சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்ட மூவர் டுபாயிலிருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்
டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்று அதிகாலை 5.20 மணிக்கு வந்தடைந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல். 226 எனும் விமானத்தில் இவர்கள் இவ்வாறு அழைத்து வரப்பட்டனர்.
டுபாயில் மறைந்திருந்து பாதாள உலக நடவடிக்கைகளை முன்னெடுத்த இரு சந்தேகநபர்களும் நிதிமோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த பெண் ஒருவரும் சிவப்பு அறிவித்தல் பிரகாரம் ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து கைது செய்யப்பட்டு 16-01-2026 அன்று நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
டுபாய் பயணமான குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சிறப்புக் குழுவொன்று, இம்மூவரையும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்து வந்தது. டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்று அதிகாலை 5.20 மணிக்கு வந்தடைந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல். 226 எனும் விமானத்தில் இவர்கள் இவ்வாறு அழைத்து வரப்பட்டனர்.
எல்பிட்டிய ஊரகஹா பகுதியைச் சேர்ந்த 52 வயதான புஞ்சா என்னும் பெயரால் அறியப்படும் ரவின் சமிந்த வீரசிங்க, கந்தானை பகுதியைச் சேர்ந்த 32 வயதான சூட்டி மல்லி என அறியப்படும் கிரியல்தெனியகே தொன் ரசிக சஞ்சீவகுமார ஆகிய இரு பாதாள உலக உறுப்பினர்கள் இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில் உள்ளடங்குகின்றனர். இதனைவிடப் பல வருடங்களாக நிதி மோசடி குற்றச்சாட்டுத் தொடர்பில் பொலிஸார் தேடிவந்த இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 56 வயதான ஹேவாகசகாரகே ரெஜா நெஷாமனி த சில்வா என்னும் பெண்ணும் இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளார். நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்காகக் கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்ட குறித்தப் பெண் மேலதிக விசாரணைகளுக்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் கைது செய்து அழைத்து வரப்பட்ட சூட்டி மல்லி என அறியப்படும் சந்தேகநபர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் இணைப்புச் செயலாளராக ஒரு காலகட்டத்தில் கடமையாற்றிய சமீர மனோஹர மீது, கந்தானை பகுதியில் வைத்துத் துப்பாக்கிச் சூடு நடத்தி அவரைக் கொலை செய்தமை தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர் இவ்வாறு மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளார். குறித்த கொலைச் சம்பவமானது கொண்ட ரஞ்சி என்னும் பெயரால் அறியப்படும் ரஞ்சித் குமார என்ற பாதாள உலகத் தலைவனின் நடவடிக்கை எனக் கண்டறியப்பட்ட நிலையில், அவரது பிரதான சகாவாகச் சூட்டி மல்லி இருந்துள்ளதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட புஞ்சா எனும் சந்தேகநபர் எல்பிட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் வலய குற்ற விசாரணைப் பிரிவிடம் மேலதிக விசாரணைக்காகக் கையளிக்கப்பட்டுள்ளார். ஊரகஹ இந்திக எனும் பாதாள உலகத் தலைவனின் கீழ் பிரதான சகாவாக இந்தப் புஞ்சா செயற்பட்டுள்ளதாகவும், எல்பிட்டிய பகுதியில் நடந்த கொலை சம்பவம் ஒன்று தொடர்பில் அவரிடம் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தென்மாகாணத்துக்குப் பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதன்படி சிவப்பு அறிவித்தல் பிரகாரம் அழைத்து வரப்பட்ட மூவரிடமும் வெவ்வேறு சிறப்புப் பொலிஸ் குழுக்கள் நேற்று பகலாகும் போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.





