கியூ.ஆர் முறைமையை அணுகுவதாக நினைத்து மோசடிகளில் சிக்காதீர்கள்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அரசாங்கம் மீண்டும் எரிபொருள் கோட்டா முறைமையை (கியூ.ஆர்) அறிமுகப்படுத்தியுள்ளது.
நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் எரிபொருள் கோட்டா முறைமையை (கியூ.ஆர்) அணுகுவதற்கு வழிவகை செய்வதாகக்கூறி, சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்திகளின் ஊடாகப் பகிரப்படும் போலியான இணையத்தளங்கள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய கூட்டுத்தாக்குதலை அடுத்து மத்திய கிழக்குப் பிராந்தியம் முழுவதும் மோதல்கள் தீவிரமடைந்துள்ள பின்னணியில், இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அரசாங்கம் மீண்டும் எரிபொருள் கோட்டா முறைமையை (கியூ.ஆர்) அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மேற்படி முறைமையை அணுகுவதற்கு வழிவகை செய்வதாகக்கூறி, பயனாளர்களை ஏமாற்றி, அவர்களது தனிப்பட்ட அல்லது நிதி சார்ந்த தகவல்களைத் திருடும் நோக்கில் உருவாக்கப்பட்ட போலியான இணைப்புக்கள் சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் வாயிலாகப் பரவலாகப் பகிரப்பட்டு வருவதாகவும், அத்தகைய சந்தேகத்துக்கிடமான இணைப்புக்களை கிளிக் செய்வதையோ அல்லது குறியீடுகளை (கியூ.ஆர்) ஸ்கேன் செய்வதையோ பொதுமக்கள் தவிர்த்துக் கொள்ளவேண்டும் எனவும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு அறிவுறுத்தியுள்ளது.
அதேவேளை இந்த எரிபொருள் கோட்டா முறைமை சேவையைப் பொறுத்தமட்டில் https://fuelpass.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளம் தவிர்ந்த வேறெந்தவொரு இணையத்தளமும் பயன்பாட்டில் இல்லை எனவும், ஆகவே மோசடி செய்பவர்கள் உண்மையான இணையத்தள முகவரியை ஒத்த சிறிய எழுத்து மாற்றங்களுடன்கூடிய போலி முகவரிகளைப் பயன்படுத்தக்கூடும் என்பதனால், பொதுமக்கள் இணையத்தளத்தின் பெயரையும் அதன் URL எழுத்துக்களையும் கவனமாகச் சரிபார்க்கவேண்டும் எனவும் அக்குழு வலியுறுத்தியுள்ளது.





