ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரகசிய வாகனக்கொடுக்கல் வாங்கல்: அமைச்சர் நளிந்த
கடந்த அரசாங்கத்திலிருந்த அமைச்சர் ஒருவர் எதிர்கட்சியிலிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வாகனம் ஒன்றை விற்பனை செய்துள்ளார்.

கடந்த அரசாங்கத்திலிருந்த அமைச்சர் ஒருவர் எதிர்கட்சியிலிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வாகனம் ஒன்றை விற்பனை செய்துள்ளார். இருவரும் பிரதான இரு கட்சிகளை சேர்ந்தவர்கள். அவர்கள் ஆட்சியிலிருந்தமையால் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்காது இரகசியமாக சட்டத்துக்கு புறம்பாக கொண்டுவரப்பட்ட வானக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
களுத்துறை மாவட்டத்தில் உள்ள 10-12 சதவீதமானோர் வீடுகளின்றியே வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறான மக்கள் தமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள விசேட நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 155 குடும்பங்களுக்கு வீட்டு நிர்மாணத் திட்டத்துக்கான நிவாரணம் வழங்கப்பட உள்ளது. இதற்காக 155 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றில் 42 மில்லியன் ரூபா பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. குறித்த நிவாரண தொகையைக் கொண்டு அம்மக்கள் தமது இருப்பிடங்களை அமைத்துக் கொள்ள முடியும்.
களுத்துறை மாவட்டத்தில் உள்ள பெருந்தோட்டப் பகுதிகளை சேர்ந்த 4 ஆயிரம் குடும்பங்களின் இருப்பிடங்கள் தொடர்பான சிக்கல்களுக்கு உடனடியாக தீர்வுக்காண வேண்டியுள்ளது. அதற்கமைய இங்கிரிய றைகம தோட்டத்தில் உள்ள 25 குடும்பங்களுக்கு இந்திய காப்புறுதி வீட்டுத் திட்டத்தின் கீழ் 70 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீடமைப்பு நிர்மாண அதிகார சபையின் நிதியுதவி மற்றும் கடன் உதவி திட்டத்தின் கீழ் பொருந்தோட்ட வீடமைப்புத் தொடர்பான விசேட திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் அரச ஊழியர்களுக்காக தொடர்மாடிக் குடியிருப்புகளை அமைத்துக் கொடுக்கவும் எதிர் பார்க்கப்பட்டுள்ளது.
நபர் ஒருவர் நீண்ட காலம் தனக்கான வீடு ஒன்றை நிர்மானித்துக்கொள்ள படுபடுவாராயின், அவரால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலு சேர்க்க முடியாது. ஆகையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தடைக்கல்லாக உள்ள இவ்வாறான சுமைகளை குறைப்பது அவசியம். சமீப நாட்களாக சட்டத்திற்கு புறம்பாக வாகனங்களை வைத்திருப்பவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதில் யார் தொடர்புப்பட்டுள்ளார்கள்? கடந்த அரசாங்கத்திலிருந்த அமைச்சர் ஒருவர் எதிர்கட்சியிலிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வாகனம் ஒன்றை விற்பனை செய்துள்ளார்.
இருவரும் பிரதான இரு கட்சிகளை சேர்ந்தவர்கள். முன்னரே இவ்வாறான ஊழல் தொடர்பில் ஏன் வெளிப்படுத்தப்படவில்லை என கேட்க வேண்டாம். அவர்கள் ஆட்சியில் இருந்தமையால் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்காது இரகசியமாக சட்டத்துக்குப் புறம்பாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வாகன கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டுள்ளனர். கடந்த அரசாங்கத்தினர் தமது வியாபாரங்களுக்காக மாத்திரமே ஆட்சி செய்தனர். எனினும் நாம் மக்களுக்கு செயல்படும் அரசாங்கம், அதற்காகவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து உள்ளோம் என்றார்.