தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கும் முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்
தொடக்கவுரை ஆற்றிய ஃபெடெரிக்கோ பொரெல்லோ, உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதையும், அவற்றை மேம்படுத்துவதையும் இலக்காகக்கொண்டு மனித உரிமைகள் கண்காணிப்பகம் பணியாற்றிவருவதாகச் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் உள்ளடங்கலாக சகல மீறல்கள் பற்றிய உண்மைகள் வெளிப்படுத்தப்படுவதுடன் அதனைத் தெரிந்துகொள்வதற்கான உரிமை அவர்களது உறவினர்களுக்கு உண்டு எனச் சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இடைக்கால நிறைவேற்றுப்பணிப்பாளர் ஃபெடெரிக்கோ பொரெல்லோ, தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு மற்றும் குற்றவாளிகள் கொண்டாடப்படும் கலாசாரம் என்பன முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் முறையற்ற வரிக்கொள்கை மற்றும் கல்வித்துறைக்கான குறைந்தளவு நிதி ஒதுக்கீட்டினால் பாடசாலைகள் முகங்கொடுத்துவரும் நெருக்கடிகள் தொடர்பில் விளக்கியும், அவற்றுக்கான தீர்வுப்பரிந்துரைகளை உள்ளடக்கியும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களில் ஒன்றான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள 'வரிச்சலுகைகளும் பாடசாலைகள் முகங்கொடுக்கும் நெருக்கடிகளும்' எனும் தலைப்பிலான ஆய்வறிக்கையின் வெளியீட்டு நிகழ்வு 16-10-2025 அன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
அந்நிகழ்வில் தொடக்கவுரை ஆற்றிய ஃபெடெரிக்கோ பொரெல்லோ, உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதையும், அவற்றை மேம்படுத்துவதையும் இலக்காகக்கொண்டு மனித உரிமைகள் கண்காணிப்பகம் பணியாற்றிவருவதாகச் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று அண்மையில் முடிவுக்கு வந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தை மேலும் இரண்டு வருடங்களுக்குக் காலநீடிப்பு செய்யும் வகையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டமையையும், அதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் வாக்கெடுப்பைக் கோராமையையும் வரவேற்பதாக அவர் தெரிவித்தார்.
அதேவேளை இலங்கையில் கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்ட தரப்பினரைச் சந்தித்ததாகக் குறிப்பிட்ட ஃபெடெரிக்கோ பொரெல்லோ, வலிந்து காணாமலாக்கப்படல்கள் உள்ளடங்கலாக மீறல்கள் பற்றிய உண்மைகள் வெளிப்படுத்தப்படுவதுடன் அதனைத் தெரிந்துகொள்வதற்கான உரிமை அவர்களது உறவினர்களுக்கு உண்டு எனவும், தற்போதுவரை தொடரும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு மற்றும் குற்றவாளிகள் கொண்டாடப்படும் கலாசாரம் என்பன முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அதுமாத்திரமன்றி உலகளாவிய ரீதியில் உக்ரேன் மீது ரஷ்யாவும், பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேலும் கட்டவிழ்த்துவிட்டுள்ள மீறல்கள் குறித்தும், ஆப்கானிஸ்தான் மற்றும் மியன்மார் உள்ளிட்ட நாடுகளின் நிலைவரம் குறித்தும் நினைவுகூர்ந்த அவர், மீறல்கள் மற்றும் ஒடுக்குமுறைகள் மூலம் உலகநாடுகள் தமத அதிகாரத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்திக்கொள்ளும் போக்கினை அவதானிக்கமுடிவதாகவும், அமெரிக்கா அதற்கு ஆதரவாக செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் இந்த போக்கு 'புதிய ஒழுங்காக' மாறியிருப்பினும், அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனத் தெரிவித்த பொரெல்லோ, 'இலங்கையில் 2022 ஆம் ஆண்டு தோற்றம் பெற்ற பொருளாதார நெருக்கடியை அடுத்து உருவான அரகலய போராட்டத்தின் ஊடாக மேற்குறிப்பிட்டவாறான போக்குகளைத் தம்மால் ஏற்கமுடியாது என மக்கள் தெளிவாக வெளிப்படுத்தினர்.
இலங்கையில் மாத்திரமன்றி பங்களாதேஷ், நேபாளம், மடகஸ்கார் போன்ற பல நாடுகளில் இவ்வாறான போராட்டங்கள் எழுச்சியடைந்ததைப் பார்த்தோம். எனவே இவ்வாறான கட்டமைப்பை நேர்த்தியான புதியதொரு கட்டமைப்பின் ஊடாகப் பதிலீடு செய்வதற்கான வாய்ப்பு இலங்கைக்கு உண்டு' என்றார்.