இலங்கையை உலகில் மனிதநேயம் மிக்க நாடாக மாற்றுவதே பிரதான எதிர்பார்ப்பு ஜனாதிபதி
புதியதொரு எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கத்துடனேயே நாம் மகளிர் தினத்தைக் கொண்டாடும் இத்தருணத்தில் செயற்படுகின்றோம் என நாம் நம்புகிறோம்.
உலகில் எவ்வளவு வளர்ச்சியடைந்த நாடுகள் இருந்தாலும், இலங்கை எத்தகைய பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தாலும், மனிதநேயம் நிறைந்த மக்கள் வாழும் ஒரே நாடு இலங்கை என்ற நாமத்தை உலகிற்கு கொண்டு சென்றுள்ளோம்.இலங்கையை உலகில் மனிதநேயம் மிக்க நாடாக மாற்றுவதே தமது எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் 08-03-2026 அன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: உலகில் எவ்வளவு வளர்ச்சியடைந்த நாடுகள் இருந்தாலும், இலங்கை எத்தகைய பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தாலும், மனிதநேயம் நிறைந்த மக்கள் வாழும் ஒரே நாடு இலங்கை என்ற நாமத்தை உலகிற்கு கொண்டு செல்கிறது. அனைத்து மக்களையும் பேதமின்றி, புரிதலுடன் நடத்தும் ஒரு அரசாக மாற்றுவதில் இந்நாட்டு சிறுவர்களும் பெண்களும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளனர். தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவது தொடர்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமீபத்திய வரலாற்றில் அதிகளவான பெண்கள் ஓரிடத்தில் திரண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.ஒரு அரசாங்கமும் ஆட்சியும் சிறந்ததா என்பதை அளவிடுவதற்கான சிறந்த அளவுகோல் இதுவாகும். எமது ஆட்சி மற்றும் எமது அரசாங்கத்தின் நிர்வாகம் தொடர்பில் இந்நாட்டில் உள்ள பொதுவான நம்பிக்கையின் அடையாளமாக பெண்கள் ஆயிரக்கணக்கில் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு அதனை இன்று நிரூபித்துள்ளீர்கள்.
பெருந்துயரத்தையும் வேதனையையும் ஒரு பாரிய சுமையாகத் தமது தலையிலும் இதயத்திலும் சுமந்து கொண்டு இருக்கும் பெண்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியானதொரு எதிர்காலத்தை உருவாக்குவதற்காக நாம் செயற்பட்டு வருகிறோம்.அதுவே எமது பிரதான நோக்கமாகும். ஒரு நாடாகவும், ஒரு தேசமாகவும் நாம் ஒட்டுமொத்தமாக எவ்வாறு மேலெழுவது என்ற வேலைத்திட்டத்திற்குள், பெண்களுக்கே உரிய தனித்துவமான பிரச்சினைகள், மற்றும் அவள் பெண்ணாக இருப்பதனால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்தி திட்டங்களை வகுத்துள்ளோம்.
போதைப்பொருள் இளைஞர்களை அடிமையாக்கியுள்ளது. இது தாய்மார்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தமது பிள்ளை போதைப்பொருளுக்கு அடிமையாவது ஒரு தாய்க்கு வேதனையைத் தரும்.உறவினர்கள் மத்தியிலும் கிராமத்திலும் பிள்ளை ஒதுக்கப்படுவதனால் தாய்மார்கள் நிர்க்கதியாகியுள்ளனர். அதனால் நச்சுப் போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளோம். போதைப்பொருளை முழுமையாக முழுவுக்கு கொண்டு வருவோம்.
தமது பிள்ளைக்குச் சிறந்த கல்வியை வழங்குவதே தாய்மார்களின் பிரதான எதிர்பார்ப்பு.அடுத்த வருடம் தரம் 6 முதல் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்படும் பரிவுணர்வுள்ள ஒரு பிள்ளையை உருவாக்கக்கூடிய கல்வி முறையொன்று ஸ்தாபிக்கப்படும். பெண்களினால் கடனைப் பெறுவதற்குச் சொத்துக்கள் இல்லாவிட்டால், அதற்கான உத்தரவாதத்தை அரசாங்கமே வழங்கக்கூடிய வகையிலான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படும். கடனைச் செலுத்தப் பெண்களுக்கு முடியாமல் போனால் அதனை அரசாங்கம் செலுத்தும்.
நுண்நிதி கடன்களின் வட்டி காரணமாகக் கிராமங்களில் அதிகளவான பெண்கள் உயிரிழந்துள்ளனர்.கிராமப்புறப் பெண்கள் இந்தக் கடன் வலையில் சிக்கியுள்ளனர்.அதிலிருந்து பெண்களை மீட்பதற்காகச் சட்டங்கள் உருவாக்கப்படும். மறுபுறம் திட்டத்தை வெற்றிகரமாகக் கண்காணித்துச் செயற்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் சலுகை வட்டியில் கடன் வழங்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படும்.
சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும்,பெண்களின் பாதுகாப்பிற்கான தற்போதைய சட்டங்கள் போதாது என்றால் புதிய சட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.நீண்ட காலமாக வேதனையையும் துயரத்தையும் இதயத்தில் தாங்கி, அதனைத் தலையில் சுமையாகக் கொண்ட எமது நாட்டுப் பெண்களை அந்தச் சுமையிலிருந்து விடுவித்து, புதியதொரு எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கத்துடனேயே நாம் மகளிர் தினத்தைக் கொண்டாடும் இத்தருணத்தில் செயற்படுகின்றோம் என நாம் நம்புகிறோம்.
சில குறிப்பிட்ட கலாசாரங்கள் காரணமாகப் பெண்கள் ஒடுக்கப்பட்டுள்ளனர் அவ்வாறான பெண்களை விடுவிப்பதற்குத் தேவையான புதிய சட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் அது கலாசார மோதல்களை ஏற்படுத்தாத வகையில் தேசிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்படும் என்றார்.





