22ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு எதிராக சுயாதீன தொழிற்சங்கங்கள் ஒன்றிணைவு அமைதிப் போராட்டம்
முதலாவது கூட்டுப் பொது நடவடிக்கையாக, நாளை (01) நண்பகல் 12.00 மணிக்குக் கொழும்பு கோட்டையில் அமைதிப் போராட்டம் ஒன்றை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு எதிராகச் சுயாதீன தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கூட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும், இதன் முதலாவது கட்டமாக இன்று கொழும்பு கோட்டையில் அமைதிப் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்க அலுவலகத்தில் 31-08-2026 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நீதித்துறை சுயாதீனத்துக்கான தொழில்சார் வல்லுநர்களின் தேசியக் குழுவின் அழைப்பாளர் குழுவின் சார்பில் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு எதிராகக் கூட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கில், சுயாதீன தொழிற்சங்கங்களால் தயாரிக்கப்பட்ட பொது உடன்படிக்கை ஆவணத்தில் நேற்று இலங்கை சட்டத்தரணிகள் சங்க அலுவலகத்தில் கையொப்பமிடப்பட்டது.
இந்த நடவடிக்கை எந்தவொரு வகையிலும் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கோ அல்லது வேறு ஒரு அரசியல் கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கோ மேற்கொள்ளப்படும் அரசியல் இயக்கம் அல்ல என்பதை நாங்கள் மிகவும் தெளிவாக வலியுறுத்துகின்றோம். இது முற்றிலும் சுயாதீனமான ஒரு தொழிற்சங்க இயக்கமாகும்.
எனினும் நீதித்துறையின் சுயாதீனம், சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக நிறுவனங்களின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதில் எங்களுக்கு எந்தவித அரசியல் கட்சி வேறுபாடும் இல்லை. அதற்கமைய, 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அனைத்துப் பிரஜைகள், தொழில்சார் அமைப்புகள், சிவில் அமைப்புகள் மற்றும் ஏனைய ஜனநாயக சக்திகளுடன் இணைந்து செயற்படச் சுயாதீன தொழிற்சங்க இயக்கம் தீர்மானித்துள்ளது.
இன்று இடம்பெற்ற இந்தச் சேர்க்கையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தொழிற்சங்க சம்மேளனம், தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில்சார் வல்லுநர்களின் தேசிய சம்மேளனம், தொழிலாளர் போராட்ட மையம், சுகாதார தொழில்சார் வல்லுநர்கள் சங்கம், அரச சேவை தொழிற்சங்க மையம் உள்ளிட்ட சுமார் ஐம்பது தொழிற்சங்கங்களும் தொழில்சார் அமைப்புகளும் கையொப்பமிட்டுள்ளன.
மேலும் சுமார் ஐம்பது தொழிற்சங்கங்கள், தமது நிர்வாக சபைகளின் உத்தியோகபூர்வ அங்கீகாரத்தைப் பெற்ற பின்னர் இந்த பொது உடன்படிக்கையில் கையொப்பமிட விருப்பம் தெரிவித்துள்ளன. இதன் மூலம் இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் சுமார் நூறு தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய பரந்த சுயாதீன தொழிற்சங்கக் கூட்டணியாக வளர்ச்சியடையும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
இன்று 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு எதிராக சட்டப்பூர்வ மற்றும் ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளைக் கூட்டுப் பொறுப்புடன் மேற்கொள்வதற்கும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், அமைதியான போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் பொது உடன்பாடு எட்டப்பட்டது. அதன் முதலாவது கூட்டுப் பொது நடவடிக்கையாக, நாளை (01) நண்பகல் 12.00 மணிக்குக் கொழும்பு கோட்டையில் அமைதிப் போராட்டம் ஒன்றை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எங்களின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. நீதித்துறையின் சுயாதீனம் என்பது நீதிபதிகளின் பிரச்சினை மட்டுமல்ல. அது ஒவ்வொரு பிரஜையினதும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையாகும். அரசாங்கமோ அல்லது வேறு ஏதேனும் சக்திவாய்ந்த தரப்போ ஒரு பிரஜைக்கு அநீதி இழைக்கும் பட்சத்தில், அவரோ அல்லது அவளோ இறுதியாக நாடக்கூடிய சுயாதீனமான இடம் நீதித்துறை மட்டுமேயாகும்.
எனவே, நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் எதிராக மௌனமாக இருப்பது தொழிற்சங்க இயக்கத்தின் பொறுப்பல்ல. நாங்கள் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு அணிதிரளவில்லை. வேறு ஒரு அரசாங்கத்தைக் கொண்டு வருவதற்கு அணிதிரளவில்லை. சுயாதீனமான நீதித்துறையையும் ஜனநாயக நாட்டையும் பாதுகாப்பதற்காகவே நாங்கள் அணிதிரள்கின்றோம்.
2ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு எதிரான இந்தக் கூட்டு நடவடிக்கை அந்த ஜனநாயகப் பொறுப்பின் ஒரு பகுதியாக முன்னோக்கி கொண்டு செல்லப்படும் எனத் தெரிவித்தார்.





