துறைமுக நகர திட்டத்தினை இரத்துச்செய்ய அப்போதைய அரசு அழுத்தமளித்தது: முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர்
அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சேவையாற்றும் போது எந்நிலையிலும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

கொழும்பு துறைமுக நகர கருத்திட்டத்தை நானே இரத்துச் செய்தேன், பின்னர் நானே அத்திட்டத்தை மீள அமல்படுத்துவதற்கு அனுமதியளித்தேன். துறைமுக நகர திட்டத்தை இரத்து செய்வதற்கு எனக்கு அப்போதைய அரசாங்கத்தால் கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது என்று முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சேவையாற்றும் போது எந்நிலையிலும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.நான் பல அமைச்சுக்களின் செயலாளராக பதவி வகித்துள்ளேன்.அத்துடன் இறுதியில் ஜனாதிபதியின் செயலாளராக சேவையாற்றி ஓய்வுப்பெற்றேன்.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் எதிர்க்கட்சியாக செயற்பட்ட தரப்பினர்கள் கொழும்பு துறைமுக நகர ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதாக மக்களுக்கு வாக்குறுதியளித்தார்கள்.அந்த தரப்பினர் ஆட்சிக்கு வந்தவுடன் கொழும்பு துறைமுக நகர ஒப்பந்தத்தை இரத்துச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டார்கள்.
அச்சந்தர்ப்பத்தில் நான் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளராக இருந்தேன்.துறைமுக நகர ஒப்பந்தம் குறித்து அப்போதைய பிரதமரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன்.இந்த ஒப்பந்தத்தை முழுமையாக இரத்துச் செய்யாமல் காணப்படும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் திருத்தங்ளை மேற்கொள்ளலாம் என்று குறிப்பிட்டேன்.இருப்பினும் துறைமுக நகர ஒப்பந்தம் விடயத்தில் எனக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய அப்போதைய அரசாங்கம் கொழும்பு துறைமுக நகர ஒப்பந்தத்தை இரத்துச் செய்தது.இதனால் குறித்த நிறுவனத்துக்கு 80 மில்லியன் டொலர் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பல மாதங்களுக்கு பின்னர் கொழும்பு துறைமுக நகர ஒப்பந்தத்தை மீண்டும் அமல்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எனக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது.இதன் பின்னர் கொழும்பு துறைமுக நகர ஒப்பந்தம் மீண்டும் அமல்படுத்தப்பட்டது.
அமைச்சின் செயலாளராக பதவி வகித்த சந்தர்ப்பத்தில் பிரசுரிக்கப்பட்ட ஒரு வர்த்தமானியை இரத்துச் செய்யுமாறு அப்போதைய ஜனாதிபதி என்னிடம் குறிப்பிடம்டார்.அப்போது நான் முடியாது என்று குறிப்பிட்டேன்.அதனைத் தொடர்ந்து சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டேன். என்னை சுகாதார அமைச்சின் செயலாளராக நியமித்ததை அப்போதைய சுகாதார அமைச்சர் விரும்பாத காரணத்தால் அந்த நியமனத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.இதன் பின்னரே ஜனாதிபதி செயலாளராக அப்போதைய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டேன்.ஆகவே அரச சேவையாளர்கள் எந்நிலையிலும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.இல்லையேல் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.