மீண்டும் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்படுவதற்கு இடமளிக்க போவதில்லை - ஜனாதிபதி அநுர
சிலருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்படுவதற்கு இடமளிக்க போவதில்லை.இலங்கை ரூபாய்க்கு நிகராக அமெரிக்க டொலர் அதிகரித்துள்ளமையினால் எமது பொருளாதாரத்தில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் அதனை முகாமைத்துவம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூபாவின் பெறுமதியை பாதுகாப்பதற்கும், எரிபொருள் விநியோகத்தை வரையறுப்பதற்கும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என ஜனாதிபதி அநுரகுமார தி சாநாயக்க தெரிவித்தார்.
மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் 20-05-2026 அன்று இடம்பெற்ற போதைப்பொருள் பேரழிவுக்கு எதிரான 'முழு நாடுமே ஒன்றாக' மட்டக்களப்பு மாவட்ட விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பலமான பொருளாதாரமொன்றைக் கட்டியெழுப்பும் சவாலே நமக்கு முன்னாலுள்ள முதலாவது சவாலாகும். நமது பொருளாதாரத்தைப் பாதிக்கும் சில துறைகளில் கடந்த காலத்தில் நாம் சவால்களை எதிர்கொண்டோம். பல்வேறு நாடுகள் விதித்த வரிக் கொள்கைகள் காரணமாக நமது பொருளாதாரத்திற்குச் சில தாக்கங்கள் ஏற்பட்டன. 'டித்வா' சூறாவளியானது இலங்கையின் அண்மைய வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்திய பேரழிவாக மாறியிருந்தது. அது நமது உள்நாட்டுப் பிரச்சினை என்பதால், அதற்கு நம்மால் வலுவாக முகம் கொடுக்க முடிந்தது.
அண்மைக்காலமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தை மையமாகக் கொண்டு போர்ச் சூழல் ஏற்பட்டுள்ளது. அது உலகிலுள்ள வளர்ந்த நாடுகள், குறைந்த பொருளாதாரத் திறனுள்ள நாடுகள் என்ற பாகுபாடின்றி அனைவரையும் பொருளாதார சவாலுக்கு உள்ளாக்கியுள்ளது.பொருளாதார ரீதியாக நாம் எதிர்கொள்ளும் சவால்கள் பிரதானமாக இரண்டு பகுதிகளைக் கொண்டவை. முதலாவது, திறைசேரிக்கு தேவையான ரூபாயை ஈட்டிக்கொள்வதாகும். அதனை நாம் வலுவாக நிறைவேற்றியுள்ளோம். இலங்கை வரலாற்றில் அதிகப்படியான நிதியைக் கொண்ட திறைசேரிக் கணக்கொன்று தற்போது நம்மிடம் உள்ளது. இதனால்தான் 'டித்வா' சூறாவளிப் பாதிப்புகளுக்கு முகம் கொடுப்பதற்காக 50இ000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய நமக்கு முடிந்தது.
அதேபோல் திறைசேரியில் போதியளவு நிதி இருந்தமையினால், மத்திய கிழக்கின் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வு மற்றும் மின்சாரக் கட்டண அதிகரிப்பு ஆகியவற்றில் ஓரளவுக்குத் தலையீடு செய்ய நமக்கு முடிந்தது. இதற்காகவும் நாம் 10, 000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளோம். கடந்த ஏப்ரல் மாதத்தில் எரிபொருள் நிவாரணமாக வழங்குவதற்கு 2000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கும் எரிபொருள் நிவாரணத்திற்காக தலா 2000 கோடி ரூபாய் வீதம் வழங்கப்படும். இன்றும் நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு லீட்டர் எரிபொருளுக்கும் அரசாங்கம் 100 ரூபாய் நிவாரணத்தை வழங்குகிறது. திறைசேரியிடம் நிதி உள்ளமையினாலேயே இது சாத்தியமானது.
