மின்சாரகட்டண திருத்தத்தை நடைமுறைப்படுத்தாதிருக்க தீர்மானம்: பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு
காலாண்டின் இவ்வளவு குறுகிய காலப்பகுதிக்குள் வருமானம் மற்றும் செலவு மாற்றங்களை சரிசெய்வதன் மூலம், மின்சாரக் கட்டணம் ஒப்பீட்டளவில் அதிக சதவீதத்தால் மாற்றமடையக்கூடும் என அவதானிக்கப்பட்டுள்ளது.
முறையான கட்டணத் திருத்த முன்மொழிவை உரிய நேரத்தில் சமர்ப்பிக்காமை உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு 2026ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தாதிருக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
முறையான கட்டணத் திருத்த முன்மொழிவை இலங்கை மின்சார சபை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் சமர்ப்பிக்கத் தவறியதன் காரணமாக, 2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தாதிருக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
முறையான முன்மொழிவு குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படாமை, ஆரம்ப முன்மொழிவில் காணப்பட்ட குறைபாடுகள் மற்றும் இந்த காலாண்டிற்காக இனிவரும் காலத்தில் புதிய முன்மொழிவொன்று சமர்ப்பிக்கப்பட்டாலும், காலாண்டின் எஞ்சிய குறுகிய காலப்பகுதிக்கு அதனை நடைமுறைப்படுத்துவதால் அதிக சதவீதத்தில் கட்டண மாற்றங்கள் ஏற்படக்கூடிய பாதகமான நிலைமை ஆகியவற்றை கருத்திற்கொண்டு ஆணைக்குழு இந்தத் தீர்மானத்திற்கு வந்துள்ளது.
2026 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதிக்கான கட்டணத் திருத்த முன்மொழிவை கடந்த ஆண்டின் (2025) நவம்பர் 14 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு, அந்த ஆண்டின் ஒக்டோபர் மாதத்தில் கடிதம் மூலம் இலங்கை மின்சார சபைக்கு ஆணைக்குழு அறிவித்திருந்தது. எனினும், மின்சார சபை தனது முன்மொழிவை 2025 டிசம்பர் 29 ஆம் திகதியே சமர்ப்பித்திருந்தது. அந்த முன்மொழிவில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக, முறையான முன்மொழிவை 2026 ஜனவரி 8 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு 2026 ஜனவரி 5 ஆம் திகதி மின்சார சபைக்கு அறிவித்தது.
திருத்தப்பட்ட முன்மொழிவை சமர்ப்பிக்க மேலும் தாமதமாகும் என இலங்கை மின்சார சபை 2026 ஜனவரி 8 ஆம் திகதி ஆணைக்குழுவிற்கு அறிவித்தது. இதுவரையில் திருத்தப்பட்ட முன்மொழிவு ஆணைக்குழுவிற்கு கிடைக்கவில்லை என்பதுடன், அந்த முன்மொழிவு கிடைத்த பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய மீளாய்வு மற்றும் பொதுமக்களின் கருத்துக்கேட்பு ஆகியவற்றின் பின்னர், அதனை 2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டின் இறுதிக் காலப்பகுதிக்கே நடைமுறைப்படுத்த முடியும்.
காலாண்டின் இவ்வளவு குறுகிய காலப்பகுதிக்குள் வருமானம் மற்றும் செலவு மாற்றங்களை சரிசெய்வதன் மூலம், மின்சாரக் கட்டணம் ஒப்பீட்டளவில் அதிக சதவீதத்தால் மாற்றமடையக்கூடும் என அவதானிக்கப்பட்டுள்ளது. இது தேசியப் பொருளாதாரத்திற்குப் பாரிய பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
முறையான கட்டணத் திருத்த முன்மொழிவை உரிய நேரத்தில் சமர்ப்பிக்காமை மற்றும் காலாண்டின் குறுகிய காலத்திற்கு கட்டணத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதால் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதகமான தாக்கங்களைக் கருத்திற்கொண்டு, முதலாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தாதிருக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதேபோன்று, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான கட்டணத் திருத்த முன்மொழிவை 2026 பெப்ரவரி 13 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாகச் சமர்ப்பிக்குமாறும் ஆணைக்குழு மின்சார சபைக்கு அறிவித்துள்ளது.





