மிக வலுவான நிலையில் இலங்கையின் செயற்பாடுகள் - சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் பாராட்டு
இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வலுவானதும், சகலரையும் உள்ளடக்கியதுமான சட்ட சபையாக அமைந்திருப்பதாகவும் அவர் நாணய நிதியப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினார்..
விரிவாக்கப்பட்ட நிதிவசதி செயற்திட்டத்தின் கீழ் இலங்கையின் செயற்பாடுகள் மிகவும் வலுவான நிலையில் இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள், நிலையான மறுசீரமைப்புக்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் தொடர்பான ஐந்தாம் மற்றும் ஆறாம் கட்ட மீளாய்வுகளை மேற்கொள்வதற்காக நாட்டுக்கு வருகைதந்திருக்கும் எவான் பபஜோர்ஜியோ தலைமையிலான சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் 02-04-2026 அன்று சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன மற்றும் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி ஆகியோருடன் சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர்.
இச்சந்திப்பின்போது இலங்கையின் பொருளாதார மீட்சி சார்ந்த நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கிவரும் தொடர் ஒத்துழைப்புக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அத்தோடு இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வலுவானதும், சகலரையும் உள்ளடக்கியதுமான சட்ட சபையாக அமைந்திருப்பதாகவும் அவர் நாணய நிதியப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின் கடப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்கான அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டை இலங்கை கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட சபாநாயகர், வலுவான நிதியியல் மற்றும் பணக்கொள்கை பேணப்படவேண்டியதன் அவசியம் தொடர்பிலும் வலியுறுத்தினார்.
அதேவேளை பொதுநிதி முகாமைத்துவச் சட்டம், ஊழல் எதிர்ப்புச்சட்டம் போன்ற முக்கிய சட்டங்களை நிறைவேற்றுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுக்கு விளக்கமளித்த சபாநாயகர், நிதி ஒழுக்கத்தையும் நல்லாட்சியையும் உறுதிப்படுத்துவதற்கு இச்சட்டங்கள் அவசியமானவை எனத் தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்த எவான் பபஜோர்ஜியோ, விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின் கீழ் இலங்கையின் செயற்பாடுகள் மிகவும் வலுவான நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்டதுடன், நிலையான மறுசீரமைப்புக்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.
மேலும் தற்போது மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் மோதல்களினால் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.





