15 லீற்றர் போதாது: தேசிய முச்சக்கர வண்டி சாரதிகள் ஒன்றியம்
முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு ஒருநாளைக்கு 5 லீற்றர் என்ற அடிப்படையில் வாரத்துக்கு 35 லீற்றர் எரிபொருளை விநியோகிக்க வேண்டும்.
வாடகை முச்சக்கர வண்டிச் சேவைக்கு வாரத்துக்கு 15 லீற்றர் போதாது. குறைந்தபட்சம் 35 லீற்றராவது வழங்க வேண்டும்.இல்லையேல் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபடுவோம் என தேசிய முச்சக்கர வண்டி சாரதிகள் ஒன்றியத்தின் தலைவர் ஜெஸ்மில் லங்கா தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள தேசிய முச்சக்கர வண்டி சாரிகள் சங்கத்தின் காரியாலயத்தில் 15-03-2026 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் நிலைமைக்கு மத்தியில் எரிபொருள் கொள்வனவு மற்றும் இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.
எரிபொருள் விநியோகத்தை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு தற்போது கோட்டா முறைமை அமல்படுத்தியுள்ளது.இது வரவேற்கத்தக்கது. கடந்த இரு வாரங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் எரிபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபடுபவர்கள்.
வாடகை முச்சக்கர வண்டி சாரதிகள் எரிபொருளை தேவைக்கு மேலதிகமாக பெற்று அவற்றை பதுக்கி வைத்து கறுப்புச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யவில்லை.
புதிய கோட்டா முறைமையில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு வாரத்துக்கு 15 லீற்றர் எரிபொருள் விநியோகிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதனை எம்மால் ஏற்க முடியாது. வாடகை முச்சக்கர வண்டி சேவையில் ஈடுபடும் சாரதிகள் அனைவரும் நடுத்தர நிலையில் தான் உள்ளார்கள்.
முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு ஒருநாளைக்கு 5 லீற்றர் என்ற அடிப்படையில் வாரத்துக்கு 35 லீற்றர் எரிபொருளை விநியோகிக்க வேண்டும். தற்போதைய நெருக்கடியான நிலையில் அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க நாங்கள் விரும்பவில்லை.இருப்பினும் நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்காத வகையில் தீர்மானங்களை அரசாங்கம் எடுக்க வேண்டும்.
முச்சக்கர வண்டி சாரதிகளை நெருக்கடிக்குள்ளாக்கினால் ஆட்சி மாற்றத்துக்குரிய நடவடிக்கைகளை நாங்களே தொடங்கி வைப்போம்.எமது கோரிக்கைக்கு அரசாங்கம் சாதகமான வகையில் தீர்வு வழங்காவிடின் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.