எரிபொருள் விலை உயர்வு காரணமாக மின்சாரக் கட்டணத்தை ஓரளவுக்கு அதிகரிக்க வேண்டியேற்பட்டது. எனினும், 95 சதவீத மின் நுகர்வோருக்கு மின்சாரக் கட்டணம் அதிகரிக்காது. அரசாங்கம் அதனை நிவாரணமாக வழங்கத் தீர்மானித்தது. எனவே, கடந்த கட்டண அதிகரிப்பின் போது 5 சதவீத மின் நுகர்வோரின் கட்டணமே அதிகரித்தது. இந்த நிவாரணத்தை நாம் செப்டம்பர் மாதம் வரை வழங்குவோம். இதற்காக அரசாங்கம் 1500 கோடி ரூபாய் செலவை ஏற்கிறது. எனவே, வலுவான பொருளாதார நிர்வாகத்தின் விளைவாக இவ்வாறானதொரு பேரழிவுக்கு முகம் கொடுக்கக்கூடிய ரூபாய் தொகை நமது திறைசேரியிடம் உள்ளது.
இருப்பினும்இ தற்போது டொலர் தொடர்பான நெருக்கடியொன்றை நாம் எதிர்கொண்டுள்ளோம். குறிப்பாக ஏனைய நாணயங்களுடன் ஒப்பிடுகையில் டொலர் பலமடைந்துள்ளது. அது நமது ரூபாயில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நமது பிரதான வருமான வழிகளில் ஒன்று டொலர்களை ஈட்டித்தரும் சுற்றுலாத்துறையாகும். கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 29மூ வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அது நமது டொலரில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நமது ஏற்றுமதிகளுக்கான தேவையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் டொலர்களிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. மறுபுறம்இ வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அனுப்பும் பணப் பரிமாற்றங்களிலும் இந்த மாதத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.
அதேபோல்இ டொலரின் விலை உயர்வினால் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான மாதாந்த செலவினம் அதிகரித்துள்ளது. பெப்ரவரி மாதத்தில் எரிபொருள் இறக்குமதிக்காக நமக்கு 98 மில்லியன் டொலர்களே செலவானது. மார்ச் மாதத்தில் அது 216 மில்லியன் டொலர்களாகவும்இ ஏப்ரல் மாதத்தில் 368 மில்லியன் டொலர்களாகவும் அதிகரித்தது. இந்த மே மாதத்தில் அது 522 மில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது. ஒரு மாதத்திற்கான எரிபொருள் இறக்குமதிச் செலவு 500 மில்லியன் டொலர் என்ற எல்லையைத் தாண்டியுள்ளது. இது நமது ரூபாய்க்கு அழுத்தத்தையும் டொலருக்கான தேவையையும் ஏற்படுத்தியுள்ளது. எனவேஇ இந்த நெருக்கடிக்கு முகம் கொடுப்பதற்காகப் பல நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
எரிபொருள் பயன்பாட்டை மட்டுப்படுத்துங்கள்.
நாம் இந்த சந்தர்ப்பத்தில் பொருளாதாரத்தை நிர்வகிப்பது சர்வதேச நாணய நிதியத்துடனான நீடிக்கப்பட்ட கடன் திட்டத்துடனாகும். எனவே நாம் எவ்வாறான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்பது குறித்து அவர்களுடன் கலந்துரையாடி வருகிறோம். அதேபோல் நமது முன்மொழிவுகளையும் சமர்ப்பித்துள்ளோம். டொலருக்காக தற்காலிகமாக ஏற்பட்டுள்ள இந்த அழுத்தத்தை நாம் கட்டுப்படுத்த வேண்டும். அதற்காக நாம் எரிபொருள் பயன்பாட்டை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நாம் இருகரம் கூப்பி தலைமேல் வைத்து வணங்கும் மத வழிபாட்டுத் தலங்கள் வரை இது பரவியுள்ளது. ஒரு சமூகமாக நமக்கு முன்னால் ஒரு பயங்கரமான நிலைமை உள்ளது. வயது வேறுபாடின்றிஇ அந்தஸ்து வேறுபாடின்றிஇ மதகுருமார்களா அல்லது சாதாரண பிரஜைகளா என்ற பாகுபாடின்றிஇ இந்த போதைப்பொருள் பேரழிவு நமது நாட்டில் ஒரு மிகப்பெரிய பேரழிவாக மாறியுள்ளது. நாம் இதனைத் ஒழிக்க வேண்டாமா? இந்தப் பேரழிவிலிருந்து நமது நாட்டு மக்களை நாம் மீட்டெடுக்க வேண்டும். இந்தப் பேரழிவைத் ஒழிக்க வேண்டும் என்ற உறுதியான தீர்மானத்திற்கு நாம் வந்துள்ளோம்.
