முன்பள்ளி கல்வியின் தரத்தை உறுதிப்படுத்தும் பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்கிறோம் - பிரதமர் ஹரிணி
முன்பள்ளிக் கல்வியின் மூலம் குழந்தையின் ஆரம்பக் கல்விக்குத் தேவையான சிறந்த அடித்தளத்தை அமைக்க வேண்டும்.
ஒரு குழந்தையின் எதிர்காலக் கல்விப் பயணத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான மைல்கல் முன்பள்ளிக் கல்வியாகும். எனவே, அதன் தரத்தை உறுதிப்படுத்தும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகவும், அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் முன்பள்ளிக் கல்வி நடவடிக்கைகளைச் சரியான கண்காணிப்பிற்கு உட்படுத்த வேண்டும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
குருநாகல் மாவட்டத்தில் கல்வி கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்ட பிரதமர், 05-06-2026அன்று குருநாகல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற வடமேல் மாகாண முன்பள்ளி ஆசிரியர் பயிற்சி நிலையத்தின் 2023/2024 ஆம் ஆண்டிற்கான டிப்ளோமாதாரிகளுக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், எதிர்வரும் ஆண்டுகளில் முன்பள்ளிக் கல்வியில் நிலைத்தන්மையை ஏற்படுத்த நாம் திட்டமிட்டுள்ளோம். இதற்காக தேசிய கல்வி ஆணைக்குழு, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு ஆகியன கல்வி அமைச்சுடன் இணைந்து அதற்கான கொள்கைகள், ஆசிரியர் பயிற்சிக்கான அளவுகோல்கள் மற்றும் கண்காணிப்பு விதிமுறைகளைத் தயாரிக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றன.
இந்த ஆண்டில் முன்பள்ளி ஆசிரியர் பயிற்சிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் 2027 ஆம் ஆண்டளவில் நாடளாவிய ரீதியிலான முன்பள்ளிகளுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கிறோம். அத்துடன், முன்பள்ளிக் கல்வி குறித்த சரியான புரிதலைச் சமூகமயப்படுத்துவதும் முக்கியமானதாக அமைகின்றது.
முன்பள்ளிக் கல்வியின் மூலம் குழந்தையின் ஆரம்பக் கல்விக்குத் தேவையான சிறந்த அடித்தளத்தை அமைக்க வேண்டும். எனவே, குழந்தையின் இயக்கத் திறன்கள் மற்றும் வயதுக்கு ஏற்ற பிற தகுதிகளை விருத்தி செய்வதையே முன்பள்ளிக் கல்வி இலக்காகக் கொள்ள வேண்டும்.
பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் என்ற வகையில், குழந்தை மீது தேவையற்ற சுமைகளை ஏற்படுத்தாது, அவர்களின் வயதுக்கு ஏற்ற சமூகத்திறன் மற்றும் அறிவை வளர்த்துக்கொள்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது எமது பொறுப்பாகும். முன்பள்ளி ஆசிரியர்களாக, முன்பள்ளிக் கல்வியின் உண்மையான நோக்கத்தைச் சமூகத்திற்கு எடுத்துரைப்பதில் உங்களுக்குப் பெரும் பொறுப்பு உள்ளது என்றார்.





