'பந்து' இலங்கையிடம் தான் உள்ளது: ரஷ்ய தூதுவர் தெரிவிப்பு
முன்னாள் எரிசக்தி அமைச்சர், கடந்த ஆண்டு ரஷ்யாவின் அரச அணுசக்தி நிறுவனமான ரோசாட்டமின் உயர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ரஷ்யா அணுசக்திதுறை ரீதியான வளர்ச்சியில் இலங்கையுடன் ஒத்துழைக்க தயாராக இருக்கின்றபோதும் நாட்டின் இறையாண்மை மீறும் வகையில் எவ்விதமான திணிப்பையும் செய்யாது என்று இலங்கைக்கான ரஷ்ய தூதவர் லெவன் செகார்யன் தெரிவித்தார்.
இலங்கையில் அணுமின் நிலையம் அமைப்பது தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்தபோதே வெர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எமது தரப்பில் இலங்கையின் அணுசக்தித்துறையுடன் இணைந்து செயற்படுவதற்கும் அதற்கான வளர்ச்சி தொடர்பிலும் ஒத்துழைப்புக்களை வழங்கத் தயாராகவே உள்ளோம். அணு மின் நிலையம் அமைப்பதற்கான திட்டம் குறித்து உரையாடுவதற்காக இலங்கை எரிசக்தி அமைச்சருடன் ஒரு சந்திப்பை மேற்கொள்வதற்கு முயற்சிகளை எடுத்துள்ளோம்.
முந்தைய மற்றும் தற்போதைய அரசாங்கங்களின் கீழ், இலங்கை அதன் எரிசக்தி துறையில் அணுசக்தி திட்டங்களை முன்மொழிந்துள்ளது. முந்தைய அரசாங்கம் 900 மெகாவாட் திறன் கொண்ட மூன்று அணுமின் நிலையங்களை நிர்மாணிப்பதற்கு முன்மொழிந்துள்ளது.
முன்னதாக, முன்னாள் எரிசக்தி அமைச்சர், கடந்த ஆண்டு ரஷ்யாவின் அரச அணுசக்தி நிறுவனமான ரோசாட்டமின் உயர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர், அவர் ரஷ்யாவின் மூத்த வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளைச் சந்தித்தபோது இலங்கையில் அணுமின் திட்டங்களை நிர்மாணிப்பதற்கான யோசனைகளை முன்வைத்தார்.
முதலில் ஒவ்வொன்றும் 55 மெகாவாட் கொண்ட இரண்டு அலகுகள் கொண்டு 110மெகாவாட் திறன் கொண்ட சிறிய அணு மின் நிலையத்தை அமைக்கும் திட்டம் காணப்டுகின்றது. அதேநேரத்தில் தேவையைப் பொறுத்து குறித்த திட்டத்தின் கீழ் ஆறு அலகுகளாக விரிவுபடுத்தும் விருப்பத்தையும் இலங்கை வெளிப்படுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், நான் எப்போதும் சொல்வது போல் 'பந்து' உங்களிடம் தான் உள்ளது. அதாவது நாட்டின் நீதிமன்றத்தின் தீர்மானத்தில் தான் உள்ளது என்றார்.
இதேவேளை, ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து கருத்து தெரிவித்த அவர், மேற்கத்திய சக்திகளின் அழுத்தம் இருந்தபோதிலும் இலங்கையின் நடுநிலை நிலைப்பாட்டை ரஷ்யா பாராட்டுகிறது என்றார். இந்தப் போரில் எந்த சக்தியும் ரஷ்யாவை தோற்கடிக்க முடியாது என்றார்.