துண்டிக்கப்பட்ட வீதி இணைப்பை சீரமைப்பதற்கு தற்காலிக பாலங்கள் - இந்தியா உதவி
சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், தனியார் நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பல வழிகளிலும் இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருகின்றனர்.
பேரனர்த்தத்தின் விளைவாக நாடளாவிய ரீதியில் பெருநகரங்கள், கிராமங்களை இணைக்கும் வீதிகளில் பெரும்பாலானவை பகுதியளவிலும், முழுமையாகவும் சேதமடைந்துள்ள நிலையில், அவ்வீதிப்போக்குவரத்தை மீளுறுதிப்படுத்தும் வகையில் தற்காலிக இரும்புப் பாலங்களை அமைப்பதற்கு அவசியமான தொகுதிகளையும், அவற்றை நிறுவும் ஆற்றல் உள்ள பொறியியலாளர்களையும் இந்தியா அனுப்பிவைத்துள்ளது.
'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், தனியார் நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பல வழிகளிலும் இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருகின்றனர்.
அதற்கமைய முதலாவதாக இலங்கைக்கு உதவிகளை வழங்கிய இந்தியா, 'ஒப்பரேஷன் சாகர் பந்து' எனும் பெயரின்கீழ் நிவாரணப்பொருட்கள், மீட்புப்பணியாளர்கள், மருத்துவ உதவிகள், கட்டுமான உதவிகள் எனத் தொடர்ச்சியாகப் பரந்துபட்ட உதவிகளை வழங்கிவருகிறது.
பேரனர்த்தத்தின் விளைவாக நாடளாவிய ரீதியில் பெருநகரங்கள், கிராமங்களை இணைக்கும் வீதிகளில் பெரும்பாலானவை பகுதியளவிலும், முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. அதன்விளைவாக பெரும்பாலான இடங்களில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவசியமான நிவாரணப்பொருட்களைத் தரைவழியாகக் கொண்டுசெல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் இந்தியா வழங்கிவரும் தொடர் உதவிகளின் நீட்சியாக, ஸ்தம்பிதமடைந்திருக்கும் வீதிப்போக்குவரத்தை சீரமைக்கும் வகையில் 'பெய்லி பிரிட்ஜ்' எனப்படும் தற்காலிகப் பாலங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
'பெய்லி பிரிட்ஜ்' என்பது இரும்பினாலான பகுதிகளை உரிய இடங்களில் பொருத்தி தற்காலிகமாக நிர்மாணிக்கப்படும் பாலமாகும். அத்தகைய பாலங்களை நிறுவுதற்கு அவசியமான 65 தொன் தொகுதிகளையும், அவற்றை நிறுவுவதற்கான நுட்பங்களை அறிந்த பொறியியலாளர்களையும் ஏற்றிய விமானம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நாட்டை வந்தடைந்தது.
இந்நிலையில் அனர்த்தத்தினால் சேதமடைந்த முக்கிய பாதைகளின் இணைப்பை மீள நிறுவும் வகையில், அவ்விடங்களில் 'பெய்லி' பாலங்களை நிறுவும் பணிகள் இந்தியப் பொறியியலாளர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.





