தீர்வு கோரி கதிரியல் தொழில்நுட்பவியலாளர்களால் விடுக்கப்பட்ட காலக்கெடு புதன்கிழமையுடன் நிறைவு
எமது கோரிக்கைக்கு அமைவாக, ஒரு வார காலத்திற்குள் இது குறித்து உரிய தீர்மானம் எடுக்கப்படும் என சுகாதார பிரதி அமைச்சர் உறுதியளித்திருந்தார்.
மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரின் முறையற்ற செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, வழங்கப்பட்ட ஒரு வார கால அவகாசம் எதிர்வரும் புதன்கிழமை (28) முடிவடைவதால், அன்று முதல் நாடு தழுவிய ரீதியில் தொடர்ச்சியான தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச கதிரியல் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் 26-01-2026 அன்று அச்சங்கத்தின் தலைவர் சானக்க தர்ம விக்ரம மேலும் தெரிவித்துள்ளதாவது, மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றும் அதிகாரியின் சட்டவிரோதமான மற்றும் ஒழுக்கமற்ற செயல்கள் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். அவ்விசாரணை முடியும் வரை அவரை அந்தப் பதவியிலிருந்தும் வைத்தியசாலையிலிருந்தும் தற்காலிகமாகவேனும் நீக்க வேண்டும் என கடந்த 21 ஆம் திகதி சுகாதார பிரதி அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது நாம் வலியுறுத்தியிருந்தோம்.
எமது கோரிக்கைக்கு அமைவாக, ஒரு வார காலத்திற்குள் இது குறித்து உரிய தீர்மானம் எடுக்கப்படும் என சுகாதார பிரதி அமைச்சர் உறுதியளித்திருந்தார். இருப்பினும், இதுவரையில் அக்கோரிக்கை தொடர்பாக எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தொடர்ந்தும் தவறு செய்யும் நபர்களைப் பாதுகாப்பதையே இத்தகைய செய்கள் சுட்டிக்காட்டுகின்றன. அக்கறைப்பற்று வைத்தியசாலைப் பணிப்பாளர் மற்றும் மாளிகாவத்தை பிரதிப் பணிப்பாளர் ஆகிய இருவரின் விவகாரத்திலும் வெவ்வேறு தீர்மானங்களை எடுத்துள்ளனர்.
அதிகாரிகளின் அசமந்த போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், எதிர்வரும் 28 ஆம் திகதி புதன்கிழமை காலை 8.00 மணி முதல், எமக்கான தீர்வு கிடைக்கும் வரை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் கதிரியல் தொழில்நுட்ப வல்லுநர்கள் தொடர்ச்சியான தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர். சுகாதாரத் துறையில் சட்டவிரோத மற்றும் ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள், அவர்களுக்குப் பாதுகாப்பளிக்கும் அமைச்சின் அதிகாரிகள் தொடர்பில் அவதானத்துடன் உள்ளோம்.
இது குறித்து சுகாதார அமைச்சர் விசேட கவனம் செலுத்த வேண்டும். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தினால் நோயாளி பராமரிப்பு சேவைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு, தமது பொறுப்பைத் தட்டிக்கழித்த சுகாதார அமைச்சின் அதிகாரிகளே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றார்.