இந்தப் பேரழிவு ஒரு மிகப்பெரிய பேரழிவாக வளர்வதற்கு 4 முக்கிய காரணங்கள் செல்வாக்கு செலுத்தின. முதலாவதுஇ அரசியல் பாதுகாப்பு. அரசியல் பாதுகாப்பிற்கு மத்தியில் இந்த போதைப்பொருள் வியாபாரிகளும் போதைப்பொருள் வியாபாரமும் வளர்ச்சியடைந்தன. கடந்த ஜனாதிபதித் தேர்தலில்இ இந்த நாட்டு மக்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள் ஆணையை வழங்கி எங்களிடம் அதிகாரத்தை ஒப்படைத்தார்கள். நான் உங்களுக்கு ஓர் உறுதியை அளிக்கிறேன். போதைப்பொருள் வியாபாரிகளுக்கு இருந்த அரசியல் பாதுகாப்பை தற்போது நாம் முழுமையாக முடிவுக்குக் கொண்டுவந்துள்ளோம். எந்தவொரு அதிகாரிக்கும் எவ்விதப் அழுத்தமும் இப்போது இல்லை.
உங்களது பதவியின் கண்ணியத்தையும்இ உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை நிறைவேற்றுவதற்குக் தேவையான ஆதரவையும் நாம் வழங்குவோம். அதன் முடிவுகள் தற்போது கிடைக்கத் தொடங்கியுள்ளன.
கடந்த காலத்தில் நமது கடற்படையினர் பெருமளவிலான போதைப்பொருட்களை கைது செய்தார்கள். பொலிஸார் இரவும் பகலும் பாராது சுற்றிவளைப்புகளை மேற்கொண்டனர். அதன் விளைவாக, கடந்த 06 மாதங்களுக்குள் 1943 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. அதேபோல், 2008 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. 40,755 கிலோகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஒரு பாரிய பேரழிவு நமக்கு முன்னால் உள்ளது. அதனைத் தோற்கடிப்பதற்கான முதலாவது படிநிலை போதைப்பொருள் வியாபாரிகளுக்கு வழங்கப்படும் அரசியல் பாதுகாப்பை நீக்குவதாகும். அதனை நாம் செய்திருக்கிறோம். அதேபோன்றுஇ இந்தப்பணிக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் குறிப்பாக முப்படைகள் மற்றும் பொலிஸார் உட்பட அனைவருக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்படும். இதனை ஒடுக்குவதற்காக இருக்கின்ற அனைத்து பொறிமுறைகளையும் – முப்படைகள்இ பொலிஸ்இ சுங்கத்துறைஇ குடிவரவு குடியகல்வு திணைக்களம் போன்ற அனைத்து நிறுவனங்களையும் நாம் ஒரு கூட்டுச் செயல்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளோம். அது ஒரு முக்கியமான படிநிலையாகும். கைது நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்த பேரழிவோடு சேர்ந்து உருவான பாதாள உலகக் குற்றக் கும்பல்கள் இருக்கின்றன. கடந்த காலத்தில் குறிப்பிட்ட அளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றன. அவற்றில் பெரும்பாலானவை போதைப்பொருள் வர்த்தகத்துடன் ஏற்பட்ட மோதல்களாகும். அதற்படிஇ ஆயுத மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இந்தப் பாதாள உலகத்தை நாம் முற்றாக ஒழிக்க வேண்டும். நாம் ஏற்கனவே வெளிநாடுகளில் தங்கியிருந்த 28 பாதாள உலகக் குழு உறுப்பினர்களைக் கைது செய்து இலங்கைக்குக் கொண்டு வந்துள்ளோம். அவர்கள் வெவ்வேறு புனைபெயர்களில் உருவான பாதாள உலகத் தலைவர்கள் ஆவர். மேலும் ஒரு தொகையினரை நாம் மிக விரைவில் கைது செய்து இலங்கைக்குக் கொண்டு வருவோம். சிலர் சிறைச்சாலைக்கு உள்ளிருந்தே தங்களது செயற்பாடுகளை முன்னெடுத்தனர். நாம் இந்தக் குழுக்களை ஒரு விசேட முகாமிற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். பொதுவான சிறைச்சாலைகளுக்குப் பதிலாகஇ இவர்களுக்காகவே விசேட சிறைச்சாலைகளை நாம் உருவாக்கியுள்ளோம். இந்தப் பேரழிவைத் தோற்கடிக்க வேண்டுமாயின் பாதாள உலகத்தை முடக்க வேண்டும்.
