ஆசிய - பசிபிக் விமான பாதுகாப்பு மாநாடு நீர் கொழும்பில் ஆரம்பம்
இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டின் மூலம், ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் விமான பாதுகாப்பு துறையில் இலங்கை ஒரு நம்பகமான, புத்தாக்கத்திறனுடன் சர்வதேச அளவில் தடம் பதித்துள்ளது.
21ஆ வது ஆசிய - பசிபிக் ஒத்துழைப்பு வழிநடத்தல் குழு கூட்டமும் (CASP – AP), 14வது ஆசிய - பசிபிக் விமான பாதுகாப்பு ஒருங்கிணைப்பு மன்றமும் நீர்கொழும்பு 'கோல்ட் சேண்ட்ஸ்' ஹோட்டல் வளாகத்தில் 23-06-2026 அன்று கோலாகலமாக ஆரம்பமாகின. எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நான்கு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த சர்வதேச மாநாட்டின் ஆரம்ப விழாவில், பிரதம அதிதியாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக கலந்து கொண்டார். சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் (ICAO) ஆசிய பசிபிக் பிராந்திய பணிப்பாளர் தாவோ மா சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில், பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு மற்றும் அமைச்சின் செயலாளர் டப்ளியூ.டப்ளியூ.எஸ். மங்கள உட்பட முக்கிய அதிகாரிகளும் பங்கேற்றனர். நேற்று மற்றும் இன்று (24) ஆகிய இரு தினங்களில் நடைபெறும் இந்த முக்கிய வழிநடத்தல் குழு கூட்டத்தில், 21 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 80 இற்கும் மேற்பட்ட சர்வதேச பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இம்மாநாட்டில் இலங்கையின் விமான போக்குவரத்து துறைக்கு சர்வதேச மட்டத்தில் பெரும் அங்கீகாரமும், கௌரவமும் கிடைத்துள்ளது. அதன்படி, 2026 – 2027 காலப்பகுதிக்கான CASP – AP வழிநடத்தல் குழுவின் தலைமைத்துவ பதவி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இலங்கை சிவில் விமான போக்குவரத்து பணிப்பாளர் நாயகமும் அதிகாரசபையின் தலைமை நிர்வாக அதிகாரியுமான கெப்டன் தமிந்த ரம்புக்வெல்ல உத்தியோகபூர்வமாக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த 4 நாள் மாநாட்டில் பிராந்தியத்தின் விமான பாதுகாப்பு சவால்கள், உலகளாவிய போக்குகள், சர்வதேச தரநிலைகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளதுடன், நவீன தொழில்நுட்பங்களை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டின் மூலம், ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் விமான பாதுகாப்பு துறையில் இலங்கை ஒரு நம்பகமான, புத்தாக்கத்திறனுடன் சர்வதேச அளவில் தடம் பதித்துள்ளது. இது இலங்கையின் சிவில் விமான போக்குவரத்து அமைப்பு மீதான உலகளாவிய நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதுடன், நாட்டின் சுற்றுலாத்துறை மற்றும் சர்வதேச உறவுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கும் சிறந்த வாய்ப்பாக அமையும். மேலும், வருகை தந்துள்ள வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தலங்களை பார்வையிடவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், நாட்டின் சுற்றுலா ஈர்ப்பு அதிகரிப்பதுடன் நாடுகள் இடையிலான விமான போக்குவரத்து உறவுகளும் மேலும் பலப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





