இலங்கைக்கான 200 மில்லியன் டொலர்கள் நிதியுதவி குறித்து பரிசீலிக்கிறோம்: சர்வதேச நாணய நிதியம்
உடனடி நிதியுதவித் திட்டத்தின் கீழ் 200 மில்லியன் டொலர்கள் நிதியுதவியை வழங்குமாறு இலங்கை அரசாங்கம் எம்மிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பேரனர்த்தத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கை உடனடி நிதியுதவித் திட்டத்தின் கீழ் 200 மில்லியன் டொலர்கள் நிதியுதவியை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கும் நிலையில், அதுகுறித்துப் பரிசீலித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த 5 ஆம் கட்ட மீளாய்வு தொடர்பில் எட்டப்பட்ட உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு அடுத்தகட்ட ஒப்புதலுக்காக எதிர்வரும் 15 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குனர் சபையினால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் 06-12-2025அன்று வொஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் மாதாந்த செய்தியாளர் சந்திப்பின்போது இலங்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜுலி கொஸாக், பேரனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கையின் மீட்சிக்கு உதவக்கூடிய மேலதிக வழிமுறைகள் தொடர்பில் தாம் ஆராய்ந்துவருவதாகவும், அனர்த்தத்தின் பின்னரான இலங்கையின் பொருளாதார நிலைவரம் குறித்த மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டவுடன் தாம் உதவக்கூடிய வழிமுறைகள் தொடர்பில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டப் பணிப்பாளர் எவான் பபஜோர்ஜியோவினால் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (5) இரவு வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
'தித்வா' சூறாவளியினால் இலங்கை மிகமோசமான பாதிப்புக்களுக்கும், தாக்கங்களுக்கும் முகங்கொடுத்திருக்கும் நிலையில், அதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அதேவேளை உடனடி நிதியுதவித் திட்டத்தின் கீழ் 200 மில்லியன் டொலர்கள் நிதியுதவியை வழங்குமாறு இலங்கை அரசாங்கம் எம்மிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இக்கோரிக்கை தொடர்பில் நாம் பரிசீலித்து வருவதுடன், அது நாணய நிதிய இயக்குநர் சபையின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்படும்.
தற்போது இலங்கை மிகச்சவாலான சூழ்நிலைக்கு முகங்கொடுத்திருக்கும் பின்னணியில், இந்நெருக்கடியிலிருந்து மீள்வதையும், நாட்டை மீளக்கட்டியெழுப்புவதையும் முன்னிறுத்தி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருக்கிறோம் என எவான் பபஜோர்ஜியோவின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





