2025 இல் 12,650 இணையவழி மோசடிகள் பதிவு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு
வங்கி கணக்கு விபரங்கள், ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொற்கள் இரகசிய எண்கள் மற்றும் கியூ.ஆர் குறியீடுகள் போன்ற தனிப்பட்ட தரவுகளைப் பெற்று பணத்தைத் திருடுகின்றனர்.
நாட்டில் இணையவழி மோசடிகள் வெகுவாக அதிகரித்துள்ளதுடன், 2025 ஆம் ஆண்டு மாத்திரம் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவுக்கு சுமார் 12,650 க்கும் மேற்பட்ட இணையவழி மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு நிறுவனத்தின் தலைமை தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் 01-01-2026 அன்று அவர் ஊடகங்களுக்கு மேலும் குறிப்பிடுகையில், நிறைவடைந்த ஆண்டு மாத்திரம் நாடளாவிய ரீதியில் இணையவழி மோசடிகள் தொடர்பாக சுமார் 12,650 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது இணையவழி குற்றச்செயல்கள் பாரியளவில் அதிகரித்துள்ளமையைக் காண முடிகிறது. அவ்வாறு அளிக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளில் அதிக எண்ணிக்கையிலானவை போலி சமூக ஊடகக் கணக்குகள், தனிநபர்களின் கணக்குகளைத் திருடுதல் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பானவையாகும்.
மேலும், சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும் வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையிலான கருத்துப்பகிர்வு, தனிநபர் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் ஆபாசமான உள்ளடக்கங்கள் மற்றும் பெரியவர்களுக்கு எதிரான பாலியல் ரீதியான இணையவழி அச்சுறுத்தல்கள் ஆகியவை தொடர்பிலும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்கால இணையவழி மோசடிகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மிகவும் நவீனமான யுக்திகளைக் கையாண்டு வருகின்றனர்.
பொதுமக்களை மிகவும் சாதுரியமான முறையில் ஏமாற்றி அவர்களின் வங்கி கணக்கு விபரங்கள், ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொற்கள் இரகசிய எண்கள் மற்றும் கியூ.ஆர் குறியீடுகள் போன்ற தனிப்பட்ட தரவுகளைப் பெற்று பணத்தைத் திருடுகின்றனர். இணையப் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லாத இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் முதல்முறையாக இணையத்தைப் பயன்படுத்துபவர்களே இத்தகைய மோசடிகளுக்கு எளிதில் பலியாகின்றனர். பொதுமக்கள் இணையத்தை பயன்படுத்தும் போது அதிக விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.
விசேடமாக அறியாத மூன்றாம் தரப்பு நபர்களிடம் எக்காரணத்தைக் கொண்டும் தனிப்பட்ட தகவல்கள், நிதி மற்றும் வங்கி கணக்கு விபரங்களைப் பகிர வேண்டாம். சமூக ஊடக கணக்குகளுக்கு ஈரடுக்கு பாதுகாப்பு மற்றும் வலிமையான கடவுச்சொற்களைப் பயன்படுத்துவது அவசியம்.
இணையவழி குற்றச்செயல்களால் பாதிக்கப்படும் பொதுமக்கள் அல்லது சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளைக் கண்டறிபவர்கள், உடனடியாக 101 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்கலாம் அல்லது report@cert.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளலாம் என்றார்.





