மன்னாரில் காற்றாலை திட்டத்தால் பதற்றம்: பொலிஸார் தாக்குதல்
மன்னார் மாவட்டத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கனிய மணல் அகழ்வு, மற்றும் காற்றாலை மின்திட்டத்தினை முழுமையாக நிறுத்தக்கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர்போராட்டம் 27-09-2025 அன்று 55நாளாகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மன்னாரில் காற்றாலைத் திட்டத்தினை முன்னெடுப்பதற்காக காற்றாலைக் கோபுரங்களை அமைப்பதற்கான பாகங்களை மன்னார் தீவுக்குள் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைளை பொதுமக்கள் மன்னார் நகரின் பிரதான சுற்றுவட்டத்தில் அணிதிரண்டு தடுத்து நிறுத்த முற்பட்டபோது பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலைமை ஏற்பட்டது.
இதனையடுத்து பொலிஸார் போராட்டக்காரர்களை அகற்றுவதை இலக்காகக் கொண்டு மேற்கொண்ட தாக்குதல்களில் பலர் காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த சம்வம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, மன்னார் மாவட்டத்தின் தீவுப்பகுதிக்குள் காற்றாலைக் கோபுரங்களை அமைக்கும் பணிகளை கைவிடுமாறு கோரி மன்னார் மக்கள் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் ஜனாதிபதி அநுரகுமாரவையும் சந்தித்து உரையாடியிருந்தனர்.
இதன்போது ஒருமாதகால அவகாசம் வழங்கப்பட்டு குறித்த காற்றாலை கோபுரங்களால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் மக்களின் கருத்துக்கள் உள்ளிட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட குழுவானது, மன்னாருக்கு விஜயம் செய்து ஆய்வுகளைச் செய்திருந்த நிலையில் அதன் அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள 14கோபுரங்களை அமைக்கும் செயற்பாட்டை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு அனுமதி அளித்து கட்டளை பிறப்பித்திருந்தார்.
அதனையடுத்து குறித்த காற்றாலை கோபுரங்களை அமைக்கும் தனியார் நிறுவனம் தமது செயற்றிட்டத்துக்கான இரண்டு தொகுதி காற்றாலை பாககங்களை மன்னார் தீவுக்குள் கொண்டு செல்லும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
அதனயடுத்து மன்னார் தீவுப்பகுதிக்குள் காற்றாலை கோபுரங்களை அமைப்பதற்காக பாகங்களை கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் 26-09-2025 இரவு 10முதல் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, காற்றாலை கோபுரங்களை அமைக்கும் பாகங்களை மன்னார் தீவுக்குச் செல்வதற்கு முன்னதாக தடுத்து நிறுத்திய பொதுமக்கள் வீதியை மறித்தவாறு குறித்த வாகங்களை மீண்டும் திரும்பிச் செல்லுமாறு வலியுறுத்தினார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வீதிக்கு நடுவே அமர்ந்திருந்தும், நின்றிருந்தமையாலும் குறித்த வாகனங்கள் நகரமுடியாத நிலைமைகள் ஏற்பட்டன. இவ்வாறு சுமார் இரண்டு மணிநேரம் குறித்த வாகனங்கள் காணப்பட்ட நிலையில் அவ்விடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.
ஆரம்பத்தில் பொலிஸார் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்ட நிலையில் பின்னர், கலகமடக்கும் பொலிஸாரும், சிறப்பு அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டு பெருமளவில் குவிக்கப்பட்டதோடு போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக வீதியை இடைமறித்துள்ள மக்கள் அகலுமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில், மன்னார் மாவட்டத்தில் பல பங்குகளில் பணியாற்றும் அருட்தந்தையர்களும், பிரஜைகள் குழுவினர், பொது அமைப்புக்களின் ஒன்றியத்தினர், வர்த்தக சங்கத்தினர் உட்பட பல்வேறு தொழில்சங்கத்தினரும் அங்கு பிரசன்னமாகினார்கள்.
சுமார் நள்ளிரவு 12 மணியளவில் குறித்த காற்றாலை கோபுரங்களின் பாகங்கள் தீவுப்பகுதிக்கு கொண்டு செல்லப்படுவதற்கான அனைத்து ஆயத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் வீதியை இடைமறித்திருந்த பொதுமக்கள், அருட்தந்தையர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் என்று அனைவர் மீதும் பொலிஸார் தடியப்பிரயோகம் உட்பட தாக்குதல்களை மேற்கொண்டு
செல்லப்பட்ட நிலையில் பொது மக்கள் மற்றும் அருட்தந்தையர்கள் வீதிகளில் இறங்கி தடுக்க முற்பட்ட நிலையில் பொலிஸார் கொடூரமாக பெண்கள் அருட்தந்தையர்கள் என அனைவர் மீது தாக்குதல் மேற்கொண்டு கூட்டத்தை கலைக்க முற்பட்டனர்.
அத்துடன், ஆயுதங்களை காண்பித்து தங்களை அச்சுறுத்தி வீதியிலிருந்து அகற்றியதாகவும் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அகற்றுவதற்காக பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல்களில் நால்வர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். அவர்களில் ஒரு ஆணும் மூன்று பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக நோயாளர்காவு வண்டியின் உதவியுடன் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதேவேளை சிறு காயங்களுடன் பலர் அவ்விடத்திலிருந்து அகலவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டனர்.
இந்நிலையில், காற்றாலை கோபுரங்களின் பாகங்களை ஏற்றிவந்திருந்த கனரக வாகனங்கள் அனைத்தும் பொலிஸாரின் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் கோபுரங்களை அமைப்பதற்கு அடையாளம் காணப்பட்ட சௌத்பார் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் பொதுப்போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும், போராட்டத்தில் முன்னின்றவர்களையும் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேநேரம், மன்னார் மாவட்டத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கனிய மணல் அகழ்வு, மற்றும் காற்றாலை மின்திட்டத்தினை முழுமையாக நிறுத்தக்கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர்போராட்டம் 27-09-2025 அன்று 55நாளாகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்தப்போராட்டத்தில் சிவஞானம் சிறிதரன் எம்.பி உட்பட பல்வேறு தரப்பினரும் பங்கேற்று தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.





