின் முன்னிலையில் சுட்டிக்காட்டினார்கள்.
மின்கட்டணத்தை அதிகரித்து 24 மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை தடையின்றி வழங்கியமை சந்தேகத்துக்குரியது என்று குழுவின் தலைவர் இதன்போது கேள்வியெழுப்பினார்.





