மக்கள் வங்கியின் வெளிநாட்டு பணவனுப்பல் கட்டமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு -656 மில்லியன் ரூபா நிதியிழப்பு
கடந்த 2023 மே மாதம் முதல் 2026 மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பணப்பறிமாற்றங்களின் போது, சில வாடிக்கையாளர்களுக்கு அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தொகையை விட அதிகளவான பணம் கைமாறியுள்ளது.
மக்கள் வங்கியின் வெளிநாட்டு நாணய மாற்று பணவனுப்பல் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வாடிக்கையாளர்கள் சிலருக்கு செலுத்தப்பட வேண்டிய தொகைக்கும் அதிகளவான தொகை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வங்கிக்கு சுமார் 656 மில்லியன் ரூபா நிதியிழப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.
மேற்படி விடயம் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிக்கையொன்றையும், மக்கள் வங்கி வெளியிட்டுள்ளது.
அதற்கமைய மக்கள் வங்கியின் வெளிநாட்டு நாணய மாற்று பணவனுப்பல் கட்டமைப்பில் சுமார் மூன்று வருட காலமாக நீடித்த இந்தத் தவறு அண்மையிலேயே கண்டறியப்பட்ட நிலையில் , தற்போது தொழிநுட்பக் கட்டமைப்பு முழுமையாக மீள சரிசெய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட ஒரு வெளிநாட்டு நாணயத்திற்கான மாற்று விகிதங்களை பணவனுப்பல் கட்டமைப்பிற்குள் பயன்படுத்துவதில் ஏற்பட்ட தவறே நிதியிழப்புக்கு காணமாக இருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 2023 மே மாதம் முதல் 2026 மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பணப்பறிமாற்றங்களின் போது, சில வாடிக்கையாளர்களுக்கு அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தொகையை விட அதிகளவான பணம் கைமாறியுள்ளது.
இந்த தவறு காரணமாக வங்கிக்கு ஏற்பட்டுள்ள நிதியிழப்பு 656 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இழப்புத்தொகை ஏற்கனவே வங்கியின் நிதி அறிக்கைகளில் முழுமையாக உள்வாங்கப்பட்டுள்ளதால், வங்கியின் நிதிநிலைக்கு இதனால் எவ்வித மேலதிக பாதிப்புகளும் ஏற்படாது என மக்கள் வங்கி உறுதியளியளிக்கின்றது.
இந்தத் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் வங்கி உள்வாரி மறுஆய்வு ஒன்றை ஆரம்பித்துள்ளதுடன், அதன் செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளையும் பலப்படுத்தியுள்ளது.
அத்துடன், இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை பிரிவுகளின் ஆலோசனைகளைப் பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது. தவறுதலாக மேலதிக பணம் செலுத்தப்பட்ட வாடிக்கையாளர்களிடமிருந்து அந்த நிதியை மீட்பதற்கான செயல்முறைகளை மக்கள் வங்கி ஏற்கனவே ஆரம்பித்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை மீட்டெடுப்பதில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாகவும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தச் சம்பவத்தினால் வங்கியின் ஒட்டுமொத்த நிதி ஸ்திரத்தன்மைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை .வங்கியின் அன்றாட நடவடிக்கைகள், டிஜிட்டல் சேவைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் வைப்புத்தொகைகள் எனஅனைத்தும் எவ்வித தடையுமின்றி பாதுகாப்பாக இயங்கி வருகின்றன.
மக்கள் வங்கி சுமார் 3.8 ட்ரில்லியன் ரூபா சொத்துத் தளத்தைக் கொண்ட ஒரு வலுவான நிறுவனம் என்பதால், வாடிக்கையாளர்கள் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை என்றும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





