போகம்பரை சிறைச்சாலையை மீண்டும் திறக்கும் தீர்மானத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு
தற்போது நாட்டின் சிறைச்சாலைகளில் கொள்ளளவை விட மூன்று மடங்கு அதிகமான கைதிகள் காணப்படுகின்றனர்.
கண்டி நகரின் மத்தியில் அமைந்துள்ள போகம்பரை சிறைச்சாலையை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் அவசர அவசரமாக எடுத்துள்ள முடிவானது கண்டி மாவட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்திரானி கிரியெல்ல தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் 10-07-2026 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை அடுத்து, நீண்டகாலப் பிரச்சினைக்கு உடனடி நூடுல்ஸ் சமைப்பது போன்ற ஒரு தற்காலிகத் தீர்வை அரசு தேடியுள்ளது. 100 வருடங்களுக்கும் மேல் பழமையான இக்கட்டிடத்தைப் புனரமைக்க மக்களின் வரிப்பணம் பில்லியன் கணக்கில் வீணடிக்கப்படவுள்ளது.
தலதா மாளிகை அமைந்துள்ள புனித பூமியின் மையப்பகுதியில் இருக்கும் இச்சிறைச்சாலை, சமூக மற்றும் கலாச்சார நகர அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டே கடந்த 2014ஆம் ஆண்டு மகாநாயக்க தேரர்களின் ஆசீர்வாதத்துடன் பல்லேகல பகுதிக்கு மாற்றப்பட்டதுடன், 1876இல் பிரித்தானியர்களால் கட்டப்பட்ட இக்கட்டிடம் காலனித்துவப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் ஒரு வரலாற்றுச் சின்னமாகும்.
நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் 12 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்த உயர் மதிப்புமிக்க நிலத்தில், ஜப்பானிய நிதியுதவியுடன் சுற்றுலாத்துறை மற்றும் பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு வசதிகளை உள்ளடக்கிய 'கண்டியன் அரீனா' பன்னோக்கு மையத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், பல்வேறு நெருக்கடிகளால் அது தடைப்பட்டது.
திறைசேரியில் பணம் இருப்பதாக அமைச்சர்கள் கூறும் நிலையில், அந்த பணப் பெட்டிகளைப் பூட்டி வைக்காமல், கண்டி மக்களின் நலனுக்காகவும் 2000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் இத்திட்டத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கொண்டு மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்.
தற்போது நாட்டின் சிறைச்சாலைகளில் கொள்ளளவை விட மூன்று மடங்கு அதிகமான கைதிகள் காணப்படுகின்றனர். அதற்குப் போகம்பரை சிறையைத் திறப்பது தீர்வல்ல. சிறைகளிலுள்ள 75 சதவீதமான விளக்கமறியல் கைதிகளின் நெருக்கடியை குறைக்க மாற்று வழிகளைக் கையாள வேண்டும் என்றார்