பொலிஸ் மற்றும் முப்படைகளில் பதவிகளைக் கொண்டுஇ அதனுடன் தொடர்புடைய பொறுப்புகள் மற்றும் சட்டங்களின் மூலம் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ள உங்களால் இந்த வெவ்வேறு புனைபெயர்களில் உருவாகியிருக்கும் பாதாள உலகத்தை அடக்க முடியாதா? அதற்காக ஒன்றிணையுமாறு நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்.
இந்த 06 மாத காலப்பகுதிக்குள் 83 டி-56 ரகத் துப்பாக்கிகள்இ 118 பிஸ்டல்கள் 75 ரிவோல்வர்கள் மற்றும் கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பாதாள உலகத்தினருக்குச் சொந்தமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த போதைப்பொருள் வியாபாரத்தை ஒடுக்க வேண்டுமாயின் பாதாள உலகத்தை ஒடுக்க வேண்டும்.
அதேபோல்இ ஒவ்வொருவருக்கும் சட்டத்தின் ஆட்சியின் ஆதிக்கம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். என்னில் இருந்து பிரதேச சபை உறுப்பினர் வரையிலும்இ ஜனாதிபதி செயலாளரிலிருந்து கிராம உத்தியோகத்தர் வரையிலும்இ நகரத்திலிருந்து கிராமம் வரையிலும் இருக்கின்ற ஒவ்வொருவரும் சட்டத்தின் முன்னிலையில் முற்றிலும் சமமானவர்களாவர். எவரும் சட்டத்திற்கு மேல் இல்லாதவொரு நாட்டை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.
சிலரால் அவ்வாறானதொரு நாடு உருவாவதைத் தாங்கிக்கொள்ள முடியாது. அத்தகையதொரு நாட்டில் வாழ்ந்து அவர்களுக்குப் பழக்கமில்லை. சிலர் தங்களைச் சட்டத்திற்கு மேலானவர்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அப்படி நினைத்த ஒரு யுகம் இருந்தது. நாம் அந்த யுகத்தை முடிவுக்குக் கொண்டுவந்தோம். அவர்கள் கடந்த காலத்தில் எவ்வளவுதான் வரப்பிரசாதங்களையும் சலுகைகளையும் அனுபவித்திருந்தாலும்இ குடும்பப் பின்னணி என்னவாக இருந்தாலும்இ அவை எதுவும் சட்டத்திற்குப் பொருந்தாது. அனைவரும் சட்டத்தின் முன்னிலையில் சமமானவர்கள். போதைப்பொருள் ஒழிப்பில் இது மிகவும் முக்கியமானது. ஆனால்இ சட்டத்திற்கு மேலிருந்தவர்களிடம் சட்டம் நெருங்கும்போது அவர்கள் பதற்றமடைகிறார்கள். சட்டத்திற்கு மதிப்பளித்து அவர்களுக்குப் பழக்கமில்லை.
எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை. யார் மீதும் வெறுப்போஇ குரோதமோ இல்லை. இந்த மக்கள் எங்களிடம் ஒப்படைத்த ஒரு பொறுப்பு இருக்கிறது. ஒவ்வொருவரும் சட்டத்தின் எல்லைக்கு உட்பட்டு வாழும் ஒரு சமூகத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும். எனவேஇ பதற்றமடைவதாலோஇ கூச்சலிடுவதாலோஇ சட்டத்தை நிலைநாட்டும்போது சிலரை சட்டத்தை அமலாக்கும் நிறுவனங்களுக்கு முன்னால் அழைத்து வருவதாலோஇ சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை முடக்க முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வீணாக பேருந்துகளில் ஆட்களை ஏற்றி வருகிறார்கள். அவற்றுக்காக சட்டம் வளைந்து கொடுக்காது. சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படும். இன்னும் பல விடயங்கள் நடைபெறும். குற்றப் புலனாய்வுத் திணைக்களம், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு, போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு ஆகிய அனைத்தும் இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலரை கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. சிலருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தேவையான அதிகாரம் அந்த அதிகார வரம்பிற்குள் நிலைநாட்டப்படும். உங்களுடைய அந்த விசாரணைகளில் யாரும் தலையிட மாட்டார்கள். ஆனால்இ நிறுவனங்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பைச் சரியாக நிறைவேற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நான் குறிப்பாக முப்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்குக் கூறுகிறேன். நீங்கள் உங்கள் முதுகெலும்பை நிமிர்த்தி வேலை செய்யக்கூடிய ஒரு சூழலை நாங்கள் உருவாக்கியுள்ளோம். உங்களுக்கு இருக்கும் சட்டக் கட்டமைப்புக்கு மட்டுமே நீங்கள் கட்டுப்படுவீர்கள்.
