புதிய தேசிய இளைஞர் கொள்கை வேலைத்திட்டம் ஆரம்பம்
பொதுத்துறை மற்றும் சிவில் சமூகத்திற்கான இந்த முன்மொழியப்பட்ட கொள்கை திட்டம் வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் உத்தியோகபூர்வ செய்தியாளர் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இலங்கையில் தேசிய நல்லிணக்கம், நீதி, சமூக ஒற்றுமை மற்றும் இளைஞர் மேம்பாடு ஆகியவற்றை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட புதிய தேசிய இளைஞர் கொள்கை வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு குளோபல் யுனைட்ஸ் அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த வேலைத்திட்டம் தொடர்பான சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பு 21-05-2026 அன்று கொழும்பு 07, வித்யா மாவத்தையில் அமைந்துள்ள லியோ இளைஞர் மையத்தில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே குளோபல் யுனைட்ஸ் அமைப்பின் தலைவரும் நிறுவனருமான பிரசாத் டி விசர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், முப்பது வருட கால உள்நாட்டு யுத்தம் மற்றும் பிரிவினைகளால் பாதிக்கப்பட்ட ஒரு நாடாக இலங்கை இருந்து வந்துள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் மூலம், பல்வேறு இனங்கள், மதங்கள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 15-45 வயதுக்குட்பட்ட இளைஞர் யுவதிகளை ஒன்றிணைத்து, நாட்டின் எதிர்காலத்;துக்கான புதிய தேசிய திட்டத்தை வகுப்பதற்கு குளோபல் யுனைட்ஸ் அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் முக்கிய நோக்கம், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இளைஞர் தலைமுறையின் குரலுக்கு முன்னுரிமை வழங்குவதாகும்.
குளோபல் யுனைட்ஸ் அமைப்பு, இலங்கை முழுவதும் உள்ள இளைஞர்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக நாடு முழுவதும் கிட்டத்தட்ட 13 பிராந்திய மட்ட கலந்துரையாடல் தொடர் ஒன்றையும் தேசிய இளைஞர் கணக்கெடுப்பு ஒன்றையும் ஆரம்பிக்கவுள்ளோம். இந்தக் கணக்கெடுப்பின் மூலம், இளைஞர் தலைமுறையின் எதிர்பார்ப்புகள், பிரச்சினைகள், வேலைவாய்ப்பு மற்றும் சமூக ஒற்றுமை குறித்த கருத்துக்களைப் பெறுவதற்கு நோக்கமுள்ளதாகும். நாடு முழுவதும் 25 மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 2500 நபர்களது தரவுகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம். இளைஞர் குரலை விழிப்பூட்டுவதற்காக பிளாட்பார்ம் நெக்ஸ்ட் ஜென் எனும் தேசிய பேச்சு போட்டி ஒன்றையும், நாட்டின் மாற்றம் குறித்த பல்வேறு இலங்கையர் கருத்துக்களை உள்ளடக்கிய என் நாடு எனும் பெயரில் நேர்காணல் தொடர் ஒன்றையும் அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இந்த செயல்முறையின் இறுதியில், வகுக்கப்பட்ட இறுதி கொள்கை முன்மொழிவுகள், ஜனாதிபதி, பிரதமர், நீதி அமைச்சர், இளைஞர் விவகாரங்கள் அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களிடம் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்படவுள்ளன. இதனை மேலதிகமாக, இந்த முன்மொழிவுகள் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இலங்கையில் நல்லிணக்கம், நீதி மற்றும் இளைஞர் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் சர்வதேச பங்காளர்களிடமும் வழங்கப்படவுள்ளன.
பொதுத்துறை மற்றும் சிவில் சமூகத்திற்கான இந்த முன்மொழியப்பட்ட கொள்கை திட்டம் வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் உத்தியோகபூர்வ செய்தியாளர் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த இளைஞர் தேசிய முற்போக்கு இயக்கத்துடன் கைகோர்க்குமாறு ஊடகவியலாளர்கள், சிவில் சமூக அமைப்பு பிரதிநிதிகள், இளைஞர் தலைவர்கள், மேம்பாட்டு பங்காளர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைத்து தரப்பினருக்கும் குளோபல் யுனைட்ஸ் அமைப்பு அழைப்பு விடுக்கிறது என்றார்.





