தமிழக முதலமைச்சர் ஜோசப் சி.விஜயுடன் தமிழ்த் தேசியப்பேரவை சந்திப்பு
ஒன்றின் அதிகாரம் மற்றொன்றுக்குக் குறைவானதல்ல. இந்த அம்சமே சமஷ்டி அரசியலமைப்பையும் ஒற்றையாட்சி அரசியலமைப்பையும் வேறுபடுத்தி நிற்கிறது. ஒற்றையாட்சி அரசியலமைப்பில், இறைமை அதிகாரம் முழுமையாக மத்திய அரசிடமே நிலைத்திருக்கும்.
தமிழர்களுக்கான தீர்வின் ஆரம்ப புள்ளியாக 13ஆம் திருத்தச்சட்டம் இல்லை என்பதையும், ஒற்றையாட்சி அரசியலமைப்பு மீண்டும் அமல்படுத்துவதற்கு எதிராகவும் தமிழகம் இருக்கின்றது என்ற ஒருமித்த நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு வெளிப்படுத்துவதற்காகவும் தமிழகத்தின் ஒருமித்த நிலைப்பாட்டை உருவாக்கும் வகையில் ஒரு அனைத்துக் கட்சி மாநாட்டை நடத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவது அவசியமானது என்று தமிழ்த் தேசியப்பேரவை தமிழக முதலமைச்சர் ஜோசப் சி.விஜயிடத்தில் வலியுறுத்தியுள்ளது.
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியப் பேரவையினருக்கும் தமிழக முதல்வர் ஜோசப் சி.விஜய்க்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றையதினம் சென்னையில் உள்ள தலைமைச்செயலகத்தில் நடைபெற்றிருந்தது. குறித்த சந்திப்பில், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில், தமிழ்த் தேசியப் பேரவையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஏழு பேர் கொண்ட பிரதிநிதிக் குழு பங்கேற்றிருந்தது. இதன்போது தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உட்பட இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்திய எழுத்துமூலமான கோரிக்கையொன்றும் கையளிக்கப்பட்டது.
அக்கோரிக்கையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பாக, தமிழக அரசினதும் தமிழக மக்களதும் ஆதரவைப் பெறும் நோக்கில், ஈழத் தமிழ் அரசியல் தலைவர்கள் கடந்த காலங்களில் தமிழக அரசுடனும் தமிழக அரசியல் கட்சிகளுடனும் தமிழக மக்களுடனும் தொடர்ச்சியான கலந்துரையாடல்களையும் தொடர்புகளையும் மேற்கொண்டு வந்திருந்தார்கள்.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஜனநாயக முயற்சிகளும் சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனை கொண்ட சிறிலங்காவின் ஆட்சியாளர்களால் உதாசீனம் செய்யப்பட்டு தமிழ் மக்கள் மீது ஆயுதப் போராட்டம் திணிக்கப்பட்ட நிலையில், தமிழ் மக்களது உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் கூட தமிழகத்தின் அனைத்து தரப்பினருடனும் தொடர்புகளை பேணியிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, கடந்த 18.12.2025 அன்று அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னையும் நாம் சந்தித்து, ஈழத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பாகவும், தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை உள்ளிட்ட அடிப்படை அரசியல் அபிலாசைகளை முற்றிலும் புறக்கணித்து சிறிலங்கா அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுவரும் புதிய அரசியலமைப்பின் ஆபத்துகள் குறித்தும், விரிவாக எடுத்துரைத்திருந்தோம்.
அந்தச் சந்திப்பினைத் தொடர்ந்து, 11.01.2026 அன்று தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் இந்தியப் பிரதமருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் மூலம்,
சிறீலங்காவில் ஆட்சியிலுள்ள ‘அனுரகுமார அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருந்த “ஏக்ய ராஜ்ய” (ஒற்றையாட்சி) அரசியலமைப்பின் ஆபத்துகள் குறித்து இந்திய ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்த்ததுடன், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமாயின், இனப்பிரச்சினைக்குத் தீர்வாக 1985 ஆம் ஆண்டு இந்தியாவின் அனுசரணையுடன், திம்பு மகாநாட்டில் ஈழத்தமிழ்ப் பிரதிநிதிகளால் முன்மொழியப்பட்ட திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய அரசியல் யாப்பு அமைய வேண்டும் என்பதனைத் தமிழர் கோரி நிற்கின்றமையையும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அதிகாரம் கொண்ட துணை அமைப்புகள் (subsidiary sovereign bodies) என அழைக்க முடியாது என்பதனையே இது குறித்து நிற்கின்றது. இறுதியாக, மத்திய அரசாங்கத்தினால் சட்டரீதியாக கையாளப்பட முடியாத முரண்பாடுகள் மத்திய அரசாங்கத்திற்கும் பிற அதிகார மையங்களுக்கும் இடையில் உருவாகும் சாத்தியப்பாடுகள் இல்லை என்பதையே இது குறிக்கிறது. ஆகவே, ஓர் ஒற்றை ஆட்சி அரசாங்கத்திற்கு அடிப்படையாக இருப்பவை:
மத்திய பாராளுமன்றமே அதி உச்ச அதிகாரங்களைக் கொண்டிருக்கும். இறைமை அதிகாரமுடைய துணை நிலை அமைப்புகளைக் கொண்டிராது.
