முத்துராஜவெலவில் கை வைப்பதற்கு பாராளுமன்றத்திற்கு அதிகாரமில்லை: பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை
நீர்கொழும்பு களப்பினையும் தூய்மைப்படுத்துமாறும் வலியுறுத்துகின்றோம்.
முத்துராஜவெல சதுப்பு நிலப் பகுதியைப் பாதுகாப்பதற்காக 'முத்துராஜவெல அபிவிருத்தி அதிகாரசபை' நிறுவுமாறு அரசாங்கத்திடம் கோருகின்றோம். அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்களின் தன்னிச்சையான தீர்மானங்களால் குறித்த பகுதியில் சட்ட விரோத கட்டுமானங்கள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறான சட்ட விரோத கட்டுமானங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். முத்துராஜவெல சதுப்பு நிலத்தில் கைவைக்கும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கோ நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கோ கிடையாதென பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள பேராயர் இல்லத்தில் முத்துராஜவெல சதுப்பு நிலத்தைப் பாதுகாத்தல் தொடர்பில் 05-02-2026 அன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பேராயர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கம்பஹா மாவட்டத்தின் இயற்கையான வடிகால் அமைப்பு முத்துராஜவெல சதுப்பு நிலங்கள் ஊடாகவே அமைந்துள்ளது. இப்பகுதியில் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடருமானால், எதிர்காலத்தில் கம்பஹா மாவட்டத்தில் மீண்டும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. முத்துராஜவெல சதுப்பு நில வலயத்திற்குள் அதிகரித்து வரும் சட்டவிரோத கட்டுமானங்களால் சுமார் 18 000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கம்பஹா மாவட்டம் என்றுமில்லாதவாறு வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டமைக்கு இதுவும் ஒரு காரணியாகும். முத்துராஜவல சதுப்பு தொடர்பில் பல ஆண்டுகளாக நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம். இது ஒட்சிசன் உற்பத்தியில் மிகவும் முக்கியத்துவமுடைய ஒரு இயற்கை வளமாகும். எனவே தான் நாம் அதனைப் பாதுகாப்பதற்காக போராடிக் கொண்டிருக்கின்றோம்.
மறுபுறம் நீர்கொழும்பு கலப்பில் பிளாஸ்ட் கழிவுகள் சேர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த பகுதிகளில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி எனக் கூறிக் கொண்டு பல்வேறு நிறுவனங்களுக்கும், தனிநபர்களுக்கும் சட்ட விரோதமாக கட்டட நிர்மாணங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டதன் காரணமாகவே இவ்வாறான விளைவுகளை சந்திக்க நேர்ந்துள்ளது. இதே நிலைமை தொடர்ந்தால் அது எதிர்காலத்தில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தும்.
என்றுமில்லாதவாறு கம்பஹா நகர் இம்முறை வெள்ளத்தில் மூழ்கியது. ஜூன், ஜூலை மாதங்களில் ஏற்படும் மழைக் காலநிலையின் போது கம்பஹாவில் மீண்டும் பாரிய வெள்ளம் ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளது. இந்த பகுதிகளில் பாதுகாப்பற்ற குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டு அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களாலேயே மக்கள் அவற்றில் குடியேற்றப்பட்டுள்ளனர். மனசாட்சிக்கு சிறிதும் இடமளிக்காமல் மக்களை அவற்றில் குடியேற்றியிருக்கின்றனர்.
மக்களை இவ்வாறான பாதிப்புக்களிலிருந்து பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தினதும் அரசாங்க நிறுவனங்களினதும் பொறுப்பாகும். நாட்டில் சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது சுதந்திர தின உரையில், சட்டம் சுயாதீனமாக நடைமுறைப்படுத்தப்படும் நாடு உருவாக்கப்படும் எனக் கூறினார். சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார். அந்த வகையில் அரசியல்வாதிகளுக்காகவோ அல்லது தனவந்தர்களுக்காகவோ சட்டத்தை மாற்ற முடியாது.
எனவே உடனடியாக இந்த திட்டங்கள் நிறுத்தப்பட வேண்டும். முத்துராஜவெல பிரதேசத்தில் கைவைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். இதில் கைவைப்பதற்கு பாராளுமன்றத்துக்கோ நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கோ அதிகாரம் இல்லை. இது அவர்களது தனிப்பட்ட சொத்து அல்ல. இந்நாட்டில் நில வளங்கள் மக்களுக்கு உரித்துடையவையாகும். எனவே சட்டத்துக்கு அப்பால் ஒவ்வொருவருக்கும் செயற்படுவதற்கு இ;டமளிக்கப்பட்டால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.
எனவே முத்துராஜவெல தொடர்பில் இதனை விட ஆழமாக அவதானம் செலுத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம். அத்தோடு நீர்கொழும்பு களப்பினையும் தூய்மைப்படுத்துமாறும் வலியுறுத்துகின்றோம். இது தொடர்பில் நான் ஜனாதிபதியிடம் இரு சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட ரீதியில் கோரிக்கை விடுத்திருக்கின்றேன். முத்துராஜவெல பகுதியில் சட்ட விரோத கட்டடங்களுக்கு தடை விதிக்குமாறும், அங்கு நிர்மாணிப்பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
திறந்த பொருளாதாரம் எனக் கூறி எமது நாட்டில் பல்வேறு காரணிகள் சீரழிக்கப்பட்டுள்ளன. எனவே மீண்டும் இந்த அழிவுகள் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு முத்துராஜவெல அபிவிருத்தி அதிகாரசபையொன்றை நிறுவுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம். முத்துராஜவெல மற்றும் அதனை அண்மித்த பாதுகாக்கப்பட்ட வலயங்கள் தொடர்பில் அனைத்து அதிகாரங்களையும் கொண்டதாக அந்த அதிகாரசபை நிறுவப்பட வேண்டும். அந்த அதிகாரசபையின் ஊடாக குறித்த வலயத்தைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.





