சகல சமூகங்களினதும் மேம்பாட்டை உறுதிப்படுத்துவதே எமது இலக்கு: பிரதமர் ஹரினி
ஐக்கிய நாடுகள் பிரகடனத்தில் உள்வாங்கப்பட்டுள்ள இந்தகோட்பாடுகள் தற்போதைய சூழ்நிலைக்கும் பொருத்தமானவையாக உள்ளன' எனவும் பிரதமர் அங்கு குறிப்பிட்டார்.
 
        
அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டமானது நிலைபேறான தன்மை மற்றும் தனிமனித கௌரவம் என்பவற்றையே ஆணிவேராகக் கொண்டிருப்பதாகவும், முன்னேற்றமானது நாட்டின் சகல பகுதிகளையும் சென்றடைவதையும், அனைத்து சமூகங்களையும் மேம்படுத்துவதையும் உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு எனவும் பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் தினத்தை நினைவுகூரும் வகையில் 24-10-2025 அன்று கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது ஐக்கிய நாடுகள் சபை சுமார் 8 தசாப்தங்களாக உலகளாவிய ரீதியில் ஆற்றிவரும் சேவையையும், 7 தசாப்தகாலமாக இலங்கையுடன் பேணிவரும் அர்த்தமுள்ள தொடர்பையும் பாராட்டிய பிரதமர், ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின் கோட்பாடுகளைப் பின்பற்றுவதிலும், அமைதி, மனித உரிமைகள், நிலையான அபிவிருத்தி மற்றும் உலகளாவிய சவால்களைக் கையாள்வதற்கான பல்தரப்பு ஒத்துழைப்பு என்பவற்றை மேம்படுத்துவதிலும் அரசாங்கம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டை மீளுறுதிப்படுத்தினார்.
'எட்டு தசாப்தங்களுக்கு முன்னர் அடுத்த தலைமுறையினரை போரின் தாக்கங்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் உலகநாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து மனித உரிமைகள் மீதான நம்பிக்கையையும், சமூக முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தி மேம்பாட்டையும் மீளுறுதிப்படுத்தின. ஐக்கிய நாடுகள் பிரகடனத்தில் உள்வாங்கப்பட்டுள்ள இந்தகோட்பாடுகள் தற்போதைய சூழ்நிலைக்கும் பொருத்தமானவையாக உள்ளன' எனவும் பிரதமர் அங்கு குறிப்பிட்டார்.
மேலும் இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை நினைவுகூர்ந்த பிரதமர் ஹரினி அமரசூரிய, 1955 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை ஒரு பொறுப்புவாய்ந்த உறுப்புநாடாக இருப்பதாகவும், உலகளாவிய அமைதி, இராஜதந்திர நகர்வுகள் மற்றும் நிலையான அபிவிருத்தி என்பவற்றுக்குக் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.





 
  
