இளையோரில் சுமார் 43 சதவீதமானோர் வேலையற்றிருக்கின்றனர் -சர்வதேச நாணய நிதியம்
கல்வி அமைப்புகளால் உருவாக்கப்படும் திறன்களுக்கும், முதலாளிகளால் எதிர்பார்க்கப்படும் திறன்களுக்கும் இடையே தொடர்ச்சியாக நிலவும் இடைவெளியையும் இந்நிலைமை பிரதிபலிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உயர்கல்வித்தகைமைகளைக் கொண்ட இலங்கையின் இளையோரில் சுமார் 43 சதவீதமானோர் வேலையற்றிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இது கல்வித்தகைமைகளுக்கும் வேலைவாய்ப்புச் சந்தையின் தேவைகளுக்கும் இடையே நிலவும் தீவிர முரண்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
உயர்கல்வி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை சதவீதத்தில், இலங்கை ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளது.
இலங்கையிலும் ஏனைய தெற்காசியப் பொருளாதாரங்களிலும் இளைஞர்கள் கல்வியை முடித்து வேலைவாய்ப்பைப் பெறுவதில் எதிர்கொள்ளும் கடினமான நிலைமையை இத்தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இலங்கையின் மதிப்பிடப்பட்ட 43 சதவீதத்தைத் தொடர்ந்து, இந்தியா சுமார் 42 சதவீதத்துடனும், பங்களாதேஷ் 36சதவீதத்துடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
உலகளவில் இதர நாடுகளின் சராசரி வேலையின்மை சதவீதம் சுமார் 19 சதவீதமாக உள்ள நிலையில், சிங்கப்பூரில் இது சுமார் 8 சதவீதமாகவும், ஜப்பானில் சுமார் 4 சதவீதமாகவும் மிகக் குறைந்தளவில் காணப்படுகிறது.
இத்தரவுகள் இலங்கையின் கல்வி கற்ற இளைஞர்கள் எதிர்கொள்ளும் வேலைவாய்ப்பு சவாலின் பாரதூரமான நிலைமையை வெளிப்படுத்தியுள்ளன.
உயர்கல்வி தகைமைகளைப் பெற்றிருந்தபோதிலும், உயர்கல்வி முடித்த ஒவ்வொரு 10 இலங்கை இளைஞர்களில் 4 பேருக்கு மேல் வேலையற்றவர்களாகவே உள்ளனர்.
உயர்கல்வி பெற்ற இளம் தொழிலாளர்கள் தங்களது தகைமைக்கேற்ற வேலைகளைப் பெறுவதில் சவால்களை எதிர்கொள்வதோடு இந்தப் பிரச்சினையை, ஒரு பிராந்தியப் பிரச்சினையாக சர்வதேச நாணய நிதியம் அடையாளம் கண்டுள்ளது.
கல்வி அமைப்புகளால் உருவாக்கப்படும் திறன்களுக்கும், முதலாளிகளால் எதிர்பார்க்கப்படும் திறன்களுக்கும் இடையே தொடர்ச்சியாக நிலவும் இடைவெளியையும் இந்நிலைமை பிரதிபலிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு, வருமானம் மற்றும் குடும்ப வாழ்வாதாரங்களைப் பாதித்த பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் இலங்கைக்கு இப்பிரச்சினை நெருக்கடியை ஏற்படுத்துவதோடு, கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு உள்ளாகிவரும் பொருளாதாரத்தில், தொழிலாளர் சந்தைக்குள் நுழையும் இளைஞர்கள் தங்களுக்குப் பொருத்தமான வேலைவாய்ப்பைப் பெறுவதில் கூடுதல் சவால்களை எதிர்கொள்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு, தானியங்கிமயமாக்கல் என்பன தொழிலாளர்களுக்கான சூழலை உருமாற்றி வரும் பின்னணியில் இப்பிரச்சினை புதிய சவால்களை உருவாக்கியுள்ளதாகவும், புதிய தொழில்நுட்பங்கள் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், முதலீடுகளை உருவாக்கவும், புதிய வடிவிலான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ள போதிலும், தொழிலாளர்களின் திறன் வளர்ச்சி அதற்கு ஈடுகொடுக்க தவறினால், ஆரம்பநிலை வேலைகளுக்கான தேவை குறையக்கூடும் என்றும் குறித்த தரவுகள் குறிப்பிட்டுள்ளன.
தொழிலாளர் சந்தையின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப கல்வி மற்றும் மறுதிறன் பயிற்சி அமைப்புகளை மேலும் மாற்றியமைப்பதன் முக்கியத்துவத்தை சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளதோடு பட்டதாரிகள் முதலாளிகளின் தேவைகளுக்குப் பொருத்தமான திறன்களைக் கொண்டிருப்பதை பல்கலைக்கழகங்கள், தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப பாடநெறிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரை, கிடைக்கக்கூடிய வேலைகளின் எண்ணிக்கையை மாத்திரமன்றி, பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகளின் தரம் மற்றும் பொருத்தப்பாட்டையும் சீரமைப்பதே முக்கியமான பொருளாதார மாற்றமெனவும், பல்கலைக்கழகங்கள், தொழிற்துறை, திறன் பயிற்சி நிறுவனங்களுக்கு இடையிலான வலுவான தொடர்புகள், கல்வித் தகைமைகளுக்கும் தொழிலாளர் சந்தை தேவைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க உதவும் என்றும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.