இதற்கு மாறாக, சமஷ்டி அரசில் ஆட்சி அதிகாரங்கள் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே பகிரப்பட்டிருக்கும். அவை ஒன்றுக்கொன்று குறைவான அதிகாரங்களைக் கொண்டவையல்ல. மாறாக, தத்தம் எல்லைகளுக்குள் சமமான அதிகாரமும் சுயாதீனமும் கொண்டவையாக இருக்கும். ஒன்றுக்கொன்று சுயாதீனமான சமமான அதிகாரம் கொண்ட அமைப்புகள் இருப்பதே சமஷ்டி ஆட்சியின் தத்துவங்களாகும்.
சமஷ்டி அரசாங்கம் சில விடயங்களில் இறைமை அதிகாரத்தைக் கொண்டிருக்கும் மாநில அரசாங்கங்கள் ஏனைய விடயங்களில் இறைமை அதிகாரத்தைக் கொண்டிருக்கும் அவை ஒவ்வொன்றும் தத்தம் எல்லைகளுக்குள், மற்றொன்றின் கட்டுப்பாடின்றி தங்கள் அதிகாரங்களைச் செயற்படுத்தும்.
ஒன்றின் அதிகாரம் மற்றொன்றுக்குக் குறைவானதல்ல. இந்த அம்சமே சமஷ்டி அரசியலமைப்பையும் ஒற்றையாட்சி அரசியலமைப்பையும் வேறுபடுத்தி நிற்கிறது. ஒற்றையாட்சி அரசியலமைப்பில், இறைமை அதிகாரம் முழுமையாக மத்திய அரசிடமே நிலைத்திருக்கும்.
இந்திய – சிறிலங்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 38 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும், ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு உட்பட்டு உருவாக்கப்பட்ட 13ஆம் திருத்தமும், மாகாணசபை முறைமையும் எந்த வகையிலும் ஈழத் தமிழ் மக்களுக்கான தீர்வின் ஆரம்பப்புள்ளியாகக் கூட அமையவில்லை.
தமிழ் மக்களுக்குரிய அதிகாரப் பரவலாக்கல் என்ற போர்வையில், ஒரு கையால் கொடுப்பது போல் கொடுத்து - மறு கையால் பறித்தெடுக்கும் வகையில் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் 13 ஆம் திருத்தச் சட்டம் அமைந்திருந்த காரணத்தாலேயே, தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளும் ஏனைய தமிழ்த் தேசியப் பரப்பில் செயற்பட்டிருந்த அனைத்துக் கட்சிகளும் 13 ஆம் திருத்தம் உள்ளிட்ட ஒற்றையாட்சி முறைமைக்கு உட்பட்ட விடயங்களை அடியோடு நிராகரித்து வந்தனர். இதனையே 2009 க்குப் பின்னரான அனைத்துத் தேர்தல்களிலும் தமிழ் மக்கள் மிகத் தெளிவான ஆணையாகவும் வழங்கி வந்துள்ளனர்.
இந்நிலையில் - இனப்பிரச்சினைக்குத் தீர்வாக 2015-2019 காலப்பகுதியில் பதவி வகித்த அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட ‘ஏக்ய ராஜ்ய’ (ஒற்றையாட்சி என்பதன் சிங்களச் சொற்பதம்) வரைபை இறுதிப்படுத்தி நிறைவேற்றப்போவதாக தற்போதைய அரசாங்கம் அறிவித்திருந்தது.
கடந்த 2024 ஜனாதிபதி தேர்தலின் மூலம் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அவரது தலைமையிலான அரசாங்கத்தின் உயர் மட்டத் தலைவர்களாலும் இக்கருத்து தொடர்ச்சியாக வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.. இந்த ‘ஏக்ய ராஜ்ய’ வரைபானது ஏற்கனவே தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டத்தினை விடவும் மிகவும் பலவீனமானது.
அவ்வாறானதோர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஊடாக, ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பில் தமிழகத்தின் ஒருமித்த நிலைப்பாட்டை உருவாக்கும் வகையில் ஒரு அனைத்து கட்சி மாநாட்டை நடத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவது அவசியமானது என்பதும் எமது வேண்டுகோளாகும்.
அத்தகைய ஒருமித்த அரசியல் நிலைப்பாட்டுடன், இந்திய ஒன்றிய அரசுக்கு வலுவான ஜனநாயகச் செய்தியை எடுத்துரைப்பதுடன், கட்டமைப்பு சார் இனவழிப்பைத் தொடர்ந்தும் மேற்கொண்டுவரும் சிறிலங்கா அரசுக்கும் சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளுக்கும் ஈழத்தமிழர்கள் தனித்து விடப்பட்டவர்கள் அல்ல என்பதையும், ஈழத்தமிழர்களுடன் தமிழகம் எப்போதும் துணையாக நிற்கும் என்ற செய்தியையும் வெளிப்படுத்துவதாக அமையும் என்றுள்ளது.





