கடற்பரப்பில் 25 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு
மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களின் பலவீனத்தைப் பயன்படுத்திப் பணம் வழங்குவதாக ஏமாற்றிப் பாரியளவிலான போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோர், மீனவர்களை இவ்வாறான குற்றச்செயல்களில் சிக்க வைக்கின்றனர்.
'முழுநாடும் ஒன்றாக' எனும் தேசியளவிலான போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகமைய இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 25 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், 9 மீன்பிடி படகுகளும் 49 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமான்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் கீழ் கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் 'முழுநாடும் ஒன்றாக' எனும் தேசியளவிலான போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கைகமைய, இதுவரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் அதன் முன்னேற்றம் தொடர்பிலும் தெளிவுபடுத்தும் சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போதே கடற்படை ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், "போதைப்பொருள் என்னும் கொடிய நோயை இந்நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கு நாடளாவிய ரீதியில் முப்படையினரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாகக் கடற்பரப்பை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகம் தொடர்பில் கடற்படையினரால் தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்தோடு தேசிய கடலோர பாதுகாப்பு திணைக்களம், பொலிஸார், முப்படையினர், சுங்கப் பிரிவு, புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட பாதுகாப்பு சார் நிறுவனங்களின் ஒருங்கிணைவின் மூலமும் தகவல் பரிமாற்றத்தின் ஊடாகவும் போதைப்பொருளுக்கு எதிரான இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்துள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது சுமார் 71 பில்லியன் ரூபா பெறுமதி மிக்க நச்சுப் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன. அதேபோல் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 25 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன.
கடற்படையினரால் பல நாட்களாக கடற்பரப்பில் வைத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகமைய மேற்படி போதைப்பொருட்கள், ஆயுதங்களுடன் சஞ்சரித்துக் கொண்டிருந்த படகுகள் கைப்பற்றப்பட்டிருந்தன.
அந்தவகையில், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 9 மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவங்களின் போது 49 சந்தேகநபர்களும் கைதாகியுள்ளனர். மேலும் கடந்த வருடம் நச்சுப் போதைப்பொருட்களுடன் 13 மீன்பிடி படகுகளும், கஞ்சா மற்றும் வெளிநாட்டு உயர் ரக சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்த 123 மீன்பிடி படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டிருந்தன.
மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களின் பலவீனத்தைப் பயன்படுத்திப் பணம் வழங்குவதாக ஏமாற்றிப் பாரியளவிலான போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோர், மீனவர்களை இவ்வாறான குற்றச்செயல்களில் சிக்க வைக்கின்றனர்.
எவ்வாறெனினும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் எவரும் சட்ட நடவடிக்கையிலிருந்து தப்ப முடியாது என்பதை மீனவர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும். இவ்வாறாக குற்றச்செயலில் ஈடுபடுமாறு வற்புறுத்தும் நபர்கள் தொடர்பில் 105, 1818, 1997 ஆகிய துரித தொலைபேசி இலக்கங்களைத் தொடர்புகொண்டு தகவலளிக்க முடியும். பொதுமக்களும் தமது சமூகப் பொறுப்பை உணர்ந்து எம்முடன் துணை நிற்குமாறு கோரிக்கை விடுக்கிறேன்.
நாட்டில் 50 ஆயிரம் மீன்பிடி படகுகளும், 5 ஆயிரம் ஆழ்கடல் மீன்பிடி படகுகளும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. ஆகையால் ஒருபோதும் கடல் மார்க்கமாகப் போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டுவர அனுமதிக்கப்போவதில்லை," என்றார்.





