தமிழ் சட்டத்தரணிகள் பேரவைக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி கடிதம்
நாம் ஒற்றுமையாக செயற்பட எப்போதும் தயாராகவே இருக்கிறோம் என்பதில் எவருக்கும் எந்த சந்தேகமும் எழாத வண்ணமே இதுவரை நாம் செயற்பட்டு வந்திருக்கிறோம்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரங்களில் பொது இணக்கப்பாடு எட்டப்படும் வரை நாம் அரசாங்கத்துடன் தனித்துச் செயற்படமாட்டோம் என வாக்குறுதி அளித்திருந்த பின்னணியில், தற்போது தமிழ்த்தேசியப் பேரவையினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை அந்த ஒற்றுமை முயற்சியைக் குழப்பும் வகையில் அமைந்திருக்கிறது.
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் இப்படியாக தனித்து செயற்படும் வேளையில், விரக்தியளிக்கும் விதத்தில் உங்களது முயற்சியைத் தொடர்வதன் ஊடாக ஆக்கபூர்வமான அல்லது பயனுறுதிமிக்க விளைவுகளை எட்டக்கூடியதாக இருக்குமா என்பதைத் தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள் எனக்கோரி இலங்கைத் தமிழரசுக்கட்சி தமிழ் சட்டத்தரணிகள் பேரவைக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினால் கடந்த மார்ச் 2 ஆம் திகதி மற்றும் இம்மாதம் 9 ஆம் திகதிகளில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டு சந்திப்புக்களில் தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்ததுடன் அவர்களுக்கு இடையில் பொது இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டன.
இவ்வாறானதொரு பின்னணியில் தமிழ்த்தேசியப் பேரவையினால் கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி நடத்தப்பட்ட கூட்டத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழர் தரப்பின் நிலைப்பாட்டினைக் கூட்டாக முன்வைப்பதற்கான தீர்வுத்திட்ட வரைவைத் தயாரிப்பதற்கும், அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்வதற்கும் அரசியல் தலைவர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், துறைசார் நிபுணர்கள் 28 பேரடங்கிய ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபை வழிநடத்தல் குழுவை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டு ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபையின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி தி.விக்னேஸ்வரனால் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (17) அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.
அதனையடுத்து இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரின் கையெழுத்துடன் நேற்று சனிக்கிழமை (18) தமிழ் சட்டத்தரணிகள் பேரவைக்குக் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாவது:
புதிய அரசியல் யாப்பு வரைபுக்கான இணக்கப்பாடு என்ற தலைப்பில் 02.03.2026 திகதியிடப்பட்ட உங்களது கடிதம் மற்றும் மார்ச் 2 ஆம் திகதி, ஏப்ரல் 9 ஆம் திகதிகளில் நடைபெற்ற கூட்டங்கள் மற்றும் அக்கூட்டங்களில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் என்பன தொடர்பில் சில விடயங்களைச் சுட்டிக்காட்டி மிகுந்த மனவருத்தத்துடன் இக்கடிதத்தை எழுதுகிறோம்.
உங்களது இந்த முயற்சியை நாம் எவ்வித தயக்கமுமின்றி உடனடியாக வரவேற்றதுடன் மாத்திரமன்றி எமது கட்சியின் சார்பில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த ஒத்துழைப்பு காரணமாக ஒரு பொது இணக்கப்பாடு எட்டப்படும் வரை இலங்கைத் தமிழரசுக்கட்சி தனித்து அரசாங்கத்தோடு அரசியல் தீர்வு சம்பந்தமாக எவ்விதமான இடைவினையும் கொள்ளமாட்டாது என்ற வாக்குறுதியையும் நாம் வழங்கியிருந்தோம். வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியாக நாம் இருந்தபோதிலும், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் கோரிக்கையை ஏற்று இந்த வாக்குறுதியை நாம் வழங்கியிருந்தோம்.
ஆனால், நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) தமிழ்த்தேசியப் பேரவை என்ற பெயரில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கை, மேற்கூறப்பட்ட இணக்கப்பாட்டை முற்றுமுழுதாக மீறும் வகையில் இருப்பதை நீங்களும் அவதானித்திருப்பீர்கள் என்று திடமாக நம்புகிறோம். நீங்கள் நியமித்த நிபுணர் குழுவின் அமர்வுகள் ஆரம்பமாக இருக்கும் இத்தருவாயில் அவர்கள் ஒருதலைப்பட்சமாகவும், தன்னிச்சையாகவும் ஒரு குழுவை அமைத்து ஒற்றுமையாக செயற்படுவதற்கான முயற்சியை வேண்டுமென்றே தகர்த்திருக்கிறார்கள்.
அவர்களது அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பெப்ரவரி 15 ஆம் திகதியன்று நடத்தப்பட்ட பகிரங்க கூட்டமும் இதே மாதிரியான முறையில் ஒற்றுமையான செயற்பாட்டைக் குழப்புவதற்காகவே நடத்தப்பட்டது என்பது நீங்கள் அனைவரும் அறிந்த விடயமே. பெப்ரவரி 19 ஆம் திகதியன்று சுவிட்ஸர்லாந்து உயர்ஸ்தானிகர அனுசரணையோடு 'மூடிய அறை' கூட்டத்துக்கு இணங்கிய பின்னர் பகிரங்க கூட்டத்தை நடத்தி, அந்த ஒற்றுமைக்கான முயற்சியை அவர்கள் ஏற்கனவே தகர்த்திருந்தனர். அதே பாணியில் உங்களது முயற்சியையும் இப்போது முறியடித்துள்ளனர்.
நாம் ஒற்றுமையாக செயற்பட எப்போதும் தயாராகவே இருக்கிறோம் என்பதில் எவருக்கும் எந்த சந்தேகமும் எழாத வண்ணமே இதுவரை நாம் செயற்பட்டு வந்திருக்கிறோம். நிபுணர்களோடு செயற்படுவதற்குக் கூடுதலான எண்ணிக்கையை அவர்கள் கடந்த கூட்டத்தில் கோரிய வேளையிலும் எமது இடங்களையும் அவர்களுக்கு விட்டுக்கொடுக்க நாம் தயாராக இருந்தோம் என்பதை நீங்களும் நன்கு அறிவீர்கள்.
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் இப்படியாக தனித்து செயற்படும் பின்னணியில் விரக்தியளிக்கும் விதத்தில் உங்களது முயற்சியைத் தொடர்வதன் ஊடாக ஆக்கபூர்வமான அல்லது பயனுறுதிமிக்க விளைவுகளை எட்டக்கூடியதாக இருக்குமா என்பதைத் தயவுசெய்து தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.





