ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேனவுக்கு பிணை
சந்தேகநபரான கபில சந்திரசேன 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.
ஸ்ரீலங்கன் எயார்பஸ் விமானக் கொள்வனவின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் பல கோடி ரூபாய் மோசடி விவகாரம் தொடர்பில் கைதான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேனவை கடும் நிபந்தணைகளுடன் கூடிய பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதம நீதிவான் 05-05-2026 அன்று உத்தரவிட்டது.
அதற்கமைய சந்தேகநபரான கபில சந்திரசேன 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கு கொழும்பு நீதிவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்திருந்தார்.
கடந்த வழக்கு விசாரணையின் போது சந்தேகநபர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கை தொடர்பான உத்தரவைப் பிறப்பிப்பதற்காகவே நேற்றைய தினம் வழக்கு திகதியிடப்பட்டிருந்தது. பிணை தொடர்பான உத்தரவைப் பிறப்பித்த நீதிவான், வழக்கின் தற்போதைய நிலைமை மற்றும் சந்தேகநபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி முன்வைத்த விடயங்களை விசேட காரணங்களாகக் கருத்திற்கொண்டு, சந்தேகநபரைப் பிணையில் விடுவிப்பதாக அறிவித்தார்.
அதன்படி, சந்தேகநபரை 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டார். அத்துடன், சந்தேகநபருக்கு வெளிநாட்டு பயணத் தடையை விதித்த நீதிமன்றம், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டது. மேலும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து இதன்போது விளக்கமளித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள், இந்த விசாரணை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன மற்றும் வில்லி கமகே ஆகியோரை ஆணைக்குழுவுக்கு அழைத்துள்ளதாகத் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அதிகாரிகள், விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிவிக்க மற்றுமொரு திகதியை வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரினர். மன்றில் முன்ழவைக்கப்பட்ட விடயங்களை பரிசீலனை செய்த நீதிவான், மேற்படி வழக்கை எதிர்வரும் ஜூலை 14 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டார்.





