குருந்தூர் உட்பட வடக்கு, கிழக்கிலுள்ள காணி பிரச்சினைகளுக்கு எமது ஆட்சியில் நிச்சயம் தீர்வு - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
தற்போதைய சூழலில் அரசியல் அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு இவ்வாறான நில விவகாரங்கள் சிக்கலாக்கப்பட்டுள்ளது.
குருந்தூர் மலை விகாரை விவகாரம் உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் காணி சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தங்களது அரசாங்கத்தின் கீழ் நிச்சயமாக முறையான தீர்வுகளை எதிர்பார்க்க முடியும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 23-06-2026 அன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் காணிப் பிரச்சினைகள் இனவாத நோக்கங்களுக்காக அல்லது இலாப நோக்கங்களுக்காக அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி குழப்பமடையச் செய்யப்பட்டுள்ளது. அங்கு நிலவும் உண்மையான நிலைமைகளைக் கண்டறிந்து முறையான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக உயர் அதிகாரிகள் மட்டத்திலான குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் குருந்தூர் விகாரை விவகாரம் உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் காணி சம்பந்தமான பிரச்சினைகளுக்கு எமது அரசாங்கத்தின் கீழ் நிச்சயமாக முறையான தீர்வுகளை எதிர்பார்க்க முடியும். தற்போதைய சூழலில் அரசியல் அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு இவ்வாறான நில விவகாரங்கள் சிக்கலாக்கப்பட்டுள்ளது.
எனவே அவை குறித்து அனைத்து தரப்புகளையும் உள்ளடக்கிய வகையில், அறிவியல் பூர்வமான அணுகுமுறையோடு ஆராய்ந்து பார்ப்பதற்கே இந்த விசேட அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இப்பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படும் என்றார்.