ஜனாதிபதி என்ற ரீதியில் எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பையும் அதன் எல்லையையும் நான் அறிவேன். நான் எனது எல்லையை மீறிச் செல்லமாட்டேன். சட்டதிட்டங்களின்படி உங்களது அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான எல்லைகளையும் நீங்கள் அடையாளம் கண்டுள்ளீர்கள். நீங்கள் அந்த எல்லைகளுக்குள் நின்று செயலாற்றுங்கள். சில பணிகளுக்கு அந்த எல்லைகள் குறுகியதாக இருந்தால்இ நாம் சட்டத்தின் மூலம் அந்த எல்லையை அதிகரித்துத் தருவோம். ஆயுதம் ஏந்திய குற்றக் கும்பல்களை ஒடுக்குவதற்காக விசேட சட்டவரைவு ஒன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற நாம் எதிர்பார்க்கிறோம். உங்களுக்கு சட்டம் போதாது என்றால் நாம் சட்டத்தை பலப்படுத்தித் தருவோம்.
கைது செய்யப்படும் போதைப்பொருட்கள் தொடர்பாக பெரும் விவாதம் ஒன்று நிலவுகிறது. அவை மீண்டும் சந்தைக்கு வருகிறதாஇ அல்லது அவை அழிக்கப்பட்டதா? ஆனால்இ இவை அனைத்தும் சட்டக் கட்டமைப்புக்குள்ளேயே இருக்கின்றன. கைது செய்யப்படும் போதைப்பொருட்களை மிகக் குறுகிய காலத்திற்குள் அழிப்பதற்கான சட்டங்களை உருவாக்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அந்த கலந்துரையாடல்கள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. யாருமே நுழைய முடியாத சில அதிகார எல்லைகள் காணப்படுகின்றன. விமான நிலையத்திற்குச் செல்லும்போது பரிசோதிக்க முடியாத அதிகாரிகள் இருந்தார்கள். நாம் அதனை மாற்றினோம். ஒவ்வொருவரும் விமான நிலையத்தினால் வழங்கப்படும் அடையாள அட்டையையே அதற்குள் பயன்படுத்த வேண்டும். துறைமுகம் சுங்கத் திணைக்களம் ஆகியவற்றிற்குள் நுழைய முடியாத ஒரு நிலை காணப்பட்டது. தகவல் ஏதேனும் இருந்தால், புலனாய்வு அதிகாரிகளுக்கு அங்கு நுழைவதற்கான அதிகாரத்தை நாம் வழங்குவோம். இந்தச் சட்டங்களை நாம் பலப்படுத்தித் தருவோம். நாம் இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவோம்.
அதன்போது. பொதுமக்களுக்கும் ஒரு பாரிய பொறுப்பு இருக்கிறது. உங்கள் கிராமத்தில் போதைப்பொருள் விற்பவர் யார் அதற்கு அடிமையானவர் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதற்கு பொதுமக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. எனவே நீங்கள் முன்னோக்கி வாருங்கள். இந்த பேரழிவை நாம் தோற்கடிப்போம். கைவிடாதஇ தளராத விடாமுயற்சியுடனும் அவதானிப்பை கைவிடாமலும் நாம் தொடர்ந்து செயற்பட்டால் இதனை நம்மால் தோற்கடிக்க முடியும். அதற்காக ஒன்றிணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன் என்றார்.





