மத்திய கிழக்கு மோதல் நிலை குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை
எந்தவொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரத்திற்கு எதிராக பலத்தைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனக் கொள்கைகளை அனைத்துத் தரப்பினரும் மதிக்க வேண்டும் என இலங்கை மீண்டும் வலியுறுத்துகிறது.
மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆசிய பிராந்தியங்களில் வேகமாக அதிகரித்து வரும் பதற்றமான சூழல் குறித்து இலங்கை தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளதுடன், அங்கு உடனடியாக அமைதியை நிலைநாட்ட உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இப்பகுதிகளில் நிலவும் மோதல் போக்கு பொதுமக்களுக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அரசாங்கம், பொதுமக்கள் மீதான தாக்குதல்களையும் பொது உட்கட்டமைப்புகள் சேதப்படுத்தப்படுவதையும் வன்மையாக கண்டித்துள்ளது.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சு 15-03-2026 அன்று விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை வலியுறுத்தியுள்ளது. குறித்த அறிக்கையில், அனைத்து தரப்பிலும் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழான ஒரு அடிப்படை கடமை என வலியுறுத்தப்பட்டுள்ளதோடு, மனித உயிர்களின் புனித தன்மையைப் பேணுவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் கடுமையான மனிதாபிமான நெருக்கடி மற்றும் உலகப் பொருளாதாரம், சர்வதேச வர்த்தகம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள நேரடித் தாக்கங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றது.
எந்தவொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரத்திற்கு எதிராக பலத்தைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனக் கொள்கைகளை அனைத்துத் தரப்பினரும் மதிக்க வேண்டும் என இலங்கை மீண்டும் வலியுறுத்துகிறது.
அனைத்து நாடுகளினதும் இறையாண்மையை மதிக்கும் நாடு என்ற ரீதியில், சம்பந்தப்பட்ட தரப்பினர் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுக்க பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்ப வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இப்பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைக் கருத்திற்கொண்டு, அர்த்தமுள்ள கலந்துரையாடல்கள் மூலம் பதற்றத்தைத் தணிக்க தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





